Latest News

September 20, 2015

தமிழக முதலமைச்சருக்கு பிரதமர் வி.உருத்திரகுமாரன் கடிதம் : சட்டமன்ற தீர்மானம் தீர்க்கதரிசனமான, துணிச்சலான முன்னெடுப்பு !
by Unknown - 0

சிறிலங்கா விவகாரத்தில் அனைத்துலக விசாரணiயிளை வலியுறுத்தி தமிழக சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் குறித்து தமிழக முதலமைச்சர் செல்வி ஜெயலலிதாவுக்கு நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதமர் வி.உருத்திரகுமாரன் அவர்கள் கடிதமொன்றினை அனுப்பி வைத்துள்ளார்.

தமிழ்நாட்டின் ஒட்டுமொத்தமான எழுச்சியான குரலாக பதிவு செய்யப்பட்டுள்ள இத்தீர்மானம், இந்திய மத்திய அரசினை சரியான முடிவினை எடுக்கத் தூண்டும் என உலகளாவிய தமிழ் மக்கள் நம்புகிறார்கள் என்றும், தமிழ்நாடடின் உணர்வுகளை நிராகரித்து விட்டு சிறிலங்கா அரசுக்கு ஆதரவான முடிவை எடுப்பது இந்திய மத்திய அரசுக்கு கடினமாக இருக்கும் என மக்கள் கருதுகிறார்கள் என்றும் அக்கடித்தில் பிரதமர் வி.உருத்திரகுமாரன் அவர்கள் தெரிவித்துள்ளார்.

கடித்தத்தின் முழுமையான விபரம் :

மாண்புமிகு தமிழ்நாடு; முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா அவர்களுக்கு,

இலங்கைத்தீவில் தமிழ் மக்கள் மீது சிறிலங்காஅரசு மேற்கொண்ட யுத்த மற்றும் மானுடத்துக்கு எதிரான குற்றங்கள், தமிழன அழிப்புக் குறித்து அனைத்துலக விசாரணை மேற்கொள்ளப்பட வேண்டும் எனவும், இது குறித்து இந்திய மத்திய அரசு உரிய நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என வலியுறுத்தியும் தங்களால் முன்மொழியப்பட்டு தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில் கடந்த செம்டம்பர் மாதம் 17 ஆம் திகதி ஏகமனதாக நிறைவேற்றப்பட்ட தீர்மானம் குறித்து நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் சார்பில் எமது மனநிறைவையும் பாராட்டுக்களையும் தங்களுக்குத் தெரிவித்துக் கொள்வதில் நாம் பெருமகிழ்வடையகிறோம்.

தங்களின் தீர்க்கதரிசனமான, துணிச்சலான இம் முன்னெடுப்பு தமிழ் மக்களுக்கு பெரும் மனோவலிமையினையும் உற்சாகத்தினையும் தந்திருப்பதோடு உலகெங்கும் வாழும் தமிழ் மக்கள் தங்கள் மீது கொண்டுள்ள நம்பிக்கையையும் அன்பையும் மேலும் ஆழப்படுத்தியுள்ளது. இவ் விடயத்தில் தமிழ்நாட்டின் ஒட்டுமொத்தமான எழுச்சியான குரல் இந்திய மத்திய அரசினை சரியான முடிவினை எடுக்கத் தூண்டும் என்று உலகளாவிய தமிழ் மக்கள் நம்புகிறார்கள். தமிழ்நாடடின் உணர்வுகளை நிராகரித்து விட்டு சிறிலங்கா அரசுக்கு ஆதரவான முடிவை எடுப்பது இந்திய மத்திய அரசுக்கு கடினமாக இருக்கும் என மக்கள் கருதுகிறார்கள்.

