Latest News

July 13, 2015

வவுனியா பிரஜைகள் குழுத்தலைவருக்கு மீண்டும் அழைப்பாணை!
by admin - 0

வவுனியா மாவட்ட பிரஜைகள் குழுவின் தலைவர் கிருஸ்ணப்பிள்ளை தேவராசாவை பயங்கரவாத தடுப்புப்பிரிவினர் (ரி.ஐ.டி) இரண்டாவது தடைவையாகவும் விசாரணைக்காக கொழும்புக்கு அழைத்துள்ளனர்.

வவுனியா வடக்கு பிரதேசம் நெடுங்கேணி நகரத்தில் அமைந்துள்ள அவரது பத்திரிகை விற்பனை நிலையத்துக்கு, கடந்த வெள்ளிக்கிழமை; சிவில் உடையில் சென்ற மூவர், தாம் பயங்கரவாத தடுப்புப்பிரிவின் வவுனியா அலுவலகத்திலிருந்து வந்திருப்பதாகவும், கொழும்பில் அமைந்துள்ள பயங்கரவாத தடுப்புப்பிரிவின் 02ம் மாடிக்கு, சனிக்கிழமை காலை சென்று அதிகாரி விமலசூரியவை சந்திக்குமாறு அறிவுறுத்தி, அதற்குரிய அழைப்பாணை கடிதத்தை அவரிடம் கொடுத்துள்ளனர்.

அவர்களிடம் ‘கொழும்பு செல்வதற்கான கால அவகாசம் போதாது’ என்று கி.தேவராசா கூறியதையடுத்து, அங்கிருந்து கொண்டே தமது தொலைபேசியில் கொழும்புக்கு அழைப்பை ஏற்படுத்தி பேசிய அவர்கள், 15ஆம் திகதி புதன்கிழமை காலை 10 மணிக்கு கொழும்பு சென்று அதிகாரி விமலசூரியவை சந்திக்குமாறு கூறிவிட்டுச்சென்றுள்ளனர்.

ஏற்கனவே தேவராசா பயங்கரவாத தடுப்புப்பிரிவின் (ரி.ஐ.டி) 02ம் மாடிக்கு, மார்ச் 30 விசாரணைக்காக அழைக்கப்பட்டிருந்தார். கடந்த வருடமும் ஈழ பெண்கள் எழுச்சிநாளன்று வவுனியா மாவட்ட நீதிமன்றம் முன்பாக ஜெயக்குமாரியினதும், ஏனைய அரசியல் கைதிகளினதும் விடுதலையை வலியுறுத்தியும், சட்டத்துக்கு முரணான கைதுகள், தடுத்து வைத்தல்களை கண்டித்தும் கவனயீர்ப்பு போராட்டத்தை வவுனியா மாவட்ட பிரஜைகள் குழு நடத்தவிருந்தது.இந்நிலையில், குழுவின் தலைவர் கி.தேவராசா மீது10ம் மாதம் 8ம் திகதியன்று இரவு நெடுங்கேணி பிரதான இராணுவ முகாமுக்கு சமீபமாக வைத்து இரும்பு கம்பிகளால் கொலை முயற்சி தாக்குதல் நடத்தப்பட்டிருந்தது.

பற்றைக்காட்டுக்குள் அவர் தூக்கி வீசப்பட்டிருந்தபோது அப்பகுதி மக்களால் மீட்கப்பட்டு வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டிருந்தமையும், பின்னர் அவரை மேலதிக சிகிச்சைகளுக்காக வவுனியா மாவட்ட பொதுவைத்தியசாலைக்கு அனுப்ப நெடுங்கேணி பிரதேச வைத்தியசாலை பொறுப்பதிகாரி மறுத்திருந்த நிலையில், அன்றைய வன்னி மாவட்;ட பாராளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தனும், வடக்கு மாகாணசபை உறுப்பினர் சிவமோகனும் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று நள்ளிரவு 12 மணியளவில் அவரை வவுனியா பொதுவைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதித்திருந்தமையும்
குறிப்பிடத்தக்கது.
« PREV
NEXT »

No comments