Latest News

August 12, 2015

கே.பி.யை ஒப்படைக்கும்படி இந்தியா கோரிக்கை -ரணில் தெரிவிப்பு
by Unknown - 0

புலிகளின் முக்கியஸ்தர் கே.பி எனப்படும் குமரன் பத்மநாதன் தொடர்பான எதிர்கால நடவடிக்கைகள் குழு ஒன்றிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாகவும், மறுபுறம் இந்திய அரசும் அவரைக் கோரி வருவதாகவும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

2005ம் ஆண்டு தமிழர்கள் வாக்களிக்காதிருக்க தமிழீழ விடுதலைப் புலிகள் பணம் கோரியதாகவும், எனினும் தான் வழங்கவில்லை எனவும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க குறிப்பிட்டுள்ளார்.

தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சியொன்றில் நேற்றிரவு கலந்து கொண்டபோதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அத்துடன் மஹிந்த ராஜபக்ஷ இரண்டு முறை விடுதலைப் புலிகளுக்கு நிதி வழங்கியதாவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

முதலில் 200 மில்லியன்களையும், பின்னர் பிறிதொரு நிறுவனத்தின் ஊடாக 2000 மில்லியன்களையும் இவ்வாறு அவர் வழங்கியதாக ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

ராஜபக்ஷ குடும்பத்தின் எவருக்கும் பாதிப்பு ஏற்படுத்தக் கூடாது என்பதே இதற்கான ஒப்பந்தமாகும் என இங்கு குறிப்பிட்ட ரணில், குறித்த ஒப்பந்தம் 2006ம் ஆண்டு கோத்தபாய மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதலுடன் முடிவுக்கு வந்ததாகவும் கூறியுள்ளார்.

2005ம் ஆண்டு விடுதலைப் புலிகள் பலவீனமடைந்திருந்ததாகவும், அதன் தலைவர்கள் பிளவுபட்டிருந்ததாகவும், அப்போது புலிகளை அழித்திருந்தால் இரண்டு பக்கமும் பாதிப்பு குறைவாக இருந்திருக்கும் எனவும் பிரதமர் இந் நிகழ்ச்சியில் சுட்டிக்காட்டினார்.

எனினும், இந்தக் காலத்தில் மஹிந்த ராஜபக்ஷவின் பணத்தைப் பெற்றுக் கொண்டு விடுதலைப் புலிகள் தம்மை பலப்படுத்திக் கொண்டதாகவும் ரணில் தெரிவித்தார்.

விடுதலைப் புலிகளிடம் இருந்த தங்கம், கப்பல்கள் போன்றன இன்னும் கண்டுபிடிக்கப்படவில்லை எனவும், கண்டுபிடிக்கப்பட்டது கே.பி மட்டுமே எனவும் ரணில் குறிப்பிட்டார்.

கே.பி. தொடர்பான எதிர்கால நடவடிக்கைகள், விஷேட குழு ஒன்றிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாகவும், மறுபுறம் இந்திய அரசும் அவரைக் கோரி வருவதாகவும் ரணில் மேலும் தெரிவித்தார்.
« PREV
NEXT »

No comments