Latest News

September 12, 2015

பொதுமன்னிப்பு ஒன்றே நிரந்தர தீர்வு: சிவசக்தி
by Unknown - 0

பொதுமன்னிப்பு ஒன்றே நிரந்தர தீர்வாக இருக்க முடியும். ஆணைக்குழுக்களில் நாம் நம்பிக்கை இழந்துள்ளோம் என வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் தெரிவித்தார். 

சர்வதேச கைதிகள் தினத்தையொட்டி அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பிலே மேற்கண்டவாறு தெரிவிக்கப்பட்டுள்ளதாவது. அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, பல்வேறு குற்றச்சாட்டுகள், சந்தேகத்தின் பெயரில் கைதுசெய்யப்பட்டு உலகம் முழுவதும் தடுத்துவைக்கப்பட்டுள்ள கைதிகளின் நலன்பேணல்கள், எதிர்காலம், மறுவாழ்வு தொடர்பில் கவனம் செலுத்தி சர்வதேச கைதிகள் தினம்,  இன்று சனிக்கிழமை (12) அனுஷ்டிக்கப்படுகின்றது. இந்நிலையில், இலங்கையில் சந்தேகத்தின் பெயரில் கைதுசெய்யப்பட்டு எத்தகைய வழக்கு விசாரணைகளும் இன்றி, நீண்ட காலமாக சிறைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகள் விடுதலை செய்யப்பட்டு, அவர்கள் தமது குடும்பங்களுடன் சேர்ந்து வாழ்வதற்குரிய வாய்ப்புகள் வழங்கப்பட வேண்டும். 

சமூகத்தில் நடமாடுவதற்கும் வாழ்வதற்கும் மறுக்கப்பட்டுள்ள அவர்களின் அடிப்படை மனித உரிமைகளுக்கு, மதிப்பளிக்கப்பட்டால் மாத்திரமே இனங்களுக்கிடையில் நல்லிணக்கம் என்பது சாத்தியமாகும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். இலங்கையில் வாழுகின்ற மற்றைய இனங்களை விடவும், தமிழ் மக்களுக்கென்று தனியானத்துவமான பல பிரச்சினைகள் இருக்கின்றன. போருக்கு காரணமான அந்தப் பிரச்சினைகளுக்கு இன்றுவரை தீர்வு காணப்படாமலே உள்ளது. 

இடம்பெயர்ந்தவர்கள் தமது பூர்வீக நிலங்களில் மீளவும் குடியேற்றப்படல், இராணுவத்தினரால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள எமது மக்களுக்கு உரித்துடைய காணிகள் விடுவிக்கப்படல், பயங்கரவாத தடைச்சட்டம் - அவசரகால தடைச்சட்டம் எனும் மோசமான தடைச்சட்டங்களைக் கொண்டு கைதுசெய்யப்பட்ட அப்பாவி தமிழ் இளைஞர்கள் விடுதலை செய்யப்படல், காணாமல் ஆக்கப்பட்டோரின் உண்மை நிலையை கண்டறிதல் என்று நீளும் தவிர்க்க முடியாத பல பிரச்சினைகள் உண்டு. 

காலத்துக்கு காலம் இப்பிரச்சினைகளுக்கு தீர்வைப் பெற்றுத்தருவோம் என்று வாக்குறுதிகளை கூறி, தமிழர் வாக்குகளை பயன்படுத்தி ஆட்சிபீடமேறுகின்ற அரசாங்கங்கள், பிரச்சினைகளை தட்டிக்கழித்து காலம் கடத்தியே வந்திருக்கின்றன. எனவே, மைத்திரி – ரணில் கூட்டு அரசாங்கமாவது தமிழ் மக்களின் எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்கின்ற வகையில் நடந்துகொள்ளும் என்ற நம்பிக்கையிலே தமிழ் மக்கள் உள்ளனர். மிகவும் முக்கியமாக சிறைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமது பிள்ளைகள், குடும்பத்தலைவர்கள், உறவினர்கள் விடுதலை செய்யப்பட வேண்டும் என்ற நிலைப்பாட்டில் நாமும் அவர்களது உறவினர்களும் அழுத்தமாகவே உள்ளோம். நீதிக்கு புறம்பான கைதுகள் தடுத்து வைப்புகளை கண்டித்தும், சிறைப்படு, கொலைகள் - தாக்குதல்களுக்கு நீதி கோரியும், தமிழ் அரசியல் கைதிகளின் பாதுகாப்பு மற்றும் விடுதலையை வலியுறுத்தியும், கடந்த கால அரசுகளுக்கு எதிராக பல்வேறுபட்ட ஜனநாயக - கவனயீர்ப்பு போராட்டங்களை நாம் நடத்தியிருக்கிறோம். 

ஜெனீவா அமர்வுகள் கூடுகின்ற சந்தர்ப்பங்களின்போது, விசேட நீதிமன்றங்களை உருவாக்கி அதனூடாக வழக்குகளை விசாரித்து தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலையை துரிதப்படுத்தப் போவதாக கூறிவரும் அரசு, தமிழ் அரசியல் கைதிகளை விடுதலை செய்யாமல் கால இழுத்தடிப்புகளை செய்து வருகின்றது. அவர்கள் மீது எந்த ஒரு குற்றத்தை இனி நீங்கள் பதிவுசெய்தாலும் கூட, சட்டத்தில் அந்த குற்றத்துக்கு கொடுக்கப்படும் சிறைத்தண்டனை காலத்தை விடவும், அவர்கள் அதிகமான காலத்தை சிறைகளில் கழித்து விட்டார்கள். 

