Latest News

August 17, 2015

நேர காலத்தோடு வாக்களியுங்கள் விதிமுறைகளை மீறினால் சிறை!
by Unknown - 0

இலங்கையின் 15வது பொதுத் தேர்தல் இன்று நடைபெறுகின்றது. 225 பேரைக் கொண்ட பாராளுமன்றத்தில் 196 பேரை நேரடியாக தெரிவு செய்வதற்கான வாக்களிப்பு இன்று காலை 7 மணி முதல் மாலை 4 மணி வரையில் நடைபெறும்.

வீண் சிரமங்களை தவிர்க்கும் வகையில் நேர காலத்துடன் வாக்களிப்பு நிலையத்துக்குச் சென்று வாக்களிப்பதன் மூலம் வாக்காளர்கள் தமது ஜனநாயக உரிமையை பயன்படுத்த வேண்டுமென தேர்தல்கள் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரிய வேண்டுகோள் விடுத்தார்.

இதேவேளை, தேர்தல் விதிமுறைகளை மீறுபவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் “அன்றைய உணவை சிறையிலேயே சாப்பிட வேண்டிய நிலை ஏற்படும்” என்றும் தேர்தல் ஆணையாளர் எச்சரித்துள்ளார்.

வாக்குச் சாவடியிலிருந்து 500 மீற்றர் வரையில் பிரகடனப் படுத்தப்பட்டுள்ள பாதுகாப்பு வலயத்திற்குள் தேர்தல் சட்ட விதிமுறைகளை மீறுவோர் கைது செய்யப்பட்டால் அதனைத் தொடர்ந்து வரும் இரண்டு அல்லது மூன்று நாட்களுக்கு பொலிஸ் பிணை வழங்குவதற்கான ஏற்பாடுகள் இல்லை என்றும் அவர் தெரிவித்தார்.

வாக்களிப்பின் பெறுபேறுகளாக முதலில் தபால் மூல பெறுபேறுகளை இன்று இரவு 11 மணி முதல் நள்ளிரவு 12 மணிக்கிடையில் வெளியிட முடியுமென எதிர்பார்ப்பதாகவும் தேர்தல்கள் ஆணையாளர் சுட்டிக் காட்டினார்.

இருப்பினும் வாக்குச் சாவடிகளுக்குள்ளோ அல்லது அண்மித்த பிரதேசங்களிலோ வன்முறைகள் இடம் பெற்றால் குறித்த வாக்குச்சாவடி யின் வாக்கெடுப்பு முற்றாக ரத்துச் செய் யப்பட்டு இன்னொருதினம் வாக்களிப்பு நடத்தப்படும். அதுவரை அந்த மாவட் டத்திற்கான பெறுபேறுகள் வெளியிடுவது தாமதப்படுத்தப்படும்.

வாக்காளர்கள் அலட்சியப்போக்கை கைவிட்டுவிட்டு நாட்டின் ஜனநாயகத்தை உறுதிப்படுத்தும் வகையில் பாராளு மன்றத்தின் பிரதிநிதிகளை தெரிவு செய்வதற்காக தங்களுக்குள்ள உரிமையை இன்று முழுமையாக பயன்படுத்தி நாட்டின் சிறந்த எதிர்காலத்திற்கு ஒத்துழைக்க வேண்டுமெனவும் தேர்தல்கள் ஆணையாளர் கேட்டுக்கொண்டார்.

வாக்களிப்பதனை எவராலும் தடுக்க முடியாதென சுட்டிக்காட்டிய அவர், வாக்காளர்கள் அடையாளமிடும் கட்சி மற்றும் விருப்பு இலக்கங்களின் இரகசியத்தன்மை பாதுகாக்கப்படும் என்பதற்கான உத்தர வாதத்தினை தேர்தல்கள் திணைக்களம் வழங்குவதாகவும் அவர் வாக்குறுதியளித்தார்.

அத்துடன் வாக்கு எண்ணுதல் மிகவும் சூட்சுமமான முறையிலேயே முன்னெடுக்க ப்படும் என்பதனால் குறித்த பிரதேசத்தின் வாக்காளர்கள் எந்த கட்சியினுடைய ஆதரவாளர்கள் என்ற தகவல்கள் வெளி வருவ தற்கான வாய்ப்பு இல்லையென்றும் அவர் நம்பிக்கையளித்தார்.

தேர்தல்கள் ஆணையாளரின் வேண்டு கோளின் பேரில் பொலிஸ்மா அதிபர் என். கே. இளங்ககோனின் பணிப்புரையின், பிரதி பொலிஸ் மா அதிபர் காமினி நபரட்ணவின் ஏற்பாட்டில் நாடு முழு வதும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட் டிருக்கும் நிலையில் அமைதியானதும் சுதந்திரமானதுமான தேர்தலுக்கு அனைவரும் ஒத்துழைக்க வேண்டுமெனவும் அவர் கேட்டுக்கொண்டார்.

