தமிழீழ விடுதலைப் புலிகளின் உயிருடன் இருக்கும் அனைத்து உறுப்பினர்களுக்கு எதிராகவும் சட்ட நடவடிக்கை எடுக்கும் முயற்சியில் ஜாதிக ஹெல உறுமய கட்சி ஈடுபட்டுள்ளது. புனவர்வாழ்வு அளிக்கப்பட்ட 12000 முன்னாள் போராளிகள், புனர்வாழ்வு அளிக்கப்படாது உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் வாழ்ந்து வரும் புலி உறுப்பினர்களுக்கு எதிராக வழக்குத் தொடர்ந்து சட்ட நடவடிக்கை எடுக்கக் கூடிய சாத்தியங்கள் குறித்து கட்சியின் சட்டத்தரணிகள் தீவிரமாக ஆராய்ந்து வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.
மனித படுகொலைகள், சொத்துக்களுக்கு சேதம் விளைவித்தமை, சமாதானத்தை சீர்குலைத்தமை, சிறுவர் போராளிகளை படையில் இணைத்தமை, அப்பாவி பெதுமக்களை மனித கேடயங்களாக பயன்படுத்தியமை, அரசியல்வாதிகள் பொதுமக்களை குண்டு வைத்து துப்பாக்கிச் சூடு நடத்தியும் கொலை செய்தமை உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுக்களின் அடிப்படையில் தமிழீழ விடுதலைப் புலி உறுப்பினர்களுக்கு எதிராக வழக்குத் தொடரத் தீர்மானிக்க்பபட்டுள்ளது.
தமிழீழ விடுதலைப் புலிகளின் முன்னாள் சர்வதேச விவகாரப் பொறுப்பாளர் குமரன் பத்மநாதன் முதல் சாதாரண முன்னாள் போராளிகள் வரையில் அனைவருக்கு எதிராகவும் வழக்குத் தொடர்ந்து சட்ட நடவடிக்கை எடுக்கத் திட்டமிட்டுள்ளது.
ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையில் இலங்கை அரச படையினர் குற்றச் செயல்களில் ஈடுபட்டதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. இந்த நடவடிக்கைக்கு பதிலடியாக தமிழீழ விடுதலைப் புலிகளின் முன்னாள் போராளிகளுக்கு எதிராக வழக்குத் தொடர்வதற்கு ஜாதிக ஹெல உறுமய கட்சி தீர்மானித்துள்ளது.
No comments
Post a Comment