Latest News

September 16, 2015

ஸ்ரீலங்கா தொடர்பான விசாரணை அறிக்கை இன்று வெளியீடு! தொடர்ந்து ஆணையாளரின் செய்தியாளர் மாநாடு!
by Unknown - 0

இலங்கை தொடர்பான ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் விசாரணை அறிக்கை இன்று வெளியிடப்படவுள்ளது. இன்று ஜீ.எம்.ரி நேரம் பிற்பகல் 2 மணிக்கு இலங்கை தொடர்பான அறிக்கையை ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் செய்யத் அல் ஹூசைன் வெளியிடவிருப்பதுடன், இது தொடர்பாக ஊடகவியலாளர் சந்திப்பொன்றையும் நடத்தவுள்ளார்.

இலங்கையில் நடத்தப்பட்ட விசாரணைகளில் கண்டறியப்பட்ட விடயங்கள் குறித்தும், அதில் முன்மொழியப்பட்டிருக்கும் பரிந்துரைகள் குறித்தும் ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் விளக்கமளிக்கவுள்ளார்.

அறிக்கை வெளியிடப்பட்டதும் ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் இணையத்தளத்தில் அறிக்கையை பார்வையிட முடியும்.

இலங்கையில் இடம்பெற்றதாகக் கூறப்படும் மனித உரிமைகள் மீறல் தொடர்பில் சர்வதேச விசாரணையொன்றை நடத்துவது தொடர்பான பிரேரணையொன்று கடந்த வருடம் மார்ச் மாதம் ஐ.நா.மனித உரிமைகள் பேரவையால் நிறைவேற்றப்பட்டிருந்தது.

இது தொடர்பான விசாரணைகளை நடத்துவதற்கு உரிய நடவடிக்கை எடுக்குமாறு ஆணையாளரிடம் கோரப்பட்டிருந்தது.

இந்த விசாரணைக்கு இலங்கையிலிருந்து பாரிய எதிர்ப்புத் தெரிவிக்கப்பட்டு வந்த போதும் விசாரணைகள் பூர்த்தி செய்யப்பட்டு அறிக்கை கடந்த மார்ச் மாதம் வெளியிடப்படவிருந்தது.

எனினும் புதிய அரசாங்கம் விடுத்த வேண்டுகோளுக்கு இணங்க செப்டெம்பர் மாதம் வரை அறிக்கை வெளியிடுவது ஒத்திவைக்கப்பட்டது.

இந்த நிலையிலேயே இன்று இலங்கை தொடர்பான அறிக்கை வெளியிடப்படவுள்ளது.

அதேநேரம், இலங்கைக்கு எதிரான அறிக்கைக்கு பதிலளிப்பதற்கு இலங்கை அரசாங்கத்துக்கு இன்று வரை அவகாசம் வழங்கப்பட்டிருப்பதாக ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளரின் பேச்சாளர் கூறியுள்ளார்.
« PREV
NEXT »

No comments