Latest News

September 05, 2015

தமிழ் மக்கள் இன்னமும் இராணுவத்தின் கண்காணிப்பின் கீழேயே இருக்கின்றார்கள்-விக்னேஸ்வரன்
by Unknown - 0

நாட்டின் ஆட்சி மாற்றத்தில் ஒட்டுமொத்தமாக சில நன்மைகள் ஏற்பட்டுள்ளன. ஆனால் அதனால் தமிழ் மக்களுக்கு பெரிய நன்மைகள் எவையும் ஏற்படவில்லை.

தமிழ் மக்கள் இன்னமும் இராணுவத்தின் கண்காணிப்பின் கீழேயே இருக்கின்றார்கள் என நேற்று யாழ். வந்த அமெரிக்க பராளுமன்ற செனட் சபை உறுப்பினர்களிடம் வட மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் சுட்டிக்காட்டினார்.

யாழ்ப்பாணம் வந்த அமெரிக்க பாராளுமன்ற செனட் சபை உறுப்பினர்கள் குழு வட மாகாண முதலமைச்சரை நேற்று சந்தித்துப் பேசியது.

இச்சந்திப்பில் ஆட்சி மாற்றத்தின் பின்னர் வட மாகாணத்தின் நிலமை தொடர்பான கருத்துக்களை அவர்கள் கேட்டறிந்து கொண்டனர்.

இதன்போதே மேற்கண்டவாறு முதலமைச்சர் சுட்டிக்காட்டினார். ஆட்சி மாற்றம் ஏற்பட்டது நல்லது. எங்கள் மக்களின் உதவியுடனே அந்த மாற்றம் ஏற்பட்டது. ஆனால் எமது மக்களின் வருங்காலம் எப்படி இருக்கப் போகின்றது என்று தெரியாத நிலை உள்ளது.

முழு நாட்டையும் எடுத்துக்கொண்டால் ஜனநாயக ரீதியில் சில நன்மைகள் ஏற்பட்டுள்ளன. ஆனால் தனிப்பட்ட  முறையில் தமிழ் மக்களுடைய பிரச்சினைகளுக்கு தீர்வை இந்த ஆட்சி மாற்றம் தரவில்லை.

 குறிப்பாக ஆயிரம் ஏக்கர் காணிகளை மக்களுடைய மீள்குடியேற்றத்திற்கான தருவதாக கூறிவிட்டு வெறுமனே 400 ஏக்கர் நிலத்தினை மட்டும் விடுவித்து எமது மக்களை இந்த அரசு ஏமாற்றியுள்ளது எனவும் முதலமைச்சர் சுட்டிக்காட்டினார்.

இராணுவம் எப்போது வெளியேறிச் செல்ல நினைக்கின்றதோ அப்போதுதான் மக்களின் காணிகளை மீட்கலாம் என்று பிரதமர் தெளிவாக தெரிவித்துள்ளார்.

தமிழ் மக்களைப் பொறுத்தவரையில் அவர்களுடைய காணிகளை ஆக்கிரமித்து பெருமளவில் நிலை கொண்டுள இராணுவம் வெளியேற வேண்டும் என்பதே மிக முக்கிய அத்தியாவசிய தேவையாக உள்ளது.

எனினும் இந்த ஆட்சி இராணுவத்தினை வெளியேற்றுவது தொடர்பாக எந்த நடவடிக்கையினையும் எடுக்கவில்லை எனவும் முதலமைச்சர் குற்றஞ்சாட்டினார்.

தமிழர் பகுதிகளில் நிலைகொண்டுள்ள இராணுவம் முன்னரைப் போன்று வெளியில் நடமாடித் திரிவதை குறைத்துள்ளது. எனினும் நாளாந்தம் தகவல் சேகரிக்கும் நடவடிக்கைகளில் அவர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.

இராணுவத்தின் கட்டுப்பாடு என்பது வடக்கில் இருந்து கொண்டுதான் இருக்கின்றது. மேலும் இராணுவ முகாங்களை அமைப்பதற்கான காணிகளை தருமாறு கோருகின்றார்கள். வடமாகாண சபை அதற்கு முடியாது என்று சொன்னதும், மத்திய அரசாங்கத்துடன் தொடர்பு கொண்டு தமக்கு தேவையான காணிகளை பெறுகின்ற நிலையும் உள்ளது என்று அமெரிக்க செனட் சபை உறுப்பினர்களிடம் முதலமைச்சர் கூறினார்.

இதனைவிட மாகாண அரசாங்கம் தன்னுடைய வேலைகளை செய்வதற்கு இடம் கொடுக்காமல் மத்திய அரசு தலையீடு செய்து வருகிறது எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.
« PREV
NEXT »

No comments