நாட்டில் பதிவு செய்யப்படாமல் இயங்கும் இணையத்தளங்களை பதிவு செய்வதற்கும் சட்டவிரோதமான முறையில் செயற்படும் இணையத்தளங்கள் மீதும் நடவடிக்கை எடுக்குமாறு வடமாகாண சபை அவைத்தலைவர் சீ.வி.கே.சிவஞானம் ஊடக அமைச்சருக்கு அறிக்கை ஒன்றினை அனுப்பி வைத்துள்ளார்.
அவர் அந்த அறிக்கையில் குறிப்பிட்டுள்ளதாவது, அச்சு ஊடகங்களை ஒழுங்குபடுத்தும் சட்ட விதிகள் இந்த நாட்டில் அமுலில் இருப்பது போல இணையத் தளங்களை ஒழுங்குபடுத்தும் சட்டவிதிகள் போதுமானதாகவும், வலுவானதாகவும் இல்லாமையால் எண்ணிலடங்காத இணையத்தளங்கள் இந்த நாட்டுக்கு வெளியே இருந்து இயக்கப்படுவதும், பொறுப்புக்கூறும் கடமையோ, கட்டுப்பாடோ இல்லாமையால் செயற்படுகின்றன.
பொறுப்பற்ற விதத்திலும், கற்பனை அடிப்படையிலும், தனிமனித செயற்பாடு மற்றும் நடத்தை மீது அவதூறுச் செய்திகளையும், எமது கலாசாரத்திற்குப் பொருந்தாத வெளியீடுகளையும், இளம் சந்ததியினரைச் சீரழிக்கக்கூடிய வெளியீடுகளையும், ஆபாசப்படங்கள் மற்றும் காணொளிகளையும் இலகுவாகவும், சுதந்திரமாகவும் வெளியிடுகின்றமை காணக்கூடியதாக உள்ளது.
இது சமூக அச்சுறுத்தலாக அமைவதால் இலங்கை நாட்டின் எல்லைப் பரப்பினுள் வெளியிடப்படும் சகல இணையத்தளங்கள் மற்றும் தொலைக்காட்சி நிறுவனங்கள் முறைப்படியாக பதிவு செய்யப்படுவதற்கும், பொறுப்புக் கூறலுக்கு உட்படுத்தக்கூடிய சட்ட ஏற்பாடுகளை துரிதமாக மேற்கொள்ளுமாறும் பதிவு செய்யப்படாத மற்றும் விதிகளை மீறும் இணையத்தளங்களை தொழில் நுட்ப ரீதியாகத் தடைசெய்யும் அதிகாரத்தை ஏற்படுத்தும் சட்ட ஏற்பாடுகளை நடைமுறைப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் வெகுஜன ஊடக அமைச்சரை இச்சபை கோருகிறது’ என்றும் அந்த அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.
No comments
Post a Comment