Latest News

August 12, 2015

தமிழீழக் கிண்ணத்திற்கான தமிழர் விளையாட்டு விழா 2015- சுவிஸ்
by admin - 0

தமிழீழக் கிண்ணத்திற்கான தமிழர் விளையாட்டு விழா 2015- சுவிஸ்


சுவிஸ் தமிழர் இல்லம் அனைத்துலக ரீதியில் நடாத்திய தமிழீழக் கிண்ணத்திற்கான தமிழர் விளையாட்டுவிழா 2015 ஓகஸ்ட் மாதம் 08ம், 9ம் திகதிகளில் சூரிச் வின்ரத்தூர் நகரில் அமைந்துள்ள Sportanlage Deuttweg    மைதானத்தில் வெகுசிறப்பாக நடைபெற்று முடிந்தது. புலம் பெயர்ந்து வாழும் எமது இளம் தலைமுறையினரிடம் தாயகம் நோக்கிய தேடலை  ஏற்படுத்தும் நோக்ககில் தமிழர் இல்லம் இச்சுற்றுப் போட்டியினை நடாத்தி வருகின்றது. நடைபெற்று முடிந்த இந்நிகழ்வில் பங்கேற்பதற்காக ஐரோப்பாவின் பல்வேறு பகுதிகளிலிருந்தும், கனடா உள்ளிட்ட ஏனைய நாடுகளிலிருந்தும் ஏராளமான அணிகள் வருகைதந்திருந்தன.

இருதினங்களும் காலை 9 மணியளவில் தமிழீழத் தேசியக்கொடியேற்றலுடன் விளையாட்டு விழா நிகழ்வுகள் ஆரம்பமாகின. மாவீரர்களுக்கான அகவணக்கத்தை தொடர்ந்து ஒலிம்பிக் தீபம் ஏற்றுதல், வீரர்கள் உறுதிப்பிரமாணம் எடுத்தல் என்பவற்றுடன் போட்டிகள் மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்றது.

ஆண்கள் பெண்களுக்கான உதைபந்தாட்டம், கரப்பந்தாட்டம், கிளித்தட்டு, துடுப்பாட்டம், முதலான குழுவிளையாட்டுக்களில் இம்முறை அதிக எண்ணிக்கையிலான அணிகள் களமிறங்கின.

குறிப்பாக உதைபந்தாட்டப் போட்டியில் ஒவ்வொரு வயதுப்பிரிவிலும் பல அணிகள் மோதின. வளர்ந்தோர்; உதைபந்தாட்ட இறுதியாட்டம் சனியன்று இரவு மின்னொளியில் மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்றது. இரண்டாம் நாள் இடம்பெற்ற மென்பந்து துடுப்பாட்ட போட்டியில் 36 அணிகள் பங்கேற்றமை குறிப்பிடத்தக்கதாகும்.

இளையோருக்கான தடகளப் போட்டிகளிலும் இவ்வருடம் பல போட்டியாளர்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டமையை அவதானிக்க முடிந்தது.

ஞாயிற்றுக்கிழமை மாலையில் இடம்பெற்ற சங்கீதக்கதிரை, கண்கட்டி முட்டி உடைத்தல், போன்ற நிகழ்வுகளில் பங்கேற்க பெரும் எண்ணிக்கையிலான பார்வையாளர்கள் முண்டியடித்தமையை காண முடிந்தது. தமிழர்களின் பாரம்பரிய கிராமிய விளையாட்டுக்களில் ஒன்றான தலையணை அடிப்போட்டியில் எம்மவர்கள் மாத்திரமன்றி ருமேனியா, எரித்திரிய உள்ளிட்ட வேற்று நாட்டவர்களும், தாமாகவே முன்வந்து பங்கேற்றமை வியப்பளித்தது.

உதைபந்தாட்டம் முதலான குழுநிலைப் போட்டிகளில் ஒவ்வொரு போட்டிகளிலும் அணிகள் மூர்க்கத்துடன் மோதிக் கொண்டாலும், போட்டிகள் முடிந்தவுடன் பகையுணர்வோ, பொறாமையோ இன்றி சக அணிகளின் வீரர்களை கட்டித்தழுவி நட்புணர்வை வெளிப்படுத்தியமை பார்வையாளர்களை மெய்சிலிர்க்க வைத்தது.

இருதினங்களும் சிறுவர்கள், இளையோர்கள், வளர்ந்தோர்கள் என பல நூற்றுக்கணக்கான போட்டியாளர்கள் மிகுந்த உற்சாகத்துடனும் குதூகலத்துடனும், போட்டிகளிலில் பங்கேற்றனர். போட்டிகளில் வெற்றியீட்டியவர்களுக்கு பெறுமதிமிக்க வெற்றிக்கிண்ணங்களும், பதக்கங்களும் வழங்கப்பட்டன.

எதிர்காலத்தில் விளையாட்டுத்துறையில் அனைத்துலக ரீதியில் சாதிக்க கூடிய திறமை மிக்க தமிழ் இளந்தலைமுறையினர் புலம்பெயர்ந்த நாடுகளில் வளர்ந்து வருகின்றமையை இம்முறை விளையாட்டு விழாவில் அவதானிக்க முடிந்தது. இது போன்ற விளையாட்டு நிகழ்வுகள் மூலம் புலத்திலுள்ள இளையோர் மத்தியில் தாயகம் குறித்த புரிதல் விரிவடைகின்றது.



 விளையாட்டுவிழா - ஏற்பாட்டுக்குழு      
 தமிழர் இல்லம் - சுவிஸ் 12.08.2015


















« PREV
NEXT »

No comments