Latest News

September 12, 2015

தமிழகத்தில் 234 தொகுதிகளிலும் பா.ம.க. தனித்துப் போட்டி: டாக்டர் ராமதாஸ் அறிவிப்பு
by admin - 0

மதுரை: தமிழகத்தில் 2016ல் நடைபெற உள்ள சட்டசபைத் தேர்தலில் 234 தொகுதிகளிலும் பா.ம.க. தனித்துப் போட்டியிடும் என்று அந்தக் கட்சியின் நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அறிவித்துள்ளார். தேர்தல் நேரத்தில் பா.ம.க. எங்கள் அணிக்கு வரும் என, பாஜகவின் மூத்த தலைவர் இல.கணேசன் கூறி இருப்பது நிறைவேறாத ஒன்றாகும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். 

மதுரையில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய ராமதாஸ் கூறியதாவது: விவசாயிகளுக்கு பெரும் அச்சுறுத்தலாக இருந்த நிலம் கையகப்படுத்தும் சட்டம் கைவிடப்படும் என பிரதமர் அறிவித்தார். 

இதனால் விளை நிலத்திற்கான ஆபத்து விலகிவிட்ட நிலையில் அதைவிட பெரிய ஆபத்து ஏற்பட்டு உள்ளது. மத்திய திட்ட நிதி ஆணைய துணை தலைவர் கூறும்போது, தேசிய அளவில் நிலம் கையகப்படுத்தும் திட்டம் கைவிடப்பட்டு விட்டதால் மாநிலங்கள் தங்கள் இஷ்டம்போல் தனித்தனியே நிலம் கையப்படுத்தும் திட்டத்தை நிறை வேற்றிக் கொள்ளலாம் என அறிவித்திருக்கிறார். தமிழக அரசு சில திட்டங்களுக்காக நிலங்களை கையகப்படுத்தி உள்ளது. இது சிறப்பாக இருப்பதாகவும், அதைபோல மற்ற மாநிலங்களும் இதனை நிறைவேற்ற வேண்டும் என்றும் அவர் கூறி கூறி இருக்கும் கருத்து மிகவும் ஆபத்தானதாகும்.

தொலைநோக்குத்திட்டம் 

தமிழகம் முதன்மை மாநில மாக்கப்பட, தொலைநோக்கு திட்டம் 2020 என்ற திட்டம் கொண்டுவரப்பட்டது. 2012 மார்ச் மாதம் இந்த திட்டம் வெளியிடப்பட்டது. இந்த திட்டத்தை நிறைவேற்ற ரூ.15 லட்சம் கோடி முதலீடு செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது. அறிவிக்கப்பட்ட நாள் முதல் இன்றுவரை ஆண்டுகளில் 4.77 லட்சம் கோடி முதலீடு செய்யப்பட்டு இருக்க வேண்டும். ஆனால் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.



முதல்வர் வெளியிடுவாரா? 

உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் பேசிய முதல்வர் 217 கட்டமைப்பு திட்டங்களில் 84 திட்டப் பணிகள் தொடங்கி விட்டதாக அறிவித்திருக்கிறார். இது உண்மை என்றால் அவை எவையெவை? இத்திட்டத்திற்கு எத்தனை கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. பட்ஜெட்டில் இருந்து ஒதுக்கப்பட்டுள்ளதா? என்பதை அவர் வெளியிட வேண்டும்.

வேலைவாய்ப்பு 

தென்மாவட்டங்களில் தொழிற்சாலைகள் இல்லாத நிலையில் புறம்போக்கு நிலங்களே உள்ளது. அங்கு தொழிற்சாலைகளை அமைக்க வேண்டும். இதனால் தென்மாவட்டங்களை சேர்ந்தவர்களுக்கு அதிக வேலைவாய்ப்பு ஏற்படும்.

234 தொகுதிகள் 

தமிழகத்தில் தி.மு.க., அ.தி.மு.க.வுக்கு மாற்று அணியாக பா.ம.க. உள்ளது. எங்கள் தலைமையை ஏற்று யார் வந்தாலும் நாங்கள் வரவேற்போம். தேர்தல் நேரத்தில் பா.ம.க. எங்கள் அணிக்கு வரும் என, இல.கணேசன் கூறி இருப்பது நிறைவேறாத ஒன்றாகும். 234 தொகுதிகளிலும் நாங்கள் தனித்துப் போட்டியிடுவோம். மக்கள் மாற்றத்தை விரும்புகிறார்கள். அதனை பா.ம.க. நிறைவேற்றும்.




« PREV
NEXT »

No comments