Latest News

August 21, 2015

தமிழரின் இராணுவ வளர்ச்சியும் தமிழரின் தலைவர் சந்தித்த துரோகங்களும்.!!
by admin - 0

சிங்கள அரசின், தமிழர் மீதான இன அடக்கு முறை காரணமாக எழுபதுகளின் ஆரம்பத்தில் தமிழ் இளையோரால் ஆயுத போராட்டம் ஆரம்பிக்கப் பட்ட போது, தனது இளமைக் காலத்தில் ஒரு கைத்துப்பாக்கியுடன் சிங்கள பேரினவாதத்தை எதிர்க்க கிளம்பிய அந்த சிறுவன்,உலகின் நவீன ஆயுதங்களுடன் தமிழீழ தேசிய இராணுவத்தை கட்டி எழுப்பியது மட்டுமல்லாது, தனக்கு பின்னால் வந்த அடுத்த சந்ததிக்கும் வழிகாட்டி அவர்களையும் உலகின் தலைசிறந்த போராளிகளாக எப்படி உருவாக்க முடிந்தது.?

புலிகள் அமைப்பில் பல்லாயிரம் போராளிகளையும், அவர்களுக்கு துணையாக ஈழத் தமிழர்களுடன் ,உலகத் தமிழர்களையும் எப்படி அவரால் ஒன்றிணைக்க முடிந்தது.?

 தலைவரை பார்த்ததோ அல்லது நேரில் எந்த வித தொடர்பும் இல்லாதவர்கள் கூட அவரை உயிராக நேசிக்க காரணம் என்ன? 

அதற்கு முக்கிய காரணி தலைவரின் ஒழுக்கம், கொண்ட கொள்கையில் அவருக்கு இருந்த உறுதி, தமிழ் மக்கள் மீதான அன்பு, மற்றும் இராணுவ மதி நுட்பம். இப்படி சொல்லிக் கொண்டே போகலாம்.

ஆனால் இந்த சாதனைகளின் பின்னால் தலைவர் சந்தித்த துரோகங்களின் பட்டியலும் மிக மிக நீளமே.! 

புலிகளின் சாதனைகள் மட்டுமல்ல அவர்கள் சந்தித்த துரோகங்களையும் தமிழர் அறிய வேண்டும். இவைகளை தலைவர் எப்படி கடந்து வந்தார் என்று அறியும் போது, இது போன்ற துரோகங்கள் எம்மை குலைய விடாது தொடர்ந்து நம்பிக்கையுடம் முன்னேற வழியமைக்கும்.தலைவர் சந்தித்த முக்கியமான துரோகங்களை ஒவ்வொன்றாக பார்ப்போம்.

முதலாவது துரோகம்,

 ஆரம்ப காலகட்டத்தில் புலிகள் அமைப்பின் முக்கிய பொறுப்பில் உமாமகேஸ்வரன் இருந்தார். இவர் 1978 இல் புலிகள் உரிமைகோரிய தாக்குதல்களுக்கான (அந்த நேரத்தில் சில காரணங்களுக்காக பல தாக்குதல்கள் உரிமை கோரப்படவில்லை) தட்டெழுத்து மற்றும் எல்லா பத்திரிகை நிறுவனங்களூக்கு கடிதம் அனுப்புவதற்கு, ஊர்மிளா என்பவர் உமா மகேஸ்வரனால் பயன்படுத்தப்பட்டார்.


இந்த ஊர்மிள என்பவர் உமாமகேஸ்வரனின் நண்பி ஆவார். இவரால் தான் புலிகளமைப்பில் ஊர்மிலா பணிக்கு அமர்த்தப் பட்டார்.

 அந்த நேரத்தில் இவருக்கும் ஊர்மிலாவிற்கும் ஏற்பட்ட பாலியல் தொடர்பினால், புலிகளின் கொள்கைக்கு அமைவாக இவர் மேல் மத்திய குழுவால் ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப் பட்டு மரணதண்டனை தீர்ப்பும் வழங்கப் பட்டது.அதில் இருந்து தப்பிய உமாமகேஸ்வரன் தலைமறைவாகினார். 

