Latest News

September 04, 2015

கருணாவும் கருணாநிதியும் வரலாற்றுத் துரோகிகள்..! சீறும் அனந்தி சசிதரன்
by Unknown - 0

கருணாவும் கருணாநிதியும் வரலாற்றுத் துரோகிகள் என வட மாகாண சபை உறுப்பினர் அனந்தி சசிதரன் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் இருந்து வெளிவரும் சஞ்சிகை ஒன்றிற்கு வழங்கிய நேர்காணலிலேயே இவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

அவரின் நேர்காணல் வருமாறு,

சர்வதேச காணாமல் போனோர் தினம் ஆகஸ்ட் 31ம் திகதி கடைப்பிடிக்கப்பட்டது. அன்று, சென்னை வந்திருந்த இலங்கை வடக்கு மாகாண சபை உறுப்பினர் அனந்தி சசிதரன், அடையாரில் உள்ள ஐ.நா.துணைத் தூதரகத்திற்கு சென்றார்.

தனது கணவர் சின்னத்துரை சசிதரன் என்ற எழிலனை கண்டுபிடித்துத் தரும்படி மனுக் கொடுத்தார். அதன் பின்னர் தமிழக சஞ்சிகை ஒன்றுக்கு பேட்டி வழங்கியிருந்தார்.

கேள்வி. இலங்கை ஆட்சி மாற்றத்திற்குப் பின் தமிழர்களுக்கு கிடைத்த நன்மைகள் என்ன?

பதில். அரசாங்கத்தில் ஆட்கள் மாறியிருக்கிறார்களே ஒழிய, நாங்கள் ஒரு மாற்றத்தையும் காணவில்லை. புதிய ஜனாதிபதி பொறுப்பேற்ற பிறகும் தமிழர்களுடன் நல்லிணக்கத்திற்கான ஆக்கபூர்வமான நடவடிக்கைள் எவையும் மேற்கொள்ளவில்லை.

காணாமல்ப் போனவர்களைக் கண்டுபிடித்தல், தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை, மக்களின் பூர்வீக நிலங்களில் ஆக்கிரமிப்புக்கள் அகற்றும் தமிழர் பகுதிகளில் ராணுவம் வெளியேற்றம் என்று எந்த ஒரு நடவடிக்கையும் இதுவரை எடுக்கவில்லை. முகங்கள் தான் மாறியிருக்கிறதே தவிர குணங்கள் மாறவில்லை.

கேள்வி. காணாமல் போன உங்கள் கணவரைப் பற்றிய எந்த தகவலும் இல்லையா??

பதில். இதுவரை தகவல் இல்லை. போர் உச்சக்கட்டத்தில் இருந்த போது, ஆயுதங்களைப் போட்டுவிட்டு சரணடையுங்கள் உங்களை விடுவிப்பது தொடர்பாக நாங்கள் நடவடிக்கை எடுக்கிறோம் என்று திமுகவைச் சேர்ந்த பெண் எம்பி ஒருவர் என் கணவரிடம் தொலைபேசியில் கூறினார்.

அதனால் 18.05.2009ல் அவரை இலங்கை இராணுவத்திடம் கையளித்தோம். என் கணவருடன் நூற்றுக்கணக்கானோர் சரணடைந்தனர். அதன் பிறகு அந்தப் பெண் எம்பி இலங்கைக்கு வந்து ராஜபக்சவை சந்தித்தபோது கூட மௌனமாகவே இருந்தார்.

அவருடன் திருமாவளவனும் வந்திருந்தார். அவர்கள் தமிழ் நாட்டிற்குத் திரும்பிய பிறகு இலங்கையில் எல்லாம் நன்றாக இருக்கிறது என்று சொல்லிவிட்டார் அந்தப் பெண் எம்பி. ஆனால் அது உண்மையல்ல என அவர்களுக்கு தெரியும்.

இலங்கையில் காணாமல் போனவர்கள் எத்தனை பேர்?

