சிங்கள இராணுவ மேஜர். ஜெனரல். விஜயரட்ணாவை அழித்த முகமறியா கரும்புலி வீரன்...!!!
சூரியக்கதிர் இராணுவ நடவடிக்கை மூலம் யாழ்பாணத்தை எதிரி கைப்பற்றிய பின் புலிகள் வன்னிக்கு தமது கட்டமைப்பை மாற்றிய போதும், யாழை தமது மறைமுகமான கட்டுப் பாட்டின் கீழேயே வைத்திருந்தனர். 40000 (நாற்பது ஆயிரம்) இராணுவம் எம் மக்களின் குரல் வளையை நசித்துக் கொண்டிருந்த காலம்.
மிகப் பெரும் அடக்கு முறையுடன் கூடிய இனப்படுகொலை ஒன்று, அங்கு ஓசை படாமல் நடந்து கொண்டிருந்தது. அங்கு பல செம்மணிகள் உருவாகிக் கொண்டிருந்தன. சமகாலத்தில் புலிகளும் யாணைக் காதில் நுழைந்த எறும்பு போல எதிரிக்கு குடைச்சல் கொடுத்துக் கொண்டிருந்தனர். யாழ் மக்கள் போராளிகளுக்கு கவசமாக இருந்து காத்தார்கள்.
இந்த கால கட்டத்தில் சிங்களத்தின் மேஜர். ஜெனரல். பலகல்ல இராணுவத் தளபதியாகவும், வடமராச்சிக்கு பிரிகேடியர். லரி விஜயரட்ணவும் (கொல்லப்பட்ட பின் மேஜர். ஜெனரலாக. பதவி உயத்தப்பட்டார்) நியமிக்கப்பட்டிருந்தனர். யார் இந்த விஜயரட்ண.? இவருக்கு இந்ரா என்னும் மனைவியும் இரண்டு மகன்களும் உள்ளனர். இவர் 1989களில் தென்னிலங்கையில் வைத்து JVP கிளர்ச்சியை அடக்கியவர்களில் மிகவும் முக்கியமானவன்.
பல ஆயிரம் சிங்கள மக்களை கொண்று ஆற்றில் மிதக்க விட்டவன். அதன் பின் அனுராதபுரத்திலும், பின் சிங்கள உளவுப்பிரிவான NIB யிலும் (The National Intelligence Bureau) சேவையாற்றிய பின் நீண்டகாலம் சிங்களத்தின் ஆட்லறி படைப்பிரிவின் கட்டளை அதிகாரியாகவும், அதி சிறப்பு பயிற்சி பெற்ற 51படையணியின் 4வது பிரிகேட் தளபதியாகவும் கடமை ஆற்றியுள்ளான்.
யாழைக் கைப்பற்றியதில் இருந்து வடமராட்சிக்குப் பொறுப்பாக இருந்து, பின் பதவி உயர்வு பெற்று அதிகாரிகள் பயிற்சிக் (Diyatalawa) கல்லூரிக்கு மாற்றலாகி செல்ல இருந்தான். ஏன் இவன் புலிகளால் இலக்கு வைக்கப்பட்டான் ? யாழை புலிகள் கைப்பற்றியதும் போராட்டத்தில் வீரியம் கொண்ட வடமராட்சி மக்களை இலக்கு வைத்தே அங்கு திட்டமிட்டு சிங்களத்தால் பதவியில் அமர்த்தப்பட்டான்.
இவனது மக்களுடனான அணுகுமுறை வித்தியாசமாக இருந்தது. பொதுவாக சிங்கள இராணுவத்தினர் புலிகளோடு தொடர்புள்ளவர்களை கைது செய்து கொல்வார்கள், அல்லது அவர்கள் காணாமல் போவார்கள். இதுதான் அன்றைய நேரத்தில் யாழில் வழமை. ஆனால் இவன் தனது உளவாளிகள் மூலம் புலிகளுடன் தொடர்பில் உள்ளவர்கள், ஆதரவாளர்கள், மாவீரர், போராளி குடும்பத்தவர்கள் போன்றவர்களது விபரங்களைத் திரட்டி, அவர்களை தொடர் கண்காணிப்பில் வைத்திருப்பான்.