இரண்டாவது பெரிய துரோகம் 

1980 ஜூன் மாதத்தில் புலிகள் அமைப்பில் முதல் பிளவு ஏற்பட்டது. இதில் 13 பேர் தலைவரை விட்டு பிரிந்து கொண்டனர். அந்த கால கட்டத்தில் இந்த பிளவு பெரும் பாதிப்பாக அமைந்தது. இதில் நாகராசா, தமிழ்மாறன் (பின்னர் என்.எல்.எவ்.டி), நெப்போலியன் (பின்னர் தமிழ் மக்கள் பாதுகாப்பு பேரவை தலைவர்), ரவி, சுந்தரம், நிர்மலன் போன்றவர்கள் வெளியேறிக் கொண்டனர். சுந்தரம் புதியபாதை என்ற பெயரில் இயங்க தொடங்கினார். தனி அமைப்பை தொடங்கியவர்கள் தவிர, ஏனைய சிலருடன் தொடர்பை ஏற்படுத்தி உமாமகேஸ்வரனால் உருவாக்கப் பட்டதே புளட் இயக்கம் ஆகும். 

அந்த நேரத்தில் இரண்டாக இயக்கம் உடைந்த போதும் தலைவருடன் உண்மையான போராளிகள் அவருடன் துணை நின்றனர். 

அதில் மிக முக்கியமானவர் லெப்.சீலன் அண்ணை ஆகும். இதன் பின் 1989ம் ஆண்டு உமாமகேஸ்வரன் இனம் தெரியாதோரால் கொழும்பில் வைத்து சுட்டுக் கொல்லப் பட்டார்.

மூன்றாவது

1987ம் ஆண்டு தலைவர் இந்திய இராணுவத்துடன் சண்டை யிடும் முடிவை எடுத்ததும் போராளிகளிடம் தனது முடிவை கூறி, நான் இந்திய இராணுவத்துடன் மோதப் போகின்றேன் இதனால் எனக்கு மரணம் கூட சம்பவிக்கலாம்.! இயக்கம் கூட அழிந்து போகலாம், விரும்பியவர்கள் என்னோடு நிற்கலாம் விருப்பமில்லாதவர்கள் விலகிச் செல்லலாம் என்னும் முடிவை தெரிவித்த போது அந்த நேரத்தில் மத்திய குழுவை சேர்ந்த குண்டப்பா என்பவருடன் பல போராளிகள் விலகிச் சென்றனர். 

அந்த நேரத்தில் இதுவும் மிகப் பெரிய நம்பிக்கை துரோகமே. 

நான்கு 

அதனைத் தொடர்ந்து இந்திய இராணுவத்துடன் சண்டை ஆரம்பமான பின் யாழ் மாவட்ட தளபதியாக இருந்து சண்டையை வழிநடத்திக் கொண்டிருந்த பிரபா என்பவர் தனது அணியினருடன் அமைப்பை விட்டு யாருக்கும் சொல்லாது வெளிநாடு சென்று விட்டார். 

அதனால் அந்த நேரத்தில் யாழ்பாணம் மிகப் பெரும் நிர்வாக சீர்குலைவை சந்தித்தது. அதன் பின் சந்தோசமண்ணை, மதியண்ணை. பாண்டியண்ணை, இம்ரானண்ணை போன்ற தளபதிகளால் மீள் ஒழுங்கு செய்யப் பட்டு சண்டையை தொடர்ந்து முன்னெடுத்தனர் புலிகள்.

ஐந்தாவது துரோகம்

1993இல் மாத்தையா அவர்களால் மேற்கொள்ளப் பட்டிருந்த மிகப் பெரும் துரோகம் புலிகளால் முறியடிக்கப் பட்டிருந்தது. (இது பற்றி விரிவாக எனது முன்னைய பதிவில் விபரித்துள்ளேன்) இந்திய அரசின் ரோ உளவுத்துறையினருடன் இணைந்து தலைவரை கொல்லும் முடிவுடன் மேற்கொள்ளப்பட்டது. 

