Latest News

August 12, 2015

பிரிட்டிஷ் குடிவரவு தடுப்பு நிலையத்தின் நிலை குறித்து கவலை
by Unknown - 0

யார்ல்ஸ் உட்டில் இருக்கும் இந்தத் தடுப்பு நிலையத்தின் நிலைமை, தான் இரண்டு வருடங்களுக்கு முன்னர் பார்வையிட்டபோது இருந்ததை விட தற்போது மோசமடைந்துள்ளது என இந்த அறிக்கையைத் தயாரித்த சிறைச்சாலைகளின் தலைமைக் கண்காணிப்பாளர் நிக் ஹாட்விக் தெரிவித்திருக்கிறார்.
அங்கிருந்த பாதுகாப்பு அதிகாரிகள் சிலர் பலப் பிரயோகம் செய்தமைக்கான ஆதாரங்களை சுட்டிக்காட்டியுள்ள அந்த அறிக்கை, அங்கு சுகாதார வசதிகள் பற்றாக்குறையாக உள்ளதாகவும் கூறியுள்ளது.
யார்ல்ஸ் உட் தடுப்பு நிலையத்தில், விதிமுறைகளுக்கு மாறாக கடந்த வருடம் கர்ப்பிணிப் பெண்கள் நூறு பேர் வரை தடுத்து வைக்கப்பட்டிருந்தனர்.
அங்கு நிலைமையை மேம்படுத்த, தமது பங்காளிகளுடன் இணைந்து செயல்படப்போவதாக பிரிட்டிஷ் அரசு தெரிவித்துள்ளது.
யார்ல்ஸ் உட் முகாமில் 350க்கும் மேற்பட்டவர்கள் தடுத்துவைக்கப்பட்டிருக்கின்றனர். இவர்களில் பெரும்பாலானவர்கள் பெண்கள். இவர்களுடைய குடியேற்ற நிலை குறித்து முடிவெடுக்கப்படாததால் அவர்கள் அங்கு தங்கவைக்கப்பட்டிருக்கின்றனர்.
அங்கு தங்க வைக்கப்பட்டிருப்பவர்களில் பாதிக்கும் மேற்பட்டவர்கள் பாதுகாப்பில்லாமல் உணர்வதாக அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
பிரிட்டனிலிருந்து வெளியேற்றப்படவிருப்பவர்களைத் தங்கவைப்பதற்காக 2001ஆம் ஆண்டில் பெட்ஃபோர்ட்ஷயரில் 100 மில்லியன் பவுண்டு செலவில் இந்த மையம் கட்டப்பட்டது.
இங்கு 410 பேர் வரை தங்க முடியும். இந்த மையம் திறக்கப்பட்டு மூன்று மாதங்களில் அங்கு தங்கவைக்கப்பட்டிருந்தவர்கள் நடத்திய போராட்டத்தில், மையத்திற்கு தீவைக்கப்பட்டது.
இந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருக்கும் பல அம்சங்கள் பெரும் ஏமாற்றமளிப்பதாக உள்துறை அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் கூறியிருக்கிறார்.
இந்த மையத்தின் சுகாதாரம் உள்ளிட்ட வசதிகள் மேம்படுவதற்காக இந்த மையத்தை நடத்தும் நிறுவனங்களுடன் இணைந்து செயல்படுவதாக அவர் கூறியிருக்கிறார்.
« PREV
NEXT »

No comments