Latest News

September 18, 2015

ரக்ன லங்கா நிறுவனத்திற்கு ஆயுதங்களை வழங்கியதில் முறைகேடு இருந்ததாக சாட்சியம்
by Unknown - 0

இலங்கையில் கடந்த ராஜபக்ஷ ஆட்சிக் காலத்தில் பாதுகாப்பு அமைச்சின் கீழ் அமைக்கப்பட்ட ரக்ன லங்கா என்ற பாதுகாப்பு நிறுவனமொன்றுக்கு ஆயுதங்களை வழங்கியதில் முறைகேடு நடந்ததாக, ஊழல் விவகாரங்கள் தொடர்பாக ஆராயும் ஜனாதிபதி ஆணைக்குழு முன்பாக சாட்சியம் அளிக்கப்பட்டுள்ளது.

அந்த ஆணைக் குழு முன்பாக சாட்சியளித்த பாதுகாப்பு அமைச்சின் முன்னாள் கூடுதல் செயலாளர் தமயந்தி ஜயரத்ன இதனை தெரிவித்துள்ளார்.

முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபய ராஜபக்ஷவின் தலைமையில் இயங்கிவந்த ரக்ன லங்கா நிறுவனத்திற்கு, பாதுகாப்பு அமைச்சகத்திற்குச் சொந்தமான 3,473 ஆயுதங்கள் வழங்கப் பட்டிருந்ததாக ஆணைக் குழு முன்பு தெரிவிக்கப்பட்டது.

அதில் 89 ஆயுதங்கள் மாத்திரமே சட்டபூர்வமாக அந்த நிறுவனத்திற்கு வழங்கப்பட்டதாக தனது சாட்சியத்தில் தமயந்தி ஜயரத்ன கூறினார்.

இதேவேளையில், வாக்குமூலமொன்றை அளிப்பதற்காக முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தாபய ராஜபக்ஷ இன்று மீண்டும் ஜனாதிபதி ஆணைக் குழு முன்பு ஆஜரானார்.

கடந்த ஜனாதிபதி தேர்தலின்போது, ரக்ன லங்கா நிறுவனத்தில் பணிபுரியும் ஊழியர்களை தேர்தல் பிரச்சார நடவடிக்கைகளில் ஈடுபடுத்தினார் என்ற குற்றச்சாட்டு தொடர்பாக வாக்கு மூலமொன்றை பெற்றுக்கொள்வதற்காகவே முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபய ராஜபக்ஷ அழைக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
« PREV
NEXT »

No comments