Latest News

August 15, 2015

சிறிலங்காவின் நாடாளுமன்ற தேர்தலும் நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் நிலைப்பாடும் ! - ஒரு பார்வை
by Unknown - 0

சிறிலங்கா அரசாங்கத்துக்கான நாடாளுமன்ற பொதுத்தேர்தல் வரும் 17ம் நாள் நடைபெறவிருக்கின்ற நிலையில், சிங்கள அரசினால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள தமிழர் தாயகப்பகுதியிலும் இத்தேர்தல் நடைபெறவிருக்கின்றது.

இத்தேர்தலில் மக்கள் எத்தகையவர்களைத் தமது பிரதிநிதிகளாகத் தேர்ந்தெடுக்க வேண்டுமென்பது தொடர்பில் நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதமர் வி.உருத்திரகுமாரன் அவர்கள் அறிக்கையொன்றின் மூலம் சில நாட்டுகளுக்கு முன்னர் தெரிவித்திருந்தார்.

ஐந்து கொள்கை நிலைப்பாடுகள் சிலவற்றை முன்வைத்து, தமது கொள்கை நிலைப்பாடுகளை வெளிப்படுத்தி அவற்றின்படி சொல்லிலும் செயலிலும் இயங்குபவர்களை அடையாளம் கண்டு மக்கள் தமது பிரதநிதிகளை மக்கள் தேர்ந்தெடுக்க வேண்டுகின்றோம் அவ்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

1. எந்தவொரு அரசியல் தீர்வும் திம்புக் கோட்பாடுகளை அடிப்படையாகக் கொண்டதாக இருக்க வேண்டும்.

2. தமிழ் மக்களின் தேசியப்பிரச்சினைக்கான எந்தவொரு அரசியல் தீர்வும் தாயகத்திலும் புலத்திலும் வாழும் ஈழத்தமிழர் தேசத்தவரிடையே மக்கள் வாக்கெடுப்புக்கூடாகத் தீர்மானிக்கப்பட வேண்டும்.

3. தமிழின அழிப்புத் தொடர்பாக அனைத்துலக விசாரணை நடைபெற வேண்டும் என்பதில் உறுதியாக இருத்தல் வேண்டும். இந் நிலைப்பாட்டின் பிரதிபலிப்பாக வட மாகாணசபையால் நிறைவேற்றப்பட்ட தமிழின அழிப்புத் தீர்மானத்துக்குப் பகிரங்கமாக ஆதரவு வழங்கிச் செயற்பட வேண்டும். அனைத்துலக நிபுணர்கள் பங்கு பற்றும் விசாரணைப்பொறிமுறை எதுவும் சிறிலங்கா சட்டங்களுக்கு அமைய நடைபெறலாமெனப் பரிந்துரைக்கப்படின் அதனை உள்நாட்டு விசாரணையாகவே கருதி நிராகரிக்க வேண்டும்.

4. சிறிலங்கா பௌத்த பேரினவாத அரச கட்டமைப்பால் ஈழத் தமிழர் தேசம் மீது தொடர்ந்து மேற்கொள்ளப்படும் கட்டமைப்புசார் இனஅழிப்பைத் தடுத்து நிறுத்தவும், புலம் பெயர் மக்கள் அச்சமின்றித் தமிழர் தாயகப் பகுதியின் மேம்பாட்டு நடவடிக்கைகளில் ஈடுபடத் துணை செய்யும் வகையிலும் அனைத்துலகப் பாதுகாப்புப் பொறிமுறையொன்று அமைக்கப்பட வேண்டும்.

5. தமிழர் தாயகப் பகுதியில் இருந்து சிறிலங்கா இராணுவத்தினர் வெளியேற்றப்பட வேண்டும்.

ஆகிய இந்த ஐந்து நிலைப்பாடுகளையும் சுட்டிக்காட்டி, இதனை ஏற்று அவற்றின்படி சொல்லால் மட்டுமன்றி செயலாலும் உண்மையாக, விசுவாசமாக இயங்குபவர்கள் யார் என்பதனை மக்கள் அடையாளம் கண்டு அவர்களைத் தங்கள் பிரதிநிதிகளாகத் தேர்வு செய்ய வேண்டுமென தெரிவிக்கப்பட்டிருந்தது.

இலங்கைத்தீவின் இனநெருக்கடி விவகாரத்தில், தமிழர் தேசத்தினை சிங்கள மயமாக்கல், இராணுமயமக்கல், பௌத்த மயமாக்கல் எனும் சிங்கள அரச நிலைப்பாட்டினை ஆட்சிக்குவந்த சிறிலங்காவின் ஒவ்வொரு அரசாங்கங்களும் தனது நாடாளுமன்றத்தினை எவ்வாறு கையாண்டிருந்தது என்பது பற்றியும் அவ்வறிக்கை முன்வைத்திருந்தது.

சிறிலங்காவின் நாடாளுமன்றத்தில் தமிழ் உறுப்பினர்கள் அங்கம் வகிப்பது சிறிலங்கா அரசின் சிங்கள பௌத்த இனவாத குணாம்சங்களை மாற்றியமைத்து விடப் போவதில்லை. சிறிலங்காவின் நாடாளுமன்றமே சிங்கள இனவாதத்தின் மையமாக இருந்து வருவதையும் தமிழ் மக்கள் நன்கறிவார்கள். சிங்கள பௌத்த மேலாண்மையை நிலைநிறுத்தும் சட்டங்களும், தமிழ் மக்களின் தேசிய வாழ்வைச் சிதைக்க வழிவகை செய்யும் சட்டங்களும் இந் நாடாளுமன்றத்திலேயே நிறைவேற்றப்படுகின்றன என பிரதமர் வி.உருத்திரகுமாரன் அவ்வறிக்கையில் சுட்டிக்காட்டுகின்றார்.

