Latest News

September 16, 2015

இலங்கை போர்க்குற்றம்: சர்வதேச விசாரணை கோரி தமிழக சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றம்!
by Unknown - 0

இலங்கை போர்க்குற்றம் தொடர்பாக சர்வதேச விசாரணைக்கு வலியுறுத்தி தமிழக சட்டப்பேரவையில் முதல்வர் ஜெயலலிதா தீர்மானம் கொண்டு வந்தார்.

இத்தீர்மானம் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது. தீர்மானத்துக்கு திமுக உள்ளிட்ட பல்வேறு எதிர்க்கட்சிகளும் வரவேற்பு தெரிவித்தன.

தீர்மானத்தின் விவரம்:

* இலங்கையில் உள்நாட்டுப் போர் நடைபெற்ற போது சர்வதேச சட்டம் மற்றும் ஜெனிவா ஒப்பந்தத்தில் உள்ள போர் விதிமுறைகளை முற்றிலும் மீறி போர்க் குற்றங்கள் மற்றும் இனப் படுகொலை நிகழ்த்தியவர்கள் அனைவர் மீதும் சர்வதேச விசாரணை நடத்தும் வகையிலான வலுவான தீர்மானத்தினை இந்தியாவே ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைக் குழு முன்பு அமெரிக்கா உட்பட மற்ற நாடுகளுடன் இணைத்ந்துக் கொண்டு வர வேண்டும்.

* அமெரிக்கா இலங்கைக்கு ஆதரவான நிலையை எடுத்தால், அதனை மாற்ற இந்தியா ராஜதந்திரி ரீதியில் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவற்றை வலியுறுத்தி முதல்வர் பேரவையில் தீர்மானத்தை முன்வைத்தார். இத்தீர்மானம் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டது.

தீர்மானத்தை முன்மொழிந்து முதல்வர் பேசியதாவது:

இலங்கைத் தமிழர்களின் நீண்ட நெடிய உரிமைப் போராட்டத்தை உருக்குலைக்கம்வண்ணம், இலங்கை தமிழினத்தையே ஒழித்துக்கட்ட வேண்டும் என்ற நோக்கில் சதித் திட்டம் தீட்டி, அதனை வெற்றிகரமாக 2009 ஆம் ஆண்டு நிறைவேற்றியது இலங்கை அரசு.

2009 ஆம் ஆண்டு, இலங்கை உள்நாட்டுப் போர் உச்ச கட்டத்தில் இருந்த நிலையில் சர்வதேச சட்டம் மற்றும் ஜெனிவா ஒப்பந்தத்தில் உள்ள போர் விதிமுறைகளை முற்றிலும் மீறி, லட்சக்கணக்கான அப்பாவி இலங்கைத் தமிழர்களைக் கொன்று குவித்து, ஓர் இனப் படுகொலையை இலங்கை அரசாங்கம் நடத்தியது.

இலங்கையில் உள்நாட்டு போர் நடைபெற்ற போது, மனித உரிமை மீறல் உட்பட பல்வேறு மனிதாபிமானமற்ற செயல்கள் அடங்கிய குற்றங்களை இலங்கை அரசு நிகழ்த்தியதாக ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் செயலாளரால் நியமிக்கப்பட்ட குழு கண்டறிந்தது.

இதன் அடிப்படையில், இலங்கையில் போர்க் குற்றங்கள் நிகழ்த்தியவர்களை போர்க் குற்றவாளிகள் என பிரகடனப்படுத்த ஐக்கிய நாடுகள் சபையை வலியுறுத்தவும்; இலங்கை முகாம்களில் இருந்த தமிழர்கள் அனைவரும் தங்களது சொந்த இடங்களுக்கு திரும்பி சிங்களர்களுக்கு இணையாக கண்ணியமாக வாழ வகை செய்வதோடு அனைத்து குடியுரிமைகளையும், தமிழர்கள் பெறும் வரையில், மற்ற நாடுகளுடன் இணைந்து இலங்கை அரசின் மீது பொருளாதாரத் தடை விதிக்கவும் மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி இந்த மாமன்றத்திலே 8.6.2011 அன்று தமிழக அரசு சார்பில் ஒரு தீர்மானம் கொண்டு வரப்பட்டு ஏகமனதாக நிறைவேற்றப்பட்டது.