வன்முறைகள் இடம்பெறுமாயின் அவற்றை உடனுக்குடன் மூன்று மொழிகளிலும் தேர்தல் ஆணையாளருக்கு முறையிடும் வகையில் விசேட குறுந்தகவல்கள் முறை அறிமுகப் படுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

இலங்கை 1947 ஆம்ஆண்டு சுதந்திரம் பெற்றதைத் தொடர்ந்து நடத்தப்படும் 15ஆவது பொதுத் தேர்தல் இதுவாகும். பாராளுமன்றத்தின் 196 பிரதிநிதிகளை நேரடியாகத் தெரிவு செய்வதற்காக இன்று நாடு முழுவதுமுள்ள ஒரு கோடியே 50 இலட்சத்து 44 ஆயிரத்து 490 பேர் வாக்களிக்கவுள்ளனர். 2014 ஆம் ஆண்டு வாக்காளர் இடாப்பின்படியே இந்தத் தேர்தல் நடத்தப்படுகிறது.

இம்முறை பொது தேர்தல் காலத்தில் 6 ஆயிரத்து 151 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். இவர்களுள் அரசியல் கட்சி சார்பில் 3 ஆயிரத்து 653 வேட்பாளர்களும் சுயேச்சைக் குழுக்கள் சார்பில் 2 ஆயிரத்து 498 வேட்பாளர்களும் போட்டியிடுகின்றனர்.

நாடு முழுவதுமுள்ள 22 தேர்தல் மாவட்டங்களில் இன்று காலை 7 மணிமுதல் வாக்கெடுப்பு நடத்தப்படும். இதற்காக 12 ஆயிரத்தி 314 வாக்கெடுப்பு நிலையங்களும் 1600 வாக்கு எண்ணும் நிலையங்களும் நிறுவப்பட்டுள்ளன. இதில் 1288 நிலையங்களில் சாதாரண வாக்குச்சீட்டுக்களும் மிகுதி 312 நிலையங்களில் தபால் மூல வாக்குச் சீட்டுக்களும் எண்ணப்படும்.

170 வெளிநாட்டு கண்காணிப்பாளர் கள் உட்பட சுமார் முப்பது ஆயிரம் பேர் தேர்தல் கண்காணிப்பில் ஈடுபட வுள்ளனர். சுமார் ஒரு இலட்சத்து 25 ஆயிரம் அரசாங்க உத்தியோகத்தர்கள் இம்முறை தேர்தல் கடமைகளில் ஈடுபடுத்தப்படுகின்ற அதேநேரம் சுமார் 70 ஆயிரம் அதிகாரிகள் தேர்தல் எண்ணும் பணிகளுக்காக அமர்த்தப்பட்டுள்ளனர்.

இன்று நடத்தப்படும் பொதுத் தேர்தலின்படி பாராளுமன்றத்திற்கு கொழும்பு மாவட்டத்திலிருந்தே ஆகக் கூடிய எண்ணிக்கையான 19 உறுப்பினர்களும் திருகோணமலை மாவட்டத்திலிருந்தே ஆகக்குறைந்த எண்ணிக்கையான 04 உறுப்பினர்களும் தெரிவு செய்யப்படவுள்ளனர்.

தேர்தல் நடைபெறுவதற்கு 48 மணித்தியாலங்களுக்கு முன்னர் அனைத்து பிரசார நடவடிக்கைகளும் முடிவுக்கு கொண்டு வரப்பட வேண்டுமென்பதற்கு இணங்க கடந்த வெள்ளிக்கிழமையுடன் பிரசாரங்கள் யாவும் முடிவடைந்தன.

வாக்காளர்கள் வாக்களிப்பு நிலையங்களுக்கு செல்ல வேண்டியுள்ள தூரத்திற்கமைய அவர்களுக்குரிய சம்பளத்துடன் கூடிய விடுமுறையை வழங்குமாறு அனைத்து தொழில் வழங்குனர்களுக்கும் தேர்தல்கள் ஆணையாளரினால் வலியுறுத்தப்பட்டுள்ளது.

தேர்தல் கடமையில் ஈடுபடுவோர் மற்றும் க.பொ.த. உயர்ந்தரப் பரீட்சை கண்காணிப்பில் ஈடுபடும் ஆசிரியர்களுக்கான தபால் மூல வாக்களிப்பு கடந்த 03, 05, 06, 08, 11 ஆகிய திகதிகளில் வெற்றிகரமாக நடத்தி முடிக்கப்பட்டிருந்தன.

பாராளுமன்றம் கடந்த ஜூன் 26 ஆம் திகதி ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் கலைக்கப்பட்டது. இதனை தொடர்ந்தே தேர்தல் நடத்தப் படுகிறது.
« PREV
NEXT »

No comments