இலங்கையில் 2009ம் ஆண்டிலும் அதற்கு முந்திய ஆண்டுகளிலும் இடம்