இதனைத் தொடர்ந்து, இலங்கை நாட்டை "நட்பு நாடு" என்று சொல்வதை இந்திய அரசு நிறுத்திக் கொள்ள வேண்டும் என்றும்; இலங்கை இனப் போரின் போது நிகழ்த்தப்பட்ட இனப் படுகொலை மற்றும் போர்க் குற்றங்கள் குறித்து சுதந்திரமான, நியாயமான சர்வதேச புலன் விசாரணை நடத்திடவும்; இந்த சர்வதேச விசாரணையின் அடிப்படையில், போர்க் குற்றம் நிகழ்த்தியவர்கள், சர்வதேச நீதிமன்றம் முன்பு நிறுத்தப்பட்டு, அவர்களுக்கு உரிய தண்டனை பெற்றுத் தந்திடவும்; தமிழர்கள் மீதான அடக்குமுறையை இலங்கை அரசு நிறுத்தும் வரை இலங்கை நாட்டின் மீது பொருளாதாரத் தடையை விதித்திடவும்; ஈழத் தமிழர்களின் எதிர்கால நலனைக் கருத்தில் கொண்டு "தனி ஈழம்" குறித்து இலங்கை வாழ் தமிழர்களிடமும், இலங்கையிலிருந்து இடம் பெயர்ந்து பிற நாடுகளில் வாழும் தமிழர்களிடமும் பொது வாக்கெடுப்பு நடத்திடவும் ஐக்கிய நாடுகள் சபையின் பாதுகாப்புக் குழுவில் தீர்மானத்தினைக் கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் மத்திய அரசை வலியுறுத்தி தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில் கடந்த 27.3.2013 அன்று தீர்மானம் கொண்டு வரப்பட்டு ஏகமானதாக நிறைவேற்றப்பட்டது.

இது மட்டுமல்லாமல், இலங்கை நாட்டில் 2013-ஆம் ஆண்டு நவம்பர் மாதம் நடைபெற்ற வெளியுறவுத் துறை அமைச்சர்களுக்கான கூட்டம் மற்றும் காமன்வெல்த் கூட்டமைப்பின் உச்சி மாநாடு ஆகியவற்றை இந்தியா முற்றிலும் புறக்கணிக்க வேண்டும்; பெயரளவிற்குக் கூட இந்தியா சார்பில் பிரதிநிதிகள் யாரும் கலந்து கொள்ளக் கூடாது; இது குறித்த இந்தியாவின் முடிவை உடனடியாக இலங்கை நாட்டிற்கு தெரியப்படுத்த வேண்டும்; இலங்கைத் தமிழர்கள் சுதந்திரமாகவும், சிங்களர்களுக்கு இணையாகவும் வாழ இலங்கை அரசு நடவடிக்கை எடுக்கும் வரை காமன்வெல்த் கூட்டமைப்பில் இருந்து இலங்கை நாட்டை தற்காலிகமாக நீக்கி வைப்பதற்கான, நடவடிக்கையை எடுக்க வேண்டும் என்று, இந்தியப் பேரரசை வலியுறுத்தும் தீர்மானம் இந்த மாமன்றத்திலே 24.10.2013 அன்று கொண்டு வரப்பட்டு ஏகமனதாக நிறைவேற்றப்பட்டது.

இந்தத் தீர்மானத்திற்கு எதிராக அப்போதைய மத்திய அரசு செயல்பட்ட போது, மத்திய அரசின் நடவடிக்கைக்கு வருத்தம் தெரிவித்து 12.11.2013 அன்று இதே பேரவையிலே ஒரு தீர்மானம் கொண்டுவரப்பட்டு நிறைவேற்றப்பட்டது.

