Latest News

August 22, 2015

மக்களின் எதிர்பார்ப்புக்களை நிறைவேற்றும் தருணமாக இச்சந்தர்ப்பம் அமைந்துள்ளது!- செல்வம் அடைக்கலநாதன்…
by Unknown - 0

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வெற்றிக்காக பாடுபட்டு எங்களை பாராளுமன்றத்திற்கு மீண்டும் அனுப்பி வைத்துள்ள வன்னி மாவட்ட மக்களின் எதிர்பார்ப்புக்களை நிறைவேற்றும் தருணம் இச்சந்தர்ப்பம் என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார்.

அவர் விடுத்துள்ள அறிக்கையில் மேலும் குறிப்பிடுகையில்,

தமிழ் தேசியக்கூட்டமைப்பிற்கு தொடர்ச்சியாக வாக்களித்து பலரை பாராளுமன்றம் அனுப்பிய வன்னி மாவட்ட தமிழ் பேசும் மக்கள் மீண்டும் எம்மை பாராளுமன்றம் அனுப்பி வைத்துள்ளனர்.

-எங்களின் வெற்றிக்காக பாடுபட்ட வன்னி மாவட்ட தமிழ் பேசும் மக்களுக்கு எனது உலம் கனிந்த நன்றிகள். தமிழ் மக்களின் எதிர்பார்ப்புக்களை நிறைவேற்றும் தருனமாக இச்சந்தர்ப்பம் அமைந்துள்ளது.

கடந்த காலங்களில் எமது மக்கள் அனுபவித்த அனைத்து துயரங்களுக்கும் விடைகொடுக்க முற்படுவோம். மஹிந்த அரசாங்கம் மைத்திரி அரசாக மாற்றம் பெற்றுள்ளது.

இந்த சந்தர்ப்பத்தில் அரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பில் உடனடியாக வலியுறுத்தவுள்ளோம்.

காணி அபகரிப்பு, வீட்டுத்திட்டங்களில் உள்ள முறைகேடுகள், வேலைவாய்ப்புக்களில் தகுதியுள்ள எமது இளைஞர் யுவதிகள் நிராகரிக்கின்ற சந்தர்ப்பங்கள் போன்ற சகல பிரச்சினைகளுக்கும் தீர்வைப் பெற்று எமது மக்களின் சுபீட்சமான எதிர்காலத்தை மாற்ற தமிழ் தேசியக் கூட்டமைப்பு குரல் கொடுக்கும்.

குறிப்பாக காணாமல் போனவர்களின் நிலை குறித்தும் தமிழ் தேசியக் கூட்டமைப்பு அதிக அக்கறை செலுத்தும் என மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.

அதே வேளை 
மக்களின் ஜனநாயக தீர்ப்புக்கு தலை வணங்குகின்றேன்!- முன்னாள் எம்.பி எஸ்.வினோ நோகராதலிங்கம்
நடந்து முடிந்த 8 ஆவது பாராளுமன்ற பொதுதேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வெற்றிக்காக உழைத்தஇ வாக்களித்த வன்னி மாவட்ட மக்களுக்கு எனது உளப்பூர்வமான நன்றிகளை தெரிவித்துக் கொள்ளுவதாக தமிழ் தேசியக்கூட்டமைப்பின் வன்னி மாவட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.வினோ நோகராதலிங்கம் தெரிவித்தார்.

அவர் விடுத்துள்ள அறிக்கையில் மேலும் குறிப்பிடுகையில்,

எமது மக்கள் உணர்வுபூர்வமாக ஒன்று பட்டிருந்த நிலைப்பாடு தமிழ் தேசியத்தின்பாலுள்ள பற்று நிலையை மீண்டும் உறுதியுடன் மேலோங்கச் செய்துள்ளது.

தமிழ் மக்களின் அங்கீகரிக்கப்பட்ட, தனித்துவமான, அரசியல் அடையாள சின்னமாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மீண்டும் ஒரு தடவை ஜனநாயக முறைப்படி அங்கீகாரம் பெற்றுள்ளது.

இந்த அங்கீகாரம் எமது அரசியல் விடுதலைக்கான பயணத்தை இலகு படுத்தி விரைவில் முடித்து வைக்க உதவும் என நம்புகிறேன்.
நீதியான நிலைத்து நிற்கக்கூடிய ஒரு நிரந்தர அரசியல் தீர்வுக்காக எமது மக்கள் நீண்ட தூரம் பயணம் செய்து விட்டனர்.

இப்பாராளுமன்ற ஆயுட் காலம் முடிவடைவதற்குள் தமிழ் மக்களுக்கான அரசியல் விடுதலையை பெற்றுக் கொடுக்க எமது தலைமை காத்திரமான பங்களிப்பை செய்ய வேண்டும்.

தெற்கிலே ஏற்பட்டிருக்கின்ற அரசியல் கள நிலை மாற்றத்தையும் வாய்ப்புக்களையும் நாம் சரியான முறையில் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.

மக்கள் வழங்கிய ஆணையின் பிரகாரம் உணர்வுகளின் வெளிப்படுத்தல்களை சீரான செயற்பாடுகளின் மூலம் மக்களுக்கு நம்பிக்கையூட்ட கூட்டமைப்பின் தலைமை அர்த்த புஸ்டியுடன் உழைக்க வேண்டும்.

மேலும் இத்தேர்தலில் சில நூறு வாக்குகள் வித்தியாசத்தில் எனது வெற்றி நழுவிச்சென்றாலும் ஜனநாயக பண்புகளை மதிக்கின்றவன் என்ற ரீதியில் மக்களின் ஜனநாயக தீர்ப்புக்கும் தலை வணங்குகின்றேன்.

கடந்த காலங்களில் எனது அரசியல் செயற்பாடுகளுக்கு ஆதரவும் அங்கீகாரமும் தந்த நல்லுள்ளங்களுக்கும் இத்தேர்தலில் வாக்களித்த ஆதரவாளர்களுக்கும் எனது ஆழ் மனதில் இருந்து நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றேன்.

என் வல்லமைக்கும் சக்திக்கும் எட்டியவரை நான் என் இனத்துக்கு உண்மையாகவும் நேர்மையாகவும் விசுவாசத்துடனும் உழைத்து வந்துள்ளேன்.

உயிர் அச்சுறுத்தல்கள், நெருக்கடிகள் சூழ்ந்திருந்த காலப்பகுதியில் யாருமே அரசியலுக்க வர மறுத்த சூழலிலும் எமது இனத்திற்காக பணி செய்த திருப்தியை கொண்டுள்ளேன்.

எனது மக்களை ஏமாற்றி,பொய்வாக்குறுதிகளை வழங்கி அரசியல் பணி செய்யவில்லை.
தமிழ்த் தேசியத்துடன் கலந்த தூய்மையான அரசியலைத் தான் செய்துள்ளேன்.

மக்கள் என் மீது இன்னமும் நம்பிக்கை வைத்துள்ளனர்.

அந்த நம்பிக்கை வீண் போகாமல் அரசியல் உரிமைப் போராட்டத்தில் என் பணி தொடரும்.
தேர்தல் அரசியலில் ஈடுபடுவது என்பது பண பலம், பொருளாதார வசதி கொண்டவர்களுக்கு மட்டுமே என்பது இத்தேர்தலில் நிரூபிக்கப்பட்டுள்ளது.

சாமானிய பொதுமக்களால் இது போன்ற தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்று வந்த நிலமை முற்றிலும் மாறி விட்டது.என குறிப்பிடப்பட்டுள்ளது.
« PREV
NEXT »

No comments