Latest News

September 16, 2015

தென் சீனக் கடலில் விமான ஓடுபாதையை உருவாக்கி வரும் சீனா.. அம்பலப்படுத்தும் செயற்கைக் கோள் படம்
by Unknown - 0

தென் சீனக் கடலில் செயற்கையாக உருவாக்கப்பட்ட தீவு ஒன்றில் விமானங்கள் இறங்குவதற்கு வசதியாக ஓடுபாதை ஒன்றை சீனா ரகசியமாக அமைத்து வருவது அம்பலமாகியுள்ளது. செயற்கைக் கோள் படம் ஒன்று இதை அம்பலப்படுத்தியுள்ளது. சர்ச்சைக்குரிய தென் சீனக் கடலில் தனது ராணுவ பலத்தை அதிகரிக்கும் வகையில் இந்த வேலையைச் செய்து வருகிறது சீனா.

இதுதொடர்பான புகைப்படங்களை வாஷிங்டனில் உள்ள சர்வதேச பாதுகாப்பு மற்றும் வியூகங்களுக்கான மையம் வெளியிட்டுள்ளது. அதில் மிஸ்சீப் ரீப், சுபி ரீப் மற்றும் சில மூழ்கிப் போன தீவுப் பகுதிகளில் விமான தளங்களை சீனா அமைத்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த மூழ்கிப் போன தீவுகள் மற்றும் பவளப் பாறைப் பகுதிகளை ஒருங்கிணைத்து செயற்கைத் தீவை சீனா உருவாக்கியுள்ளது. இங்குதான் தனது ரகசிய விமான தளத்தை அது ஏற்படுத்தி வருகிறது. தற்போது சீனா விமான தளம் அமைத்து வரும் மிஸ்சீப் ரீப் பகுதியானது பிலிப்பைன்ஸ் ராணுவ முகாமுக்கு 20 மைல் தொலைவில் உள்ளது என்று வாஷிங்டன் மையத்தைச் சேர்ந்த ஜேம்ஸ் ஹார்டி தெரிவித்துள்ளார். 

இந்த விமான தளத்தை அவசர காலங்களுக்குப் பயன்படுத்தும் வகையில் ஆயத்தப்படுத்தி வருகிறதாம் சீனா. இங்கு ரேடார் கருவிகளையும் சீனா பொருத்தி வருகிறது. மேலும் தென் சீனக் கடலில் ஏற்கனவே உட்டி தீவு மற்றும் பாரசால் தீவுகளிலும் இதுபோன்ற அமைப்புகளை அது நிறுவியுள்ளது குறிப்பிடத்தக்கது. அவையும் கூட செயற்கைத் தீவுகள்தான். இதுதவிர இன்னொரு செயற்கைத் தீவான பியரி கிராஸ் தீவில் 10,000 அடி நீளம் கொண்ட ரன்வேயை அது முடித்துள்ளது. தென் சீனக் கடலில் மட்டும் ஐந்து செயற்கைத் தீவுகளை ஏற்படுத்தி தனது ராணுவ நிலையை பலப்படுத்தி வருகிறது சீனா என்று ஹார்டி கூறுகிறார்.
« PREV
NEXT »

No comments