இது மட்டுமல்லாமல், இலங்கை நாட்டைச் சேர்ந்த கிரிக்கெட் வீரர்கள், நடுவர்கள் மற்றும் அதிகாரிகளை உள்ளடக்கிய ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டிகள், தமிழ்நாட்டில் நடத்தப்படக் கூடாது என்றும்; தமிழ்நாட்டில் நடக்கவிருக்கும் விளையாட்டுப் போட்டிகளில் இலங்கை நாட்டைச் சேர்ந்த வீரர்கள், நடுவர்கள் மற்றும் அதிகாரிகளை அனுமதிக்க வேண்டாம் என்றும் ஐ.பி.எல். அமைப்பாளர்களை வற்புறுத்துமாறு இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்திற்கு மத்திய அரசு அறிவுரை வழங்க வேண்டும் என்று நான் அப்போதைய பாரதப் பிரதமரை 26.3.2013 ம்ஷிகுதுஙீஸி கடிதம் வாயிலாக கேட்டுக் கொண்டேன். இலங்கை நாட்டைச் சேர்ந்த கிரிக்கெட் வீரர்கள், நடுவர்கள் மற்றும் அதிகாரிகள் பங்கேற்க மாட்டார்கள் என்ற உத்தரவாதத்தை ஐ.பி.எல். அமைப்பாளர்கள் அளித்தால் மட்டுமே ஐ.பி.எல். விளையாட்டுப் போட்டிகள், தமிழ்நாட்டில் நடைபெற தமிழக அரசு அனுமதிக்கும் என்றும் அந்தக் கடிதத்தில் தெரிவித்திருந்தேன். எனது வேண்டுகோளினைப் பரிசீலித்த ஐ.பி.எல். ஆட்சிமன்றக் குழு, சென்னையில் நடைபெற இருக்கும் விளையாட்டுப் போட்டிகளில் இலங்கை நாட்டைச் சேர்ந்த வீரர்கள் பங்கேற்க மாட்டார்கள் என்ற முடிவை எடுத்தது. இது தமிழக அரசின் வற்புறுத்தலுக்கு கிடைத்த வெற்றி.

இவற்றிற்கெல்லாம் முத்தாய்ப்பாக, 2012-ஆம் ஆண்டு இலங்கை அரசுக்கு எதிராக ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைக் குழு முன்பு அமெரிக்கா கொண்டு வந்த தீர்மானத்திற்கு ஆதரவாக வாக்களிக்குமாறு, அப்போதைய மத்திய அரசை தமிழக அரசு வலியுறுத்திக் கேட்டுக்கொண்டது.

2013 ஆம் ஆண்டு ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைக் குழு முன்பு தீர்மானம் ஒன்றை அமெரிக்கா கொண்டு வந்த போது, அதற்கு வலுவூட்டும் விதமாக இந்தியப் பேரரசு என்னென்ன திருத்தங்களை அளிக்க வேண்டும் என்பதைக் கோடிட்டுக் காட்டி அப்போதைய பாரதப் பிரதமருக்கு நான் கடிதம் எழுதினேன். மேலும், 2013 ஆம் ஆண்டு மேதகு ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதத்திற்குப் பதிலளித்துப் பேசிய போது, ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைக் குழுக் கூட்டத்தில் இலங்கைக்கு எதிரான தீர்மானத்தை அமெரிக்கா இந்த ஆண்டு, கொண்டு வருவது ஒரு புறம் இருந்தாலும், தமிழர்கள் நலன் கருதி தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தின் அடிப்படையில் ஒரு தீர்மானத்தைக் கொண்டு வந்து அதை மற்ற நாடுகளுடன் இணைந்து நிறைவேற்ற வேண்டும் என்று மத்திய அரசை தமிழக அரசு கேட்டுக் கொண்டது. ஆனால், இவற்றிற்கெல்லாம் அப்போதைய மத்திய அரசு செவிசாய்க்கவில்லை.