பதில். சர்வதேச செஞ்சிலுவை சங்கம் எடுத்த கணக்கின்படி, 11ஆயிரம் பேர் காணாமல் போயிருக்கிறார்கள். போரின்போது வன்னியில் இருந்து வெளியேற்றப்பட்ட ஒரு லட்சத்து 47 ஆயிரம் பேர் என்ன ஆனார்கள் என்றே தெரியவில்லை.

இலங்கையில் இப்பொழுது பெண்களைக் குடும்பத் தலைவர்களாகக் கொண்ட 89 ஆயிரம் குடும்பங்கள் இருக்கின்றன.

கேள்வி. போர்க்குற்றம் தொடர்பான சர்வதேச விசாரணைக் கோரிக்கை மழுங்கி வருகிறதே?

பதில். � ஹிட்லர் இறந்த பிறகும் அவரது காலத்தில் நடந்த போர்க்குற்றங்களுக்காக அடுத்த கட்ட அதிகாரத்தில் இருந்தவர்கள் தண்டிக்கப்பட வேண்டும் என்று அமெரிக்கா உறுதியாக இருந்திருக்கிறது எங்கள் விஷயத்தில் அது தலைகீழாக நிற்கிறது.

கடந்த காலத்தில் இலங்கை அரசை அச்சுறுத்துவதற்காக போர்க்குற்றம் இனவழிப்பு என ஐநாவில் ஓங்கிச் சொல்லியது அமெரிக்கா. இப்போது இலங்கையில் அமெரிக்காவுக்கு ஆதரவான புதிய அரசு உள்ளதால், ஆட்சி மாறியிருக்கிறது.

உள்நாட்டு நெறிமுறைகளை ஏற்றுக்கொள்ளணும் என்கிறார்கள். எங்களுக்கு இழைக்கப்பட்ட அநீதிக்கு நியாயம் பெற்றுத் தரும் பொறுப்பு சர்வதேச சமுதாயத்திற்கு இருக்கிறது.

கேள்வி. வடக்கு மாகாண சபை உறுப்பினராக உங்களால் தமிழர்களுக்கு என்ன செய்ய முடிகிறது?

பதில். காணி(நில) அதிகாரம், காவல்த்துறை அதிகாரம் எல்லாவற்றையும் மத்திய அரசு எடுத்துக்கொண்டு வெற்று மாகாண சபையைத் தந்திருக்கிறது. எங்களுக்கு இது தீர்வாக அமையாது. எங்களுக்கு ஒரு அதிகாரமும் இல்லை. சும்மா மொம்மையாய் இருக்கிறோம் என வடக்கு மாகாண முதலமைச்சர் விக்கினேஷ்வரனே கூறியிருக்கிறார்.

கேள்வி. தமிழகத்தில் மக்கள் போராட்டம் நடத்தியும் இறுதிப் போரில் இலங்கை இராணுவம் தாக்குதலை நிறுத்தவில்லையே?

பதில். ஈழப் போரின் போது சோலார் பேனல் மூலம் நாங்கள் டீவி பார்த்துக்கொண்டிருந்தோம். தமிழகத்தில் தீவிரமாகிக்கொண்டிருந்த போராட்டத்தை நசுக்க, நீண்ட நெடிய அரசியல்வாதியான கருணாநிதி உண்ணாவிரதம் இருக்கிற மாதிரி அதனைச் சாதுரியமாக கையாண்டார்.

போரை நிறுத்துவதாக கூறியிருக்கிறார்கள். என்று கூறிக்கொண்டு அவர் குளிர்பானம் அருந்தும் போதும் குண்டுவீச்சு நடந்து கொண்டுதான் இருந்தது. கடும்போரில் பிணங்களுக்கு மத்தியில் நாங்கள் இருந்தோம்.

