‘முஜா’ என்றழைக்கப்படும் மொஹமட் முபாரக் மொஹமட் முஜாஹிம் தலைமையிலான சர்வதேச போதைப் பொருள் கடத்தல் வலைப்பின்னலின் சுமுகமான செயற்பாடுகளுக்கு முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தாபய ராஜபக்ஷ அரச அனுசரணை வழங்கியுள்ளமை சாட்சியங்களுடன் உறுதியாகியிருப்பதாக பிரதியமைச்சர் ரஞ்சன் ராமநாயக்க தெரிவித்தார்.
இலங்கையை போதைப்பொருள் கடத்தல் மத்திய நிலையமாக உருமாற்ற ராஜபக்ஷக்கள் முன்னெ டுத்த முயற்சி தற்போது அம்பலத்திற்கு வந்திருப்பதாகவும் அவர் கூறினார்.
பிணம் தின்னும் சுறா மீன் வளர்ப்பதை ஒப்புக்கொண்ட முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் முஜாவுடனான உறவு குறித்தும் விரைவில் மக்களுக்கு விளக்கமளிக்க வேண்டுமென்றும் அவர் கேட்டுக்கொண்டார்.
சிறிகொத்தவில் நேற்று நடைபெற்ற செய்தியாளர் மாநாட்டிலேயே அவர் இதனைத் தெரிவித்தார்.
முஜாவுடன் ஒப்பிடுகையில் வெலேசுதா நெத்தலி மீன் போன்றவர். என்றாலும் இவர்கள் ஒரே வலைப் பின்னலின் கீழ் செயற்பட்டமை ஊர்ஜிதமாகியுள்ளதாகவும் அவர் கூறினார்.
இது குறித்து அவர் மேலும் தெரிவித்ததாவது,
முஜா மலேசியாவில் வசிப்பவர். அவரது மைத்துனரான மொஹமட் ஷியாம் அவரது மனைவி மற்றும் சாரதி ஆகிய மூவரும் ஹெரோயின் வைத்திருந்த குற்றச்சாட்டிற்காக வெலிக்கடை சிறைச்சாலையில் ஆயுட் தண்டனை அனுபவித்து வருகின்றனர். கோத்தாபய ராஜபக்ஷ நாட்டின் பாதுகாப்புச் செயலாளர் என்ற வகையில் புலனாய்வுத் துறையினரினூடாக இதுகுறித்த தகவல்களை அறிந்திருக்காமல் இருக்க வாய்ப்பில்லை.
இருந்த போதும் முஜாவின் தயாரிப்பில் உருவான ‘செல்வம்’ திரைப்படத்துக்கு கோத்தாபய இராணுவ வீரர்கள், ஆயுதம் தாங்கி, உலங்கு வானூர்தி மற்றும் பல ஆயுதங்களை உதவியாக வழங்கியுள்ளார்.
சர்வதேச குற்றவாளிகளை முஜாவின் திரைப்பட வெளியீட்டு விழாவில் கலந்துகொண்டமைக்காக கோத்தாவும் அவரது பாரியாரும் நாட்டு மக்களுக்கு பொறுப்புக்கூற வேண்டும்.
முன்னாள் ஜனாதிபதியின் பாரியாரும் அவரது மூன்று பிள்ளைகளும் அடிக்கடி மலேசியா பயணம் செய்து முஜாவின் வீட்டில் தங்கியிருந்தனர்.
அவரது பாரியார் முஜாவின் நீச்சல் தடாகத்தில் நீராடியமைக்கும் பிள்ளைகள் முஜாவின் அனுமதிப்பத்திரத்தின் கீழ் கார் போட்டிகளில் பங்கு பற்றியமைக்குமான புகைப்படங்கள் என்னிடமுள்ளன. அதனை நீதிமன்றத்தில் ஒப்படைக்க நான் தயாராகவுள்ளேன்.
பாதுகாப்பு ஊடக மத்திய நிலையத்தின் முன்னாள் பணிப்பாளரான லக்ஷ்மன் ஹுலுகல்லவுக்கும் இதில் தொடர்புகள் இருப்பதாகவும் அவர் இது குறித்து நன்கு அறிவாரெனவும் அவர் தெரிவித்தார்
No comments
Post a Comment