Latest News

September 14, 2015

இந்திய இராணுவமும், தலைவரின் தீர்க்க தரிசனமும்..!!!-ஈழத்து துரோணர்
by admin - 0

1970களின் இறுதியில் தலைவர் ஆயுதப் போராட்டத்தை ஆரம்பித்த போது அவருடன் இணைந்த போராளிகளுக்கு தலைவரே நேரடியாக பயிற்சிகளை வழங்கினார் என்பது வரலாறு. அன்றைய காலகட்டத்தில் வன்னியில் சில பண்ணைகளை உருவாக்கி விவசாயம் செய்யும் போர்வையில் பயிற்சிகளுடன் கூடிய, உருமறைப்பில் பயிற்சிகளை அவர்கள் பெற்றனர்.


உலகில் தோன்றிய கெரில்லாப் போராட்ட தலைவர்களுக்கு, இராணுவக் கல்வியும், உத்திகளும், போர்த்தளபாட உதவிகளும் ஏதோ ஒரு வகையில் இன்னொரு நாட்டிடம் இருந்து கிடைக்கப் பெற்றிருந்தது. ஆனால், இது எதுவுமே கிடைக்காது, இவைகளை தனது சிந்தனைகளினூடே போராளிகளை உருவாக்கிச் செயற்படுத்தியமையானது தலைவரின் தீர்க்கதரிசனத்தையே காட்டுகின்றது.

அதன் ஒரு வெளிப்பாடே தலைவரின் பண்ணை முகாங்கள் ஆகும். இந்த பண்ணைகளில் இருந்து, தலைவரிடம் நேரடியாகப் பயிற்சி பெற்றவர்களே 1983இல் திருநெல்வேலியில் கண்ணிவெடியுடன் கூடிய பதுங்கித் தாக்குதலை மேற்கொண்டனர். சிங்கள இராணுவத்திற்கு எதிராக பெரும் அழிவைக் கொடுத்த, புலிகளின் கொமாண்டோப் பாணியிலான முதலாவது பெரும் தாக்குதல் இது தான்.

இதற்கு முன்னமும் இது போல சில தாக்குதல் நடந்த போதும் இதுவே பெரும் சேதத்தை உண்டு பண்ணியது. இதன் தாக்கம் அன்றைய நேரத்தில் தென்னிலங்கையை உலுக்கியிருந்தது. அதன் வெளிப்பாடே சிங்கள பேரினவாதத்தால் திட்டமிட்டு இனக்கலவரமாக உருவாக்கப்பட்டது. அதன் தாக்கம் தமிழ் இளைஞர்களுக்கு தனி நாட்டின் அவசியத்தை உணர்த்தியது. பல்கலைகழகங்களின் பட்டப்படிப்பைக் கூட தூக்கியெறிந்துவிட்டு பல ஆயிரம் போராளிகள் தனிநாடு வேண்டி போராட்டத்தில் குதித்தனர்.

அந்த நேரத்தில் தான் இந்திய அரசும் புலிகளுக்கு இராணுவ பயிற்சிகள் வழங்க முன் வந்திருந்தது. மாற்று இயக்கங்கள் இந்திய அரசு அழைத்தவுடன் பயிற்சிக்கு சென்ற போதும், சிறிது கால அவகாசத்தின் பின்னே இறுதியாகத்தான் அந்த பயிற்சி திட்டத்தில் புலிகள் இணைந்தனர். ஏலவே ஈழ அமைப்புகளுக்கும், இந்திய அரசு இராணுவத்தின் "அடிப்படைப் பயிற்சியையே" வழங்கி இருந்தது. இது இந்திய அரசின் கபட நோக்கத்தில் அமைந்திருந்தது.

ஆனபோதும் பின்னைய நாட்களில் வேறுபட்ட பல புதிய உத்திகளுடன் கூடிய பயிற்சிகளை புலிகளே உருவாக்கினர் என்பதும் வரலாறு.

இந்த நேரத்தில்தான் தலைவர் புதிதாய் இணைந்த அனைத்துப் போராளிகளையும் இந்தியாவிற்கு பயிற்சிக்கு அனுப்பாமால் அங்கு பயிற்சி பெற்றவர்களை கொண்டு 1986, 1987களின் பழைய பூங்கா (Old Park) சாவா, கிளி (மன்னார்) போன்ற பயிற்சி முகாங்களை உருவாக்கி புதிய போராளிகளுக்கு பயிற்சிகள் கொடுக்கப்பட்டது. அதற்குக் காரணம் இந்தியாவில் பயிற்சி பெற்றவர்கள் பற்றிய தகவல், இந்திய இராணுவத்திடம் சேகரிக்கப்பட்டிருக்கும், அதனால் அவர்களது பலம், பலவீனம், போராளிகளின் தொகை என்பவற்றுடன், புலிகளை ஒட்டு மொத்தமாக அடகு வைக்க தலைவர் விரும்பவில்லை.

ஏனெனில், இந்திய அரசை தலைவர் முழுதாக நம்பவில்லை. அதன் வெளிப்பாடே இந்தப் புதிய பயிற்சி முகாங்கள் ஆகும். இது தலைவரின் முக்கிய இராணுவ நகர்வே ஆகும். அத்தோடு இந்திய அரசின் ஆயுதங்களை மட்டும் நம்பி இருக்காது, அவர்களுக்குத் தெரியாமலேயே ஆயுதங்கள் கொள்முதல் செய்யப்பட்டு தமிழீழத்திற்கு கொண்டு வரப்பட்டிருந்தது.