தமிழ்மக்களின் கருத்துச் சுதந்திரத்தை நிராகரிக்கும் வகையில் அமைந்துள்ள சிறிலங்காவின் 6வது திருத்தச் சட்டத்துக்கமைய உறுதிமொழி எடுத்து நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட வேண்டியிருப்பதனையும் கொள்கைசார் முரண்பாட்டினையும் பதிவு செய்துள்ள பிரதமர் வி.உருத்திரகுமாரன் நாடுகடந்த தமிழீழ அரசாங்கமானது தமிழ் மக்களின் அரசியற்தீர்வு குறித்து மக்கள் சுதந்திரமாக விவாதித்து முடிவெடுக்க வழிவகை செய்யும் வகையில் சிறிலங்காவின் அரசியலமைப்பின் 6வது திருத்தச் சட்டம் நீக்கப்பட வேண்டும் என்ற நிலைப்பாட்டை உறுதியாகக் கொண்டுள்ளது எனவும் தெரிவிக்கின்றார்.

இருப்பினும், சிறிலங்காவின் நாடாளுமன்றத் தேர்தலில் தந்திரோபாய அடிப்படையில்; தமிழ் மக்கள் பங்கு பெறுவது அவசியம் என்றே தாம் கருதுவதாகவும் தெரிவிக்கின்றார்.

மேலும் கடந்த சனவரி நடந்து முடிந்த சிறிலங்காவின் அதிபர் தேர்தலுக்கு பின்னராக இடம்பெறுகின்ற முதலாவது பொதுத் தேர்தல் என்றவகையில், இதனை ஆட்சி மாற்றத்தின் தொடர்ச்சியாகக் கருதுவோரும் உளர் என தெரிவிக்கும் பிரதமர் வி.உருத்திரகுமாரன், தமிழ் மக்களின் தேசியப்பிரச்சினையை ஒற்றையாட்சிக்குட்பட்ட வகையில் கையாள்வதும் தமிழின அழிப்புக்கெதிரான அனைத்துலக விசாரணைக்குப் பதிலாக அதனை உள்நாட்டு விசாரணையாகச் சுருக்கிக் கொள்வதும் ஆட்சி மாற்றத்தின் பின் பதவிக்கு வந்தோரினது திட்டங்களாகவே உள்ளன. இந் நிலையில்; எந்தச் சிங்களக் கட்சியின் தலைமையிலான அரசாங்கம் ஆட்சிபீடம் ஏறினாலும் அவர்கள் சிங்கள பௌத்த பெருந்தேசிய வாதத்தினைப் பாதுகாப்பவர்களாகத்தான்; இருப்பார்கள் என்பதில் நாம் தெளிவாக இருக்க வேண்டும் என்கிறார்.

இத்தேர்தலில் தமிழர் தரப்பு கொண்டிருக்கின்ற வேண்டிய பொறுப்பும் விழிப்பும் குறித்து சுட்டிக்காட்டியுள்ள நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் அறிக்கை, தேர்தலுக்கு பின்னராக தமிழர் தரப்பின் செயல்முனைப்பு குறித்தும் வினவியுள்ளது.

தமிழ் மக்களின் அரசியல் அபிலாசைகளை நிரப்பக்கூடிய தீர்வு எதனையும் 2016ஆம் ஆண்டுக்குள் பெறமுடியும் எனத் தமிழர் தலைமைகள் கற்பனையில் மூழ்கக்கூடாது. மக்கள் மத்தியில் பொய்யான நம்பிக்கைகளை விதைக்கவும் கூடாது.

தமிழ் மக்கள் தமது உரிமைகளை வென்றெடுப்பதில் உறுதியாகவும் விழிபு;புணர்வுடனும் இருக்க வேண்டும். எம்மை சிங்களத் தலைமைகள் மட்டுமல்ல, தமிழ்த் தலைமைகளும் ஏமாற்றுவதற்கு நாம் இடமளிக்கக் கூடாது. தமக்கு உண்மையாகவும் விசுவாசமாகவும் இருக்கக்கூடியவர்களை இத் தேர்தலில் மக்கள் தமது பிரதிநிதிகளாகத் தேர்ந்தெடுக்க வேண்டும். ஒவ்வொரு தவறான முடிவுக்கும் நாம் பின்னர் விலை கொடுத்தாக வேண்டும் என்பதனையும் மக்கள் கவனத்திற் கொள்ளவேண்டும்.

தேர்தலுக்குப் பின்னர் தமிழர்களின் உரிமைகளை வென்றெடுப்பதற்கு ஈழத் தமிழர் தேசம் அரசியல் இராஜதந்திர வழியில் தீவிரமாகப் போராட வேண்டிய நிலை வரும். தமிழின அழிப்புக்கு எதிரான அனைத்துலக விசாரணையை உள்நாட்டு விசாரணையாகச் சுருக்கும் முயற்சிக்கு எதிராகக் கடுமையாகப் போராட வேண்டி வரும். இப் போராட்டத்தில் ஈழத் தாயகம், புலம் பெயர் தமிழ் மக்கள், தமிழகம் மற்றும் உலகத் தமிழ் மக்கள் அனைவரும் கைகோர்த்து ஈடுபட வேண்டியது அவசியமானதாக இருக்கும் என தெரிவிக்கப்பட்டிருந்தது.
« PREV
NEXT »

No comments