எனினும் நலன்களின் அச்சில் சுழலும் அனைத்துலக உலக ஒழுங்கில் சிறிலங்கா அரசுடன் நல்ல உறவுகளைப் பேணுவுதன் மூலம் தாம் விரும்புவதைச் சாதிக்க முடியும் மரபுவழிச் சிந்தனை கொண்ட இந்திய கொள்கை வகுப்பாளர்கள் தொடரந்தும் நம்பிச் செயற்பட்டு வருகிறார்கள். இந்திய நலன் குறித்து தொலைநோக்குப் பார்வையில் நோக்கின் இந்திய மத்திய அரசு சிறிலங்கா அரசின் பக்கம் நிற்காமல் தமிழ் மக்கள் பக்கம் நிற்பதுதான் சாதகமானது என்பதனை இந்தியக் கொள்கை வகுப்பார்களை ஏற்றுக் கொள்ள வைக்க வேண்டும். அப்போதுதான் அனைத்துலக விசாரணை விடயத்திலும், தமிழீழம் குறித்த பொதுவாக்கெடுப்பு போன்ற விடயங்களிலும் இந்திய மத்திய அரசு தமிழ் மக்களுக்குச் சாதகமான நிலைப்பாட்டை எடுக்க முன்வரும்.

இத்தகைய கருத்து மாற்றத்தை கொள்கை வகுப்பாளர்களிடம் மேற்கொள்ள மிகுந்த ஆளுமையுடைய அரசியற் தவைர்களால் மட்டுமே முடியும். தங்கள் உறுதியான ஆளுமை மிக்க தலைமைத்துவத்துடன் தமிழ்நாடு மக்கள் சார்பாக இந்தியப் பிரதமர் மோடி அவர்களுடன் இவ் விடயங்கள் குறித்து தொடர்ந்து வாதாடித் தமிழ் மக்களுக்குச் சார்பான நிலைப்பாட்டை இந்திய மத்திய அரசு எடுப்பதற்குத் தாங்கள் ஆவன செய்வீர்கள் என்பதே நமது மக்களின் எதிர்பார்ப்பாகும்.

மேலும், கடந்த இந்திய நாடாளுமன்றத் தேர்தலின் போது தாங்கள் முன்வைத்த அனைத்திந்திய அண்ணா திராவிடக் கழகத்தின் தேர்தல் அறிக்கையில் பின்வருமாறு குறிப்பிட்டிருந்தீர்கள்.

«இலங்கை உள்நாட்டுப் போரின் போது, சர்வதேச விதிகளை மீறி போர்க் குற்றங்களை நிகழ்த்தியவர்களை, இனப் படுகொலை செய்தவர்களை சர்வதேச நீதிமன்றம் முன் நிறுத்தி தண்டனை பெற்றுத் தரவும், இலங்கை வாழ் தமிழர்களுக்கு நியாயம் கிடைக்கும் வகையில் நடவடிக்கை எடுக்குமாறு ஐ.நா. சபையை வலியுறுத்தவும் அதிமுக உறுதி ஏற்றுள்ளது.

மேலும், தனி ஈழம் அமைந்திட இலங்கை வாழ் தமிழர்கள் மற்றும் உலகின் பல்வேறு பகுதிகளில் வாழும் இடம்பெயர்ந்த இலங்கைத் தமிழர்களுக்கு இடையே பொது வாக்கெடுப்பு நடத்தவும் வழி செய்யப்படும்.»

ஈழத் தமிழ் மக்களின் சுதந்திரவாழ்வு குறித்த இவ் விடயங்களைத் தேர்தல் கால வாக்குறுதியாக மட்டும் கருதாமல் இவை குறித்துத் தாங்கள் தொடர்ச்சியான அக்கறையுடன் செயற்படுவது தமிழ் மக்களுக்கு தங்கள் மீது மதிப்பையும் மரியாதையையும் அதிகரிக்கச் செய்துள்ளது.

தாங்கள் தமிழ்நாடு முதலமைச்சராக இருந்த காலத்தில் ஈழத் தமிழ் மக்கள் விடுதலையடைந்தார்கள் என வரலாறு பதிவு செய்யும் வகையில் தங்கள் செயற்பாடுகள் அமையும் என நாம் நம்புகிறோம்.
நன்றி, தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம்.

இவ்வாறு அக்கடித்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது

நாதம் ஊடகசேவை
« PREV
NEXT »

No comments