இப்படியே காலம் சுழன்றது. 1987இல் தலைவரை இலக்கு வைத்து வடமராட்சி நோக்கி இலங்கை இராணுவம் "ஒப்ரேசன் லிபரேசன்" என்னும் இராணுவ நடவடிக்கை மூலம் வடமராட்சியின் பெரும் பகுதியை வல்வளைப்பு செய்திருந்தது.

அதற்கு எதிர் நடவடிக்கையாக தலைவரின் நெறிப்படுத்தலில், முதலாவது கரும்புலி கப்டன் மில்லர் அவர்கள் ஊடாக புதிய போர் உத்தியொன்றை அறிமுகப்படுத்தி நெல்லியடி முகாமை தகர்த்து பெரும் உயிர் அழிவை உண்டாக்கி சிங்கள இராணுவத்தை விரட்ட ஆரம்பித்த போது, போராட்டம் அடுத்த கட்ட பரிமாணத்தினுள் போவதைக் கண்ட இந்திய அரசு அழையா விருந்தாளியாக தமிழர் வாசலில் வந்து நின்றனர்.

ஜெ. ஆர். ருடன் போட்ட ஒப்பந்தத்திற்கு இணங்க, ராஜீவ் காந்தி தனது கூலிப்படையை அனுப்பி தான் விரும்பிய தீர்வை திணிக்க முற்பட்டார். அதன் ஒரு கட்டமாக புலிகளிடமிருந்து அச்சுறுத்தல் மூலமாக ஆயுதத்தை களைய முற்பட்டது. ஆயுத ஒப்படைப்புக்கான நாளும் குறிக்கப்பட்டதும், உடனே தலைவர் தனது நம்பிக்கைக்குரிய தளபதிகளூடாக தமிழர் கடைகளில் இருந்த பொலீத்தீன், பெரிய பிளாஸ்ட்ரிக் கான் மற்றும் கிரீஸ் போன்றவைகள் கொள்முதல் செய்யப்பட்டு, இரவோடு இரவாக,
நவீன ஆயுதங்கள் அனைத்தும் புலிகளின் ஆதரவாளர் வீடுகளில் புதைக்கப்பட்டது.

(இது பற்றி அறிந்த ரோ புலிகளைத் தொடர்பு கொண்டு கேட்ட போது மழுப்பலான பதில் ஒன்றை வழங்கி அவர்கள் நம்பவைக்கப்பட்டனர்) ஆயுத கையளிப்பின்போது இந்திய அரசால் கொடுக்கப்பட்ட ஆயுதங்களுடன், பாவனைக்கு உதவாத ஆயுதங்களும் கொடுக்கப்பட்டு ஆயுத ஒப்படைப்பு, இந்திய அரசின் "மனநிறைவுடன் இனிதே நிறைவேறியிருந்தது" அன்று.

அதன் பின் புலிகளின் இராணுவப்பலம் ஒடுக்கப்பட்டதாக எண்ணிய இந்திய "ரோ " அமைப்பு புலிகளுக்கு எதிராக காய்களை நகர்த்தியது. அதன் வெளிப்பாடாக புலிகளால் தடை செய்யப்பட்ட அமைப்புகளுக்கு ஆயுதங்கள் கொடுத்ததும் தளபதிகளான குமரப்பா, புலேந்திரன் உட்பட பன்னிரு வேங்கைகளுடன், தியாகி திலீபன் அவர்களின் வீரச்சாவுடன் இந்திய அரசின் சமாதான வேடம் கலைந்ததும் அவர்களுக்கு எதிராக மக்கள் கிழர்தெழுந்த போது புலிகளும் மக்கள் பின்னால் நின்றனர்.

அதனால் இந்திய இராணுவத்துடன் போர் வெடிக்கும் சூழலில் தான் சில நூறு சாரம் (கைலி) கட்டிய பெடியள்தான் புலிகள், அவர்களை எனது "சுருட்டை" புகைத்து முடிப்பதற்குள் இந்திய இராணுவம் அழித்து விடும் என்னும் இராணுவ மமதையில் இந்திய தலைமை அமைச்சர் டிக்சித்தால் கூறப்பட்டது.

அவரது கூற்றுக்கு முக்கிய காரணம் "இந்திய உளவு அமைப்பான ரோவால்" புலிகளின் ஆள் தொகையுடன் சில ஆயுதங்களுடன் கூடிய விபரம் ஒன்றை தன்னகத்தே அது திரட்டி வைத்திருந்தது. (இதைத்தான் தலைவர் அன்றே உணர்ந்து விட்டார்) அதை நம்பி தான் இந்த வீர வசனங்களுடன் கூடிய போர் முரசை இந்திய அரசு கொட்டியது. ஆனால் அவர்கள் தலைவரின் ஆளுமையை தவறாக மதிப்பிட்டமையே அவர்களது தோல்விக்கு முக்கிய காரணம்.

ஏனெனில் அவர்களுக்கே தெரியாது புதிய போராளிகளை இணைத்ததும், நவீன ஆயுதக் கையிருப்பை குறைய விடாதது மட்டுமல்ல, அதை அவர்களுக்கே தெரியாமல் மறைத்து வைத்ததுதான் புலிகளின் வெற்றிக்கு வழிகோலியது.

அன்றைய நேரத்திலேயே இந்திய அரசை எடை போட்ட தலைவரின் தீர்க்க தரிசனுத்துடன் கூடிய மிகவும் நுண்ணிய ராஜதந்திரத்தின் மூலம் எமது போராட்டம் அன்றைய நேரத்தில் தலைவரால் காக்கப்பட்டிருந்தது.!


ஈழத்து துரோணர்

« PREV
NEXT »

No comments