இதன் விளைவாக, தற்போது நிலைமை தலைகீழாக மாறிவிட்டது. இலங்கை உள்நாட்டுப் போரின் போது நிகழ்த்தப்பட்ட மனித உரிமை மீறல்கள் மற்றும் இனப்படுகொலை குறித்து இலங்கை நாட்டுக்கு எதிராக ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைக் குழு முன்பு, எந்த அமெரிக்கா தீர்மானம் கொண்டு வந்ததோ, அந்த அமெரிக்கா தற்போது இலங்கை போர்க் குற்றத்திற்கு உள்நாட்டு அளவில், அதாவது இலங்கை அரசே குற்றவாளிகளை விசாரித்து நடவடிக்கை எடுத்தால் போதும் என்ற கூற்றை தனது வெளியுறவுத் துறை துணைச் செயலாளர் மூலம் முன் வைத்திருக்கிறது. இதற்கேற்றாற் போல், ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைக் குழு முன்பு ஒரு தீர்மானத்தினை அமெரிக்கா கொண்டு வர இருப்பதாகவும் தகவல்கள் வருகின்றன. இது இயற்கை நீதிக்கு முரணானதாகும்.

பிரதமர் மோடி என்னை 7.8.2015 அன்று எனது இல்லத்தில் சந்தித்தபோது, 19 கோரிக்கைகள் அடங்கிய, மனு ஒன்றினை அளித்தேன். அதில் கோரிக்கை எண் 17-ல், இலங்கை உள்நாட்டு․ போரின் போது, அப்பாவி இலங்கைத் தமிழர்களை கொன்று குவித்து ஓர் இனப் படுகொலையை நிகழ்த்தியவர்களை சட்டத்தின் முன் நிறுத்தி தண்டனை பெற்று தர, சர்வதேச அமைப்பான ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைக் குழு மூலம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக் கொண்டுள்ளேன்.

10.2.2015 அன்று, இலங்கை வடக்கு மாகாண சபையில், இலங்கை தமிழர்களுக்கு எதிராக இனப்படுகொலை நடத்தப்பட்டது குறித்து இலங்கை அரசு விசாரணை மேற்கொண்டால் நீதி கிடைக்காது என்பதால், சர்வதேச விசாரணை நடத்த․பட வேண்டும் என்று வலியுறுத்தி இலங்கை வடக்கு மாகாண முதலமைச்சர், . விக்னேஸ்வரனால் கொண்டு வரப்பட்ட தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

இதனைத் தொடர்ந்து, இலங்கை நாட்டில் 21.2.2002 முதல் 15.11.2011 வரை இலங்கைத் தமிழர்கள் மீது நிகழ்த்தப்பட்ட மனித உரிமை மீறல்கள் குறித்து சுதந்திரமான, சர்வதேச விசாரணை முறை மேற்கொள்ளப்பட வேண்டும் என இலங்கை வடக்கு மாகாண சபையின் தலைவர் மற்றும் உறுப்பினர்கள் அளித்த அறிக்கைகளின் அடிப்படையிலும், இலங்கை வடக்கு மாகாணத்தை தங்களுடைய தாய் வீடாகக் கருதும் பாதிக்கப்பட்டவர்களின் கோரிக்கையை ஏற்கும் வண்ணமும், மனித உரிமை மீறல்களால் பாதிக்கப்பட்டவர்கள் உலகெங்கும் பரவி இருப்பதைக் கருத்தில் கொண்டும், சர்வதேச சமுதாயம் மற்றும் ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைக் குழுவில், உறுப்பினர்களாக உள்ள நாடுகளின் கவனத்தை ஈர்க்கும் வகையில், 1.9.2015 அன்று இலங்கை வடக்கு மாகாண சபை ஒரு தீர்மானத்தை நிறைவேற்றியது.