பல முயசிகளுடன், தலைவருக்கு அடுத்த நிலையில் இருந்த ஒருவரின் துரோகம் மிகவும் தலைவரை பாதித்த போதும் தலைவர் துவண்டு போகவில்லை.

 இந்த சதியின்போது முக்கிய பொறுப்பில் இருந்த பலர் அகற்றப் பட்டு பெரும் குழப்பத்துக்கு வழி கோலியபோதும் தலைவர் அதையும் கடந்தார். 

ஆறாவது

அடுத்தது யாழ்மாவட்டம் சூரியக்கதிர் இராணுவ நடவடிக்கை மூலம் சிங்கள இராணுவம் கைப்பற்றுவதற்கு முக்கிய காரணமாக இருந்தவன். புலிகளின் இராணுவ உளவுத்துறையை சேர்ந்த "ஒப்பிலாமணி" என்பவன் ஒழுக்காற்று நடவடிக்கை காரணமாக தண்டனைக்கு உள்ளாக இருந்த நேரம் புலிகளிடம் இருந்து தப்பி பலாலி இராணுவத்துடன் தொடர்பை ஏற்படுத்தி அவர்களின் உதவியுடன் அவர்களிடம் சரணடைந்தான்.

முதல் முதலில் சிங்கள இராணுவத்திற்கு கிடைத்த பெறுமதியான ஒரு துரோகி ஒப்பிலாமணி. அவன் மூலமாகவே புலிகளின் அந்த நேரத்து பலம்,பலவீனம் அறியப் பட்டு, அவனது ஆலோசனையின் பேரிலேயே சூரியக்கதிர் இராணுவ நடவடிக்கை சிங்கள அரசால் ஆரம்பிக்கப் பட்டு 1996இல் யாழ் குடாநாடு எதிரியிடம் வீழ்ந்தது.

இதற்கு பிரதி உபகாரமாக,அன்றைய பாதுகாப்பு அமைச்சர் கேணல் ரத்வத்தையால் ஒப்பிலாமணிக்கு மேஜர் தரம் வழங்கி கவுரவிக்கப் பட்டு, சொகுசு வாகனம் ஒன்றுடன் ஐந்து மெய்ப்பாதுகாவலரும் வழங்கப் பட்டது.

இவன் மீது யாழ் பிரதான வீதியில் வைத்து புலிகளால் தாக்குதல் ஒன்று மேற் கொள்ளப் பட்டு மயிரிலையில் உயிர் தப்பி இருந்தான். எப்படியும் புலிகளால் கொல்லப் படுவோம் என்பதை உணர்ந்ததும் சிங்கள அரசின் உதவியுடன் 1998இல் வேறு பெயரில் கனடாவிற்கு சிங்கள அரசால் அனுப்பப் பட்டு இன்றுவரை கனடாவின் தீவு ஒன்றில் வைத்து பாதுகாக்கப் படுகின்றான்.

ஏழாவது முக்கிய துரோகம்

அடுத்தது மிக முக்கியமானது கருணாவின் துரோகம். அவனும் ஒழுக்காற்று நடவடிக்கைக்கு அஞ்சி தன்னுடன் ஐயாயிரத்துக்கு மேற்பட்ட போராளிகளை பிரதேசவாதம் என்னும் "கானல்நீரைக்" காட்டி பிழையாக வழிநடத்தி தனது சுயநலத்திற்காக பல்லாயிரம் போராளிகள், பல லட்சம் மக்களின் மரணத்தையும் விலை பேசி முள்ளிவாய்க்கால் வரை துரோகம் கூடவே வந்தது.

தமிழம் பெரும் பாரம்பரியத்தை கொண்டிருந்த போதும் தமிழனுக்கென்று ஒரு நாடு இல்லாது போனதற்கு முக்கிய காரணமும் கூடவே தொடரும் துரோகங்களும், ஒற்றுமை இன்மையும்,ஆதிக்கப் போட்டியும், ஒருவர் மீது வசை பாடுவதும், நான் என்னும் மமதையும், என பல காரணம். இது தமிழனுக்கு கிடைத்த சாபமே தவிர வேறில்லை.!!!

வலிகளுடன் துரோணர்...!!!
« PREV
NEXT »

No comments