Latest News

July 12, 2015

வடக்கில் சிவில் நடவடிக்கையில் தலையிடும் இராணுவம் !
by Unknown - 0

வடக்கில் நிலை கொண்டுள்ள இலங்கை இராணுவத்தினர் மக்களின் சிவில் நடவடிக்கையில் தலையிடுவது மக்கள் மத்தியில் பெரும் அழுத்தத்தை தரும் நடவடிக்கையாக தொடர்ந்தும் இடம்பெறுவதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

இராணுவத்தின் தொடர் ரோந்துகளும் வீடுகளை ஊடறுத்துச் செல்லும் சோதனை நடவடிக்கைகளும் ஆட்சி மாற்றம் ஏற்பட்டபோதும் வடக்கில் நிலவும் இராணுவ ஆட்சியில் எந்த மாற்றத்தையும் ஏற்படுத்தவில்லை என்று மக்களை உணரச் செய்கிறது.  

வடக்கில் வவுனியாவில் உள்ள சோதனைச் சாவடியை தாண்டி பயணிக்கத் தொடங்கினால் இராணுவத்தினரை பார்க்க இடமில்லை. அவர்கள் வடக்கின் தெருக்கள் தோறும் இராணுவ ரோந்துகளில் ஈடுபட்டு மக்களை கண்காணித்துக் கொண்டிருக்கின்றனர்.  


வடக்கில் தொடர்ந்தும் மக்கள் கண்காணிக்கப்படுவது அந்த மக்களை இராணுவ அச்சுறுத்தலுக்கு உள்ளாக்குவதுடன் தொடர்ந்தும் பீதி நிறைந்த வாழ்க்கைக்குள் தள்ளுகிறது. எப்போதும் எந்த வேளையிலும் இராணுவத்திற்குப் பதில் சொல்ல வேண்டிய ஒரு வாழ்வை வாழ்வதாக வடக்கின் மக்கள் கூறுகின்றனர். 

இதேவேளை தங்களைப் போன்ற பெண்கள் வடக்கின் இராணுவச் சூழலில் பெரும் அச்சத்திற்கும் பதற்றத்திற்கும் முகம் கொடுக்கும் வாழ்வை வாழ்வதாக வள்ளிப்புனத்தில் வசிக்கும் இளம் விதவைப் பெண் ஒருவர் குறிப்பிட்டார்.   
தன்னைப் போன்ற பெண் தலைமைத்துவ குடும்பங்கள் இராணுவ நெருக்கடிகளுக்கு முகம் கொடுத்து வருவதாக கூறுகின்றனர். இராணுவத்தினர் சுற்றுலாத்தளத்தில் உல்லாசம் கழிக்க வந்தவர்கள் போல நடமாடுவதாகவும் அந்தப் பெண் விபரித்தார். 

நேற்றைய தினம் இரண்டு பல்கலைக்கழக மாணவர்கள் விசுவமடுக்குளத்தில் குளிக்கும்போது மூழ்கி உயிரிழந்திருந்தனர். அவர்களின் சடலம் தர்மபுரம் வைத்தியசாலையில் வைக்கப்பட்டபோது அங்கு மாணவர்கள் உள்ளிட்டவர்கள் திரண்டனர்.

அந்த இடத்தில் இராணுவத்தின் புலனாய்வாளர்களும் வருகை தந்து உயிரிழப்பின் அவலத்தின் இருப்பவர்கள் மிரளும்படியாக தமது கண்காணிப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டனர். இராணுவ சீருடை தரித்த இராணுவமும் விசாரணை செய்தது. 

வடக்கில் இராணுவத்தினர் மக்களின் சிவில் நடவடிக்கையில் தலையிடுகின்றனர். குறித்த மரணம் தொடர்பில் பொலிஸாரும் நீதிபதியும் விசாரணை செய்து மரண அறிக்கை கொண்டுவரவேண்டிய நிலையில் இராணுவத்தினரும் ஒருபுறத்தில் இவ்வாறு செயற்படுகின்றனர்.  

இவைகள் வடக்கில் நடப்பது இராணுவ ஆட்சி என்பதையும் வடக்கில் எத்தகைய இராணுவ மயம் நிலவுகிறது என்பதையும் காட்டுகிறது. எந்த மக்களும் தொடர்ந்தும் தம்மை இராணுவ சீருடைகள் தொடர்வதையும் தொந்தரவு செய்வதையும் கண்காணிக்கப்படுவதையும் விரும்பமாட்டார்கள். 

இதுவே இந்த மக்களின் வாழ்வில் அவர்களது சூழல் குறித்த அவ நம்பிக்கையை அச்சத்தை பாதுகாப்பற்ற சூழலை தொடர்ந்தும் நிர்பந்திக்கிறது. போரால் பெரும் பாதிப்புக்களுக்கு முகம் கொடுத்த மக்களுக்கு இந்தச் சூழல் ஆரோக்கியமற்றது என்பதே பலரதும் கருத்து. 

இராணுவத்தை வடக்கில் தொடர்ந்து நிலை நிறுத்தும் உத்தரவாதத்தை தெற்கில் இலங்கை அரசு வழங்குகிறது. ஆனால் வடக்கில் உள்ள மக்களோ இராணுவச் சூழலில் தொடர்ந்தும் நெருக்கடி மிக்க யுத்த கால வாழ்வை எதிர்கொள்ளுகின்றனர். 









நன்றி globaltamilnews

« PREV
NEXT »

No comments