அத்தீர்மானத்தில், சர்வதேசக் குற்றங்கள் புரிந்தவர்கள் மீது இலங்கையிலேயே விசாரணை மேற்கொள்வது என்பது நீதியை பரிகசிப்பது போன்ற செயல் என்றும், இலங்கை மக்களை காத்து அவர்களுக்கு சேவை புரிய வேண்டிய இலங்கை நாட்டின் முக்கியமான தூண்கள் இலங்கை அரசின் மனித உரிமை மீறல்களை சுட்டிக்காட்டி நியாயம் வழங்க தவறிவிட்டன என்றும் தெரிவித்து, நீதி கிடைக்கும் வகையிலும், அர்த்தமுள்ள இணக்கப்பாதையில் இலங்கை நாடு செல்லும் வகையிலும், இலங்கை தமிழர்களுக்கு எதிராக நிகழ்த்தப்பட்ட, சர்வதேச குற்றங்கள் குறித்து விசாரணை மேற்கொள்ள சர்வதேச தீர்ப்பாயம் அமைக்க வேண்டும் என்று சர்வதேச சமுதாயத்தை கேட்டுக் கொள்வதோடு, சர்வதேச சமுதாயத்துடன் இணைந்து பணியாற்ற இலங்கை நாட்டு தலைவர்கள் முன் வர வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டுள்ளது.

தற்போது ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைக் குழுக் கூட்டம் செப்டம்பர் 14 முதல் அக்டோபர் 2 வரை நடைபெறுகிறது.

வரும் 30-ம் தேதி இலங்கையில் இணக்கத்தை ஊக்குவித்தல் மற்றும் பொறுப்புடமை பற்றிய மனித உரிமை குழுவின் ஆணையர் அறிக்கை பரிசீலிக்கப்பட்டு விவாதிக்கப்படும்.

வரைவு தீர்மானத்தின் மீது நடவடிக்கை 1.10.2015 மற்றும், 2.10.2015 ஆகிய தேதிகளில் எடுக்கப்படும் என ஐக்கிய நாடுகளுக்கான மனித உரிமை குழு தெரிவித்துள்ளத்ய்.

இலங்கை உள்நாட்டுப் போரின்போது நடைபெற்ற மனித உரிமை மீறல்கள் குறித்த ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைக் குழுவினுடைய அறிக்கை மீது இலங்கையில் கருத்து கேட்கப்பட்டு இருப்பதாக ஊடகங்களில் செய்திகள் வந்துள்ளன. இலங்கை அரசு அளிக்கும் பதிலின் அடிப்படையில் இலங்கையே போர்க் குற்றங்கள் பற்றி விசாரித்துக் கொள்ளலாம் என்ற ஒரு தீர்மானம் ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைக் குழுவில் நிறைவேற்றக் கூடிய சூழல் தற்போது எழுந்துள்ளது. இதனை தடுத்து நிறுத்த வேண்டிய கடமை இந்தியப் பேரரசுக்கு உண்டு.இந்தச்சூழ்நிலையில், போர்க் குற்றங்கள் நிகழ்த்தியோர் மீது சர்வதேச விசாரணை மேற்கொள்ள தேவையான நடவடிக்கையை ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைக் குழு மூலம் இந்தியப் பேரரசு எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி தீர்மானம் இந்த மாமன்றத்திலே நிறைவேற்றப்படுவது அவசியம் என நான் கருதுகிறேன். இதைத் தான் ஒட்டுமொத்த தமிழினமும் எதிர்பார்க்கிறது.

எனவே, இதற்கு செயல்வடிவம் கொடுக்கும் வகையில், தீர்மானத்தினை தமிழ்நாடு அரசின் சார்பில் நான் முன்மொழிகிறேன்.

இவ்வாறு முதல்வர் பேசினார்.
« PREV
NEXT »

No comments