Latest News

August 03, 2015

தமிழர்களுக்கான இனப்பிரச்சினையை தீர்க்க சர்வதேசம் விழிப்பாக செயற்படுகிறது: சீனித்தம்பி யோகேஸ்வரன்
by admin - 0

தமிழ் மக்களுக்கு இன ரீதியான பிரச்சினை இருக்கின்றது அவர்களுக்கு நிரந்தர தீர்வொன்றைப் பெற்றுக் கொடுக்க வேண்டும் என்பதில் சர்வதேச சமூகம் விழிப்பாக செயற்பட்டுக் கொண்டிருப்பதாக தமிழ் மக்கள் செல்லக் கூடாதென தமிழ் தேசிய கூட்டமைப்பின் வேட்பாளர் சீனித்தம்பி யோகேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

மட்டக்களப்பு கல்குடா தொகுதியிள்ள வாகரை பால்ச்சேனையில் தேர்தல் பிரச்சார அலுவலகத்தை திறந்து வைத்து உரையாற்றுகையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார். மேலும் தெரிவிக்கையில்,

நாம் எதிர்கொள்ளவுள்ள பாராளுமன்ற தேர்தல் இலங்கையில் ஐக்கிய நாடுகள் சபை நடாத்துகின்ற தேர்தலாக நாம் கருத வேண்டும். இந்த தேர்தலின் முடிவு கடந்த காலங்களில் தாயக மண்ணிலே நடைபெற்ற இனப்படுகொலையைக் கண்டித்து ஐக்கிய நாடுகள் சபையிலே கொண்டு வரப்படும் பிரேரணைக்கு சார்பான வாக்குகளாக அமைந்திட வேண்டும் அந்த ஒரு எண்ணத்துடன் நாம் செயற்பட வேண்டும்.

எமது இளைஞர்கள் விடுதலையைப் பெற்றுத்தருவதற்காக செய்த தியாகங்களை நாம் எளிதில் மறந்து விட கூடாது. அந்த தியாகங்களை உலகமே பொறுத்துக் கொள்ள முடியாமல் மிகப்பெரிய வீர வரலாற்றை தாயக மண்ணிலே புதைத்து விட்டார்கள். எங்களுடைய உரிமைகளை அவ்வாறு நசுக்கப்பட கூடாது.

அன்பார்ந்த உறவுகளே இளைஞர்கள் செய்த தியாங்களைப் போன்று பாரிய தியாகங்களை செய்யாவிட்டாலும் வருகின்ற பாராளுமன்ற தேர்தலிலே வீடு சின்னத்துக்கு வாக்களிப்பதன் இது நாங்கள் மௌனமாகவிருந்து செய்கின்ற புரட்சியாக அமையும். ஐக்கிய நாடுகள் சபையிலே கொண்டு வரப்படும் தீர்வுத் திட்டத்துக்கு நாங்கள் வழங்கும் ஒவ்வொரு வாக்குகளும் உரமாக அமைய வேண்டும்.

இலங்கைத் தீவிலே தமிழ் மக்களுக்கு இன ரீதியான பிரச்சினை இருக்கின்றது. அவர்களது உரிமை பெற்றுக் கொள்வதற்காக பலவருட காலமாக போராடிக் கொண்டிருக்கிறார்கள். அவர்களுக்கு நிரந்தர தீர்வொன்றைப் பெற்றுக் கொடுக்க வேண்டும் என்பதில் சர்வதேச சமூகம் விழிப்பாக செயற்பட்டுக் கொண்டிருக்கிறது.

உலக வரலாற்றிலே 65 ஆண்டுகளுக்கு மேலாக அடித்து துவைத்து அடிமையாக்கப்பட்ட ஒரு இனம் தமது உணர்வுகளையும், உரிமைகளையும் கைவிடாத நிலையில் இன்றும் போராடிக் கொண்டிருக்கிறது என்ற செய்தி வருகின்ற தேர்தல் முடிவின் மூலம் ஐக்கிய நாடுகள் சபையிலே ஓங்கி ஒலிக்க வேண்டும்.

நாங்கள் எங்களது உரிமைகளுக்காக நியாயமான முறையில் போராடும் இனம் எங்கள் மண்ணிலே உரிமையுடன் சுதந்திரமாக வாழ வேண்டும் அதற்காக தமிழர்கள் தமிழ் தேசிய கூட்டமைப்புக்கு வாக்களியுங்கள் தேசிய சிங்கள கட்சிகளிலும் தமிழ் வேட்பாளர்கள் நிறுத்தப்பட்டுள்ளார்கள். அவர்களில் பலர் உங்கள் உறவினர்களாகவும் இருக்கலாம் அவர்களுக்கு நீங்கள் வழங்கும் வாக்குகள் மூலம் ஒரு தமிழ் பிரதிநிதியை தெரிவு செய்ய முடியாது மாறாக எமது வாக்குகளினால் முஸ்லிம்களே தெரிவு செய்யப்படுவார்கள் இது கடந்த கால படிப்பினைகள் இம்முறை தேர்தலில் உறவுக்காக வாக்களிக்காமல் உரிமைக்காக வாக்களியுங்கள்” என்றார்.
« PREV
NEXT »

No comments