புலிகளுடன் தொடர்பில் உள்ளவர்களை இனம் கண்டதும் உடனடியாக கைது செய்யாது, அவர்களை கண்காணிப்பில் வைத்துக் கொண்டு, அவர்கள் வடமராட்சியை விட்டு வெளி இடங்களுக்கு செல்லும் போது அந்த பிரதேசத்தில் உள்ள இராணுவத்தினரைக் கொண்டு குறித்த நபரை கைது செய்வான். அதன்பின் குறித்த நபரின் பெற்றோரோ, அல்லது மனைவியோ அவனிடம் செல்லும் போது மிகவும் நல்லவன் போல சில வாரங்கள் இழுத்தடித்த பின் கைது செய்யப்பட்டவர் விடுதலை செய்யப்படுவார்.
ஆனால், குறித்த நபர் உளவாளியாக மற்றப் பட்டிருப்பார். (பலர் இன்றுவரை வீடு திரும்பவில்லை) இது மக்களுக்கு தெரியாது.! பலர் அவனை அந்த நேரத்தில் நம்பினர்.! அடுத்தது வீதியில் செல்லும் போது தாய்மாருடன் நிக்கும் குழந்தைகளை கண்டால் உடனே வாகனத்தை விட்டு இறங்கி, தன்னுடன் எப்போதும் வைத்திருக்கும் கண்டோஸ் (சாக்லெட்) ஒன்றை எடுத்து கொடுப்பான், வயோதிபர்களை கண்டால் காலை தொட்டு ஆசிர்வாதம் வாங்குவது, இப்படி பல உத்திகளை கையாண்டு பலரைத் தன்பக்கம் திருப்பியிருந்தான்.
ஒருமுறை பருத்தித்துறையில் எமது ஆதரவாளர் வீடொன்றில் புலிகள் உணவருந்தி கொண்டிருந்த போது, அந்த தாய் கூறினார் (ஒரு போராளியின் தாய்) "டேய் தம்பியவை இங்கு இருக்கிற எல்லா ஆமிக்கரனையும் கொண்டாலும் பரவாய் இல்லை விஜயரட்ணவை கொண்டு போடாதைங்கோடா, அவன் தான் ஒருவன் நல்லவன்" என்றார்.! அந்தப் போராளிகளுக்கு தூக்கி வாரிப்போட்டது. எம் மக்களை எவ்வளவு தூரம் நம்பவைத்துள்ளான்?? அவருக்கு புன்னகையே பதிலாகக் கொடுக்கப்பட்டது.
தன் சொந்த மக்களையே ஈவிரக்கம் இன்றி கொன்ற ஒருவனது நயவஞ்சகத்திற்கு எம் மக்கள் பலியாகிக் கொண்டிருந்தனர். புலிகளுக்கும் இது ஒரு இக்கட்டான காலகட்டம். இதற்கு நல்ல உதாரணம் இவனால் உளவாளியாக மாற்றப்பட்ட, மாவீரர் குடும்ப உறுப்பினர் ஒருவரால் காட்டிக் கொடுக்கப் பட்டு லெப். கேணல். அருச்சுனா உட்பட ஆறு கடற்புலிப் போராளிகள் இவனது முற்றுகையில் கொல்லப்பட்டனர்.
யாழை எதிரி கைப்பற்றிய பின் வடமராட்சியில் ஒரே நேரத்தில் ஆறு போராளிகள் கொல்லப்பட்டதும், அதற்கான காரணத்தை தேடியபோது, எம் மக்கள் மெல்ல, மெல்லமாக சிங்களம் விரித்த புலனாய்வு வலையில் சிக்கி வருவதை புலிகள் தலைமை உணர்ந்தது. 1998 இன் ஆரம்பத்தில் புலிகளின் உளவுத்துறை போராளி ஒருவரை அழைத்த பொட்டு அம்மான் விஜயரட்ணவை அகற்ற வேண்டிய தேவையை உணர்த்தி, அதற்கான கட்டளையையும் வழங்கி இருந்தார்.
