Latest News

August 23, 2015

காணாமல்போனவர்கள் எங்கே?: ஆணைக்குழு முன்னால் உறவினர்கள்
by Unknown - 0

இலங்கையில் போர்க்காலத்தில் காணாமல்போனவர்கள் பற்றிய விசாரணைக்கான ஜனாதிபதி ஆணைக்குழுவின் மட்டக்களப்பு மாவட்டத்திற்கான 3ம் கட்ட விசாரணை தற்போது நடைபெறுகின்றது.

ஆணைக்குழு விசாரணைகள் கடந்த ஒன்றரை வருடங்களாக நடைபெறுகின்ற போதிலும் இதுவரை இடைக்கால அறிக்கை எதுவும் வெளியாகவில்லை.

அதிகளவான சாட்சியங்களை பதிவுசெய்ய வேண்டியிருப்பதால், தற்போது நடைபெற்றுக் கொண்டிருக்கும் விசாரணையின் போது ஆணைக்குழு உறுப்பினர்கள் தனித் தனியாக அமர்ந்து வாக்குமூலங்களை பதிவு செய்துவருவதாக எமது செய்தியாளர் தெரிவிக்கின்றார்.

நேற்று சனிக்கிழமையும் இன்று ஞாயிற்றுக்கிழமையும் களுவாஞ்சிக்குடி பிரதேச செயலக மண்டபத்தில் நடைபெற்ற விசாரணைக்கு 639 பேர் சாட்சியமளிக்க அழைக்கப்பட்டிருந்தார்கள்.

25 வருடங்களுக்கு முன்னர் காணாமல்போன தமது பிள்ளைகள் மற்றும் கணவன் பற்றியும் பல பெண்கள் வாக்குமூலம் அளித்தனர்.

அவர்களில் ஒருவரான துறைநீலாவணையை சேர்ந்த வள்ளிப்பிள்ளை 1990 ம் ஆண்டு ஜூன் மாதம் 30-ம் திகதி இராணுவ சுற்றிவளைப்பின் பின்னர் விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்ட தனது மகன் உட்பட தமது கிராமத்தை சேர்ந்த 16 பேர் பற்றி இதுவரை தகவல் இல்லை என்று கூறினார்.

தமது உறவுகள் காணாமல்போன சம்பவங்களுடன் இராணுவம், பொலிஸ், விடுதலைப்புலிகள், சிறப்பு அதிரடிப்படை மற்றும் தமிழ் ஆயுதக்குழுக்கள் தொடர்புபட்டிருப்பதாகவே பலரும் தமது சாட்சியங்களில் தெரிவித்துள்ளார்கள்.

இருப்பினும் தற்போதைய அச்சமற்ற சூழ்நிலையிலும் சிலரிடம் இன்னமும் ஒருவித அச்சநிலை காணப்படுவதாகவும், அதனால் அடையாளம் தெரியாத ஆட்களே தங்களின் குடும்ப உறவினர்களை கடத்திச் சென்றதாக அவர்கள் தமது சாட்சியங்களில் கூறுவதை அவதானிக்க முடிந்ததாகவும் எமது செய்தியாளர் குறிப்பிடுகின்றார்.

நாளை திங்கட்கிழமையும் நாளை மறுதினமும் வாழைச்சேனை பிரதேச செயலகத்தில் அடுத்த அமர்வுகள் நடக்கின்றன.
« PREV
NEXT »

No comments