Latest News

September 29, 2015

தியாக தீபம் திலீபனதும் நினைவு தினம்- சுவிஸ்!
by Unknown - 0

தமிழீழப் போராட்ட வரலாற்றில் பல புரட்சிகரமான திருப்பங்களை ஏற்படுத்திய தமிழீழ விடுதலையின் தடை அகற்றிகளதும் தியாக தீபம் திலீபனதும் நினைவு சுமந்த வணக்க நிகழ்வானது கடந்த 28ம் திகதி லுட்சேர்ன் மாநிலத்தில் மிகவும் உணர்வெழுச்சியுடன் இடம்பெற்றது.

இந்திய வல்லாதிக்கத்திற்கெதிராக அகிம்சைப் போரில் விதையான தியாகதீபம் லெப்.கேணல் திலீபன், இலங்கை இந்திய அரசுகளின் கூட்டுச் சதிக்குப் பலியான லெப். கேணல் குமரப்பா, லெப். கேணல் புலேந்திரன் உட்பட பன்னிரு வேங்கைகள்,

சிறிலங்கா அரசின் சதியால் படுகொலை செய்யப்பட்ட லெப். கேணல் நாதன், கப்டன் கஜன் மற்றும் கேணல் சங்கர், கேணல் ராயூ ஆகியோரோடு,

தென்தமிழீழத்தின் மட்டுமண்ணில் முதல் களப்பலியான மாவீரர் லெப். பரமதேவா அவர்களினதும், விடுதலைப் புலிகளின் மத்தியகுழு உறுப்பினர் லெப். கேணல் சந்தோசம் மாஸ்ரர் அவர்களினதும்

நினைவுகள் சுமந்த இவ்வெழுச்சி நிகழ்வில் பல நூற்றுக்கணக்கான மக்கள் கலந்துகொண்டமையானது எழுச்சியுடன், மிகவும் உணர்வுபூர்வமாகவும், நம்பிக்கையைத் தருவதாகவும் அமைந்திருந்தது.

சுவிஸ் தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவினரின் ஏற்பாட்டில் நடைபெற்ற இவ் வணக்க நிகழ்வில் பொதுச்சுடரேற்றலுடன் தமிமீழத் தேசியக்கொடி ஏற்றி வைக்கப்பட்டதனைத் தொடர்ந்து மலர்மாலை அணிவித்தலுடன் ஈகைச்சுடர்கள் ஏற்றப்பட்டு அகவணக்கம், மலர்வணக்கம் செலுத்தப்பட்டது.

மக்களால் மலரஞ்சலி, சுடர்வணக்கம் செலுத்தப்பட்ட சமவேளையில் மலர்வணக்கப் பாடல்கள் இசைக்கப்பட்டன.

மாவீர வித்துக்களின் நினைவுகள் சுமந்த இவ்வணக்க நிகழ்வின் எழுச்சி நிகழ்வுகளாக எழுச்சிப் பாடல்கள், எழுச்சிக் கவிதை, வணக்க உரை, இளையோர்களின் எழுச்சி நடனங்களோடு தமிழகத்திலிருந்து வருகை தந்த தமிழின உணர்வாளரும்,

மே பதினேழு இயக்க ஒருங்கிணைப்பாளருமாகிய திரு. திருமுருகன் காந்தி அவர்களின் காலத்திற்கேற்ப கருப்பொருளை கொண்ட எழுச்சிப் பேருரை நிகழ்வின் சிறப்பம்சமாக அமைந்திருந்தது.

நிகழ்வின் இறுதியாக நம்புங்கள் தமிழீழம் பாடலைத் தொடர்ந்து தமிழீழத் தேசியக்கொடி இறக்கலுடன், தமிழர்களின் தாரக மந்திரத்துடன் நிகழ்வுகள் எழுச்சியுடன் நிறைவுபெற்றன.

சுவிஸ் தமிழர் ஒருங்கிணைப்புக்குழு







« PREV
NEXT »

No comments