Latest News

July 23, 2015

அர்ஜுன மஹேந்திரன் விடுதலை புலிகள் ஆதரவாளர் -அமைச்சர் மஹிந்த அமரவீர
by Unknown - 0

அர்ஜூன மகேந்திரன் புலி ஆதரவாளர். அவரை மத்திய வங்கி ஆளுநர் பதவியிலிருந்து வெளியேற்ற வேண்டுமென்று ஜனாதிபதியிடம் வேண்டுகோள் விடுப்பதாக அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.

மத்திய வங்கி ஆளுநர் அர்ஜூன மகேந்திரன் வெள்ளை வான் கடத்தலுக்கு பயந்தே வெளிநாடு சென்றதாக சொல்லப்படுவதில் உண்மையில்லை.

முள்ளிவாய்க்காலில் பிடிபட்ட “கஸ்ட்ரோ” என்ற புலி உறுப்பினரை எமது படையினர் விசாரித்தபோது, அன்று முதலீட்டுச் சபை தலைவராக பதவிவகித்த அர்ஜூன மகேந்திரன் புலிகளுக்கு உதவி செய்தமை தெரியவந்துள்ளது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

இதற்கு பயந்தே அவர் வெளிநாடு சென்றுள்ளார். மத்திய வங்கியில் அவர் மேற்கொண்ட பாரிய மோசடிக்காக அவரை பதவி நீக்கம் செய்ய ஜனாதிபதி நடவடிக்கை எடுக்க வேண்டும்.

கொழும்பில் நேற்று புதன்கிழமை இடம்பெற்ற ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் ஊடகவியலாளர் மாநாட்டில் உரையாற்றும் போதே அமைச்சர் மஹிந்த அமரவீர இவ்வாறு தெரிவித்தார்.

அமைச்சுப் பதவிகளை வகிக்கும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியினர் பதவிகளை துறந்து அரசை விட்டு வெளியேற முடிவு செய்துள்ளனர். எனவே அவசரமாக கட்சியின் மத்திய செயற்குழுவை கூட்டுமாறு ஜனாதிபதியிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது என்றும் அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.
அமைச்சர் இங்கு தொடர்ந்து உரையாற்றுகையில்,

ஜனாதிபதியும், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவருமான மைத்திரிபால சிறிசேன தலைமையில் கூடிய கட்சியின் செயற்குழு கூட்டத்திலேயே அரசாங்கத்தில் அமைச்சுப் பதவிகளை பெற்றுக் கொள்ள தீர்மானிக்கப்பட்டது. அதற்கமைய அமைச்சுப் பதவிகளை பெற்றுக் கொண்டோம்.

ஆனால் தற்போது ஐ.தே.கட்சி அரசின் நடவடிக்கைகளில் எமக்கு திருப்பதியில்லை. அமைச்சரவையில் அனைவரது பங்களிப்போடு தீர்மானங்களை எடுப்பதில்லை.

பொருளாதாரத்தை அபிவிருத்தி செய்வதில் எவ்விதமான திட்டங்களும் இல்லை. எனவே அமைச்சர் பதவிகளை கைவிட்டு மஹிந்த ராஜபக் ஷவுடன் இணைந்து எமது கட்சியின் வெற்றிக்காக செயல்படத் தீர்மானித்துள்ளோம். எனவே அவசரமாக கட்சியின் மத்திய செயற்குழு கூட்டத்தை கூட்டுமாறு ஜனாதிபதிக்கு கோரிக்கை விடுத்துள்ளோம்.

கூட்டத்தின் பின்னர் அனைவரும் அமைச்சுப் பதவிகளை துறப்போம் என்றும் அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்தார்.
« PREV
NEXT »

No comments