அப்படி நோக்கின் மேலதிக தண்டனை வழங்கி சீரழிக்கப்பட்டுள்ள அவர்களின் இளமைக்கால வாழ்க்கை சூனியமாக்கப்பட்டுள்ளது. இதுகூட ஒருவகையான அடிப்படை மனித உரிமை மீறலே. இந்த நிலையில் புதிய அரசு கூட ஆணைக்குழுக்களை அமைத்து வழக்கு விசாரணைகளை ஆராயப்போவதாக கூறிவருகின்றமை, எஞ்சியுள்ள அவர்களின் வாழ்க்கை காலத்தை இன்னும் இழுத்தடிப்புச்செய்து அவர்களின் விடுதலையை காலம் கடத்துவதற்கே வழிசமைக்கும். கடந்த கால ஆணைக்குழுக்களுக்கு என்ன நடந்தது? அவற்றின் உண்மைத்தன்மை என்ன? அவற்றின் சுயாதீனம் எந்த வரையறைகளுக்குட்பட்டது? என்பன பற்றியெல்லாம் நாம் நன்கு அறிந்து வைத்திருக்கின்றோம். 

நீதிமன்றங்களில் கூட, நடைபெற்றுவரும் வழக்குக்குரியவர்களின் வழக்கு விசாரணைக் காலத்தை துரித கதியில் முடிவுறுத்தாமல் பத்து முதல் பன்னிரண்டு மாதங்களுக்கென்று திகதியிட்டு ஒத்திவைத்து நீடிப்புச்செய்வதானது கவலையளிக்கின்றது. விடுதலைப்புலிகள் அமைப்பின் ஆயுதக் கொள்வனவு விவகாரங்களுக்கு பொறுப்பானவர் என்று கண்டறியப்பட்டுள்ள கே.பிக்கு கூட, அவர் பாரிய குற்றச்சாட்டுகளில் ஈடுபட்டுள்ளார் எனும் குற்றச்சாட்டுக்கு தேவையான போதிய ஆதாரங்கள் இல்லை என்று உச்சநீதிமன்றம் அண்மையில் சட்டமா அதிபர் திணைக்களத்துக்கு கூறியுள்ளது. ஆனால், தற்போது சிறைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்கு ஆளாக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகள் மீதான விசாரணைக்கு, உங்களிடம் உள்ள உச்சகட்ட ஆதாரமே அவர்களின் குற்றப்பத்திரிகை (குற்ற ஒப்புதல் வாக்குமூலம்) மாத்திரமே ஆகும். 

அது எத்தகைய சூழலில், அழுத்தங்களில், நெருக்குதல்களில், பாரிய சித்திரவதைகளுக்கு பின்னர் ஒப்புக்கொள்ள வைக்கப்பட்டு பலவந்தமாக வாக்குமூலம் பெறப்பட்டு பதிவுசெய்யப்பட்டது என்பதை யாவரும் அறிவர். எனவே, ஆணைக்குழுக்களை அமைத்தல், நியமித்தல் என்ற செயற்பாடுகளில் நாமும், அரசியல் கைதிகளும், அவர்களின் பெற்றோர், உறவினர்களும் நம்பிக்கை இழந்து போயுள்ளோம். அது இன்னும் தமிழ் அரசியல் கைதிகளின் வாழும் காலத்தை இழுத்தடிப்பதற்கான ஏமாற்று வித்தையாகவே அமையும். உயிர் வாழும் அவர்களின் அடிப்படை மனித உரிமைகளை பறிக்கும் பயங்கர நடவடிக்கையாகவே அமையும். 

எனவே 'பொதுமன்னிப்பு' அடிப்படையில் அனைத்து தமிழ் அரசியல் கைதிகளையும் விடுதலை செய்ய வேண்டும் என்பதே எமது அழுத்த திருத்தமான கோரிக்கையாகும். அதுவே, நீண்ட காலமாக தொடரும் இப்பிரச்சினைக்கு உரிய தீர்வாகவும் அமையும். எனவே, நிரந்தரமான உறுதியான முடிவைக்காண 'பொதுமன்னிப்பு' என்ற அடிப்படையில் அனைத்து தமிழ் அரசியல் கைதிகளையும் விடுதலை செய்ய வேண்டும் என்று புதிய அரசை நாம் கோருகின்றோம். 

நல்லாட்சி அரசு பற்றியும் - புதிய ஜனநாயக வெளி பற்றியும் பேசுபவர்களும், இந்த அரசை நியாயப்படுத்தி, அதனை பிரதிநிதித்துவப்படுத்தி அதன் ஒரு அங்கமாக இரண்டறக் கலந்திருப்பவர்களும், எமது உறவுகளான தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலையில் இதயசுத்தியுடன் கரிசனை கொண்டு, அவர்களின் விடுதலைக்காக மனிதாபிமானத்துடன் செயற்பட வேண்டும் என்று வலியுறுத்துவதாகவும் அவரது செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது 
« PREV
NEXT »

No comments