வடகிழக்கெங்கும் இனஅழிப்பிற்கான சர்வதேச நீதிவேண்டி போராடும் அமைப்புக்களை கட்டமைப்பது தொடர்பான முதலாவது கூட்டம் இன்று யாழ்ப்பணத்தில் உள்ள தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி தலைமை அலுவலகத்தில் இடம்பெற்றிருந்தது.
தமிழ் தேசிய மக்கள் முன்னணி தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலத்தை தேசிய இணைப்பாளராகவும், யாழ்.மாவட்ட பிரிவிற்கு கலைப்பீடாதிபதி வி.பி.சிவநாதன் தலைவராகவும் கொண்டு குழு அமைக்கப்பட்டுள்ளது.
இந்த அமைப்பின் உத்தியோகபூர்வ பெயர் அறிமுகம் மற்றும் முன்னெடுக்கப்படவுள்ள மக்கள் போராட்டங்கள் தொடர்பினில் நாளை வியாழக்கிழமை ஊடகவியலாளர் மாநாட்டின் உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்படவுள்ளது.
இந்தக் கலந்துரையாடலில் யாழ்.பல்கலைக்கழக ஆசிரியர் சங்கம், மாணவர் ஒன்றியம், சிவில் சமூகம், பொது அமைப்புக்கள், அரச சார்பற்ற அமைப்புக்களின் இணையம், வெகுஜன அமைப்புக்கள், காணாமல்போனோர் பாதுகாவலர் சங்கம், உள்ளுர் அமைப்புக்கள் மற்றும் மகளிர் அமைப்புக்கள் பங்குபற்றி இருந்ததுடன் இஅவர்கள் போராட்டத்துக்கு ஆதரவும் வழங்க முன்வந்துள்ளனர்.
வடகிழக்கின் அனைத்து மாவட்டங்கள் தோறும் இனஅழிப்பிற்கான சர்வதேச நீதிவேண்டி போராடும் கிளை அமைப்புக்களினை தோற்றுவிக்க முடிவெடுக்கப்பட்டுள்ளதுடன் இம்மாத இறுதியினில் அறிக்கை வெளியிடப்படும் வேளை மிகப்பெரும் ஜனநாயகப் போராட்டங்களை முன்னெடுக்க அனைத்து தரப்புக்களும் திடசங்கற்பம் பூண்டுள்ளன.
மேலும் இன அழிப்புக்கு சர்வதேச விசாரணை வேண்டும் என்று கோரி கையெழுத்து போராட்டம் ஒன்று தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் ஏற்பாட்டில் எதிர்வரும் வெள்ளிக்கிழமை யாழ்.பல்கலைக்கழகத்தினில் ஆரம்பமாகவுள்ளது.
No comments
Post a Comment