அதன் படி அந்த போராளியுடன் கரும்புலி போராளியும் யாழ்பாணத்துக்கு நகர்த்தப்பட்டு நெல்லியடியில் மறைப்பில் அவர் வைக்கப்பட்டபின், தொடர் வேவின் மூலம் இலக்கின் நடமாட்டம் இனம் காணப்பட்டது. இலக்கின் பலம் பலவீனம் ஆராயப்பட்டு முடிவெடுக்கப்பட்டது. அதன்படி விஜயரட்ண மக்கள் கூட்டமாக நிற்கும் இடங்களில் வாகனத்தை விட்டு இறங்கி தனது மக்களை கவரும் வேலையை செய்தபின் உடனே வாகனத்தில் ஏறிச் சென்று விடுவான்.
அப்படி ஏறிச் செல்லும் போது வாகனம் மக்களை விட்டு விலகி செல்லும் நேரத்தில் கிடைக்கும் சந்தர்ப்பத்தில் இந்த தாக்குதலை செய்யும் முடிவை புலிகளின் உளவுத்துறை அதிகாரி எடுத்தபின், அந்தக் கரும்புலி போராளியை பருத்தித்துறைக்கு நகர்த்தினார். அங்கு சென்றதும் குண்டு பொருத்தாமல் அந்த போராளியைக் கொண்டு விஜயரட்ண வரும் போது ஒத்திகை ஒன்றும் பார்க்கப்பட்டது. எல்லாம் கச்சிதமாக திட்டமிட்டபோது, எதிரி பதவி உயர்வு பெற்று மாற்றலாகி செல்லும் செய்தி ஒன்று வந்து சேர்ந்தது.
மே 14 மாற்றலாகி செல்வதாக உறுதியான தகவல் கிடைத்தது. இந்த சந்தர்ப்பத்தை விட்டால் எந்தக் காலத்திலும் இலக்கை அழிக்கமுடியாதும் போகலாம்? ஆகவே தினமும் காலையிலேயே அந்த முகம் தெரியாக் கரும்புலி வீரன் தன் உடலில் குண்டை கட்டியபின் பிரதான வீதிக்கு போவதும் வருவதுமாக இருந்தான். அவனது பதற்றமெல்லாம் இலக்கு கையை விட்டுப்போகக் கூடாதென்பதே.
ஆம், அந்த நாளும் வந்தது May,14,1998 இராணுவத்திடம் பிரியாவிடை பெற்ற பின், விஜயரட்ண வீதியில் வருவதாக புலிகளின் உளவாளி மூலம் தகவல் கிடைத்தது. உடனே அந்த "கந்தகப்புயல்" தயாரானது.! கூட இருந்த போராளியையும், தனது அதிகாரியையும் கட்டியனைத்த பின் சரித்திரம் படைக்கத் தயாரானான். எம் மக்களுக்கு சிறு கீறல் கூட வரக்கூடாது என்னும் கட்டளையை மனதில் கொண்டு ஒரு போராளி முன்னாள் செல்ல நடுவில் கரும்புலி போராளியும் இறுதியில் கட்டளை அதிகாரியுமாக அந்த வீரனுக்கு பாதுகாப்பாக ஆளுக்கொரு சைக்கிளில் பிரதான வீதியை அடைந்தனர்.
இவர்கள் போன சிறிது நேரத்திலேயே இலக்கும் இவர்களை நெருங்கி விட்டான், கண்ணிமைக்கும் பொழுதில் இலக்கின் "லன்றோவர் வாகனத்தின்" மேல் பாய்ந்து குண்டை வெடிக்க வைத்தான், அந்த முகம் தெரியா வீரன். துல்லியமான தாக்குதல். விஜயரட்ண உட்பட நான்கு பேர் உடல் சிதறி பலியாகினர். சிங்களத்தின் நயவஞ்சக கோட்டை தகர்ந்து போனது.!
பெயரையோ, புகழையோ விரும்பாத அந்த உன்னத போராளி காற்றோடு கலந்து போனான்.கரும்புலிகள் நாளான இன்று அந்த மாவீரனையும் நினைவில் கொள்கின்றேன்..!!!
- நினைவுகளுடன் ஈழத்து துரோணர்...!!!


No comments
Post a Comment