ஆனால் மறுநாள் டில்லியில் கருணாநிதி பேசும் போது � மழை விட்டாலும் தூவானம் நிற்கவில்லை�  என்று மிகச்சாதாரணமாக சொன்னார் கருணாநிதி செய்த அந்த வரலாற்றுத் துரோகம் தமிழ் நாட்டு மக்களுக்கு இப்போது தெளிவாக தெரிய தொடங்கியிருக்கிறது.

கேள்வி. பிரபாகரன் தன்னைத் தானே சுட்டுக்கொண்டதாக கருணா கூறியிருக்கிறாரே?

பதில். கருணாவைப் பொறுத்தமட்டில் தேசியத் தலைவரின் நாமத்தைக் கூட உச்சரிக்க தகுதியில்லாதவர். அவர் ஒரு வரலாற்றுத் துரோகத்தை செய்திருக்கிறார். ஒரு இனம் அழிவதற்கு காரணமாக இருந்திருக்கிறார்.

தமிழர்கள் யாரிடம் கேட்டாலும் அவரைத் துரோகி என்று தான் கூறுவார்கள். அவருக்கு முக்கியத்துவம் அளிக்கும் ஊடகங்கள் தான் வெட்கப்பட வேண்டும். கருணாநிதியும் கருணாவும் வரலாற்றுத் துரோகிகள்.

கேள்வி. தனி ஈழக் கோரிக்கை வலுவிழந்துவிட்டதா?

பதில். விடுதலைப் புலிகள் இருந்த போது ஒரு போக்கையும் அவர்கள் இல்லாத போது இன்னொரு நிலைப்பாட்டையும் கொண்டிருக்கிறது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு. நாங்கள் தனி ஈழக் கோரிக்கையை ஒரு காலமும் முன்வைக்கவில்லை என்றும் ஒன்று பட்ட இலங்கைக்குள் சமஷ்டியம் போதும் என்றும் இப்பொழுது சொல்கிறார்கள்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்குள் தமிழரசுக் கட்சியே பலமான கட்சி. அதன் செயல்பாடு மக்களுக்கு வெளிப்படையாகத் தெரியும்.

கேள்வி. இலங்கையில் ஆளும் கட்சி எதிர்க் கட்சி ஒன்று சேர்ந்து ஆட்சியமைக்கிறதே? 

பதில். தமிழர்களுக்கு எதிரான விசையங்களில் ஆளும் கட்சி எதிர்க்கட்சி எல்லாம் ஒன்று தான். கடந்த காலத்தில் நடந்தவைகளைப் பார்த்தால் கூட தங்களுக்குள் அடித்துக் கொண்டவர்கள் தமிழர்களை அழிக்கும் போது மட்டும் ஒன்று சேர்ந்திருக்கின்றார்கள். இந்த விஷயத்தில் ரணிலும் மகிந்தாவும் ஒன்றாகத்தான் நிற்பார்கள்.

கேள்வி. இலங்கைத் தமிழர்கள் இப்போது எப்படி இருக்கிறார்கள்? 

பதில். இப்போதும் ஆறுபேருக்கு ஒரு இராணுவ வீரர் நிற்கிறார்கள். அச்சுறுத்தல்களுக்கு மத்தியில் வாழ்ந்து கொண்டிருக்கின்றோம். நாங்கள் ஒரு தேசிய இனம். உரிமையை உரிமையாகக் கேட்கிறோம். பிச்சையாக கேட்க விரும்பவில்லை.

தமிழர்களிடம் பொது வாக்கெடுப்பு நடத்த வேண்டும். புலம் பெயர் நாட்டில் இருக்கும் ஈழத்தமிழர்கள் தமிழ் நாட்டில் இருக்கும் ஈழத்தமிழர்கள் , ஈழத்தில் இருக்கும் தமிழர்கள் என எல்லோரும் பொது வாக்கெடுப்பில் கலந்து கொள்ள வேண்டும். அதில் எடுக்கும் முடிவே சரியானதாக இருக்கும். என அவர் தெரிவித்துள்ளார்.
« PREV
NEXT »

No comments