Latest News

July 17, 2015

வடக்கில் புலிகளை மக்கள் தேடுகின்றார்கள்!-மஹிந்த ராஜபக்ச
by admin - 0

வடக்கில் பெண்கள் தனியாகச் செல்ல அச்சப்படுகின்றனர். இந்நிலையில் விடுதலைப் புலிகள் இருந்தால் நல்லது எனக் கூறுகிறார்கள். இந்த நிலைமைக்கு நாட்டைக் கொண்டு வந்தவர்கள் யார்? என தனது முதலாவது தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச கேள்வி எழுப்பியுள்ளார்.

ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் முதலாவது தேர்தல் பிரசாரம் கூட்டம் அநுராதபுரத்தில் ஆரம்பமானது.

மைத்திரிபால சிறிசேன பற்றி பேசாத மகிந்த


இக்கூட்டத்தில் தனக்கு எதிராக செயற்பட்டவர்கள் எனக் கருதும் அத்தனை பேரையும் பற்றியும் பேசிய முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச, இந்நாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பற்றி எதுவுமே கூறவில்லை.

கடந்த இரு தினங்களுக்கு முன்னர் நாட்டு மக்களுக்கு உரையாற்றிய மைத்திரிபால சிறிசேன, மகிந்த ராஜபக்சவிற்கு தன்னுடைய ஆதரவு இல்லை என்றும், அவர் தேர்தலில் தோற்றுப்போவார் என்றும், ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பில் யார் அதி கூடிய வாக்குகளைப் பெறுகின்றாரோ அவரையே பிரதமராக நியமிப்பேன் என்றும் கூறியிருந்தார்.

இந்நிலையில், ஜனாதிபதியின் கருத்திற்கு சரியான பதிலை தான் அநுராதபுரத்தில் வழங்குவேன் என்று மகிந்த ராஜபக்ச தெரிவித்திருந்த போதிலும், அவர் அக் கூட்டத்தில் மைத்திரிபால சிறிசேன பற்றி பேசவில்லை.

மாறாக, முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பற்றியும்,பிரதமர் ரணில் விக்ரமசிங்கவையும், புலிகளைப்பற்றியும் பேசியிருந்தார்.

யாராலும் என்னை எதுவும் செய்ய முடியாது!

"அன்று பிரபாகரன் மஹிந்தவைக் கொல்ல வேண்டும் என்றார் அதேபோல இன்று ரணில் ராஜபக்‌ஷவைத் துடைத்து வீச வேண்டும் என்கிறார். ஆனால் என்னை யாராலும் ஒன்றும் செய்துவிட முடியாது.

எமது கட்சியில் இருந்த அடிப்படைவாதிகள் இப்போது ஐக்கிய தேசியக் கட்சியுடன் இணைந்து விட்டனர். எனவே இனி எங்களால் இனங்களுக்கு இடையே நல்லிணக்கத்தை ஏற்படுத்த முடியும் என்றார்.

"நாம் இன்று நாட்டுக்கு உயிரூட்டும் பயணத்தை ஆரம்பித்துள்ளோம். ஜனவரி 9 ஆம் திகதி இறுதி தேர்தல் முடிவுகள் வெளியாகும் முன்னரே நான் மெதமுலனவுக்கு சென்று விட்டேன்.

மக்களை நானே முதலில் சந்தித்தேன் அதற்குப் பின்னர் மக்கள் என்னைப் பார்க்க என் வீட்டுக்கு வந்தனர். இதுதான் மக்கள் என் மீது வைத்துள்ள பாசமும் மரியாதையும்.



2005 இல் நாம் அரசாங்கத்தை அமைத்தபோது பல இடங்களில் மின்சாரம் இல்லை. சீரான வீதிகள் இல்லை. உலகின் மிகப் பயங்கரமான தீவிரவாதிகளே இருந்தனர். அவர்களை ஒழித்துக் கட்டினோம்.

மின்சாரம் வழங்கினோம், தரமான வீதிகளை அமைத்ததுடன் வடக்குக்கு ரயில் சேவையையும் தொடங்கினோம். வடக்கில் தேர்தலையும் நடத்தினோம். இல்லாவிடின் ரணில் போன்றவர்களால் இவ்வாறு செயற்பட முடியுமா?

ஜனவரி 8 ஆம் திகதிக்குப் பின்னரும் ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைமைப் பொறுப்பை என்னிடமே வைத்திருக்க முடியும். ஆனால் நான் அவ்வாறு செய்யவில்லை. கட்சியைப் பாதுகாக்க வேண்டும் என்பதற்காக தியாகங்களை செய்தேன்.

நல்லாட்சியின் மாற்றம் குறித்து அனைவரிடமும் விசாரணை நடத்தினர். பிக்குகளிடம் கூட விசாரணை தொடர்ந்தது.

பிரபாகரனிடம் மண்டியிட்ட ஆட்சியாளர்கள்!

1978 இன் பின்னர் ஆட்சியாளர்கள் பிரபாகரனிடம் மண்டியிட்டனர். வடக்கில் இராணுவத்தைத் தோற்கச் செய்ய நாட்டை புலிகளுக்குக் காட்டிக் கொடுத்தனர். ஆனால் தவறிக் கூட அவ்வாறு நடக்கவில்லை. மக்கள் பணத்தை நான் ஒருபோதும் கொள்ளையடிக்கவில்லை.

இந்த ராஜபக்‌ஷ ஒருபோதும் மதுபானசாலைகளுக்கு அனுமதி கொடுக்கவில்லை. இன்று நாடு போதைப் பொருளால்  நிறைந்துள்ளது. பாடசாலைகளிலும் விற்கப்படுகின்றன. யுத்தத்தை முடித்து நாம் செய்த அபிவிருத்தியை 100 நாட்களில் நிறுத்திவிட்டனர்.

வடக்கில் புலிகளை மக்கள் தேடுகின்றார்கள்!

வடக்கில் பெண்கள் தனியாகச் செல்ல அச்சப்படுகின்றனர். இந்நிலையில் விடுதலைப் புலிகள் இருந்தால் நல்லது எனக் கூறுகிறார்கள். இந்த நிலைமைக்கு நாட்டைக் கொண்டு வந்தவர்கள் யார்?

அன்று பிரபாகரன் மஹிந்தவைக் கொல்ல வேண்டும் என்றார் அதேபோல இன்று ரணில் ராஜபக்‌ஷவைத் துடைத்து வீச வேண்டும் என்கிறார். ஆனால் இந்த மஹிந்த ராஜபக்‌ஷவை ஒருபோதும் அப்படி செய்து விட முடியாது.

நான் சிறு வயதிலிருந்தே ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியில் இருக்கிறேன். கட்சிக்காக சிறைவாசம் அனுபவித்தேன். தாயான கட்சியிலிருந்து பிள்ளைகள் விட்டுப் போகும்போது இந்தப் பிள்ளைதான் தாய்க்குத் துணையாக இருந்தது என அவர் தெரிவித்தார்.
« PREV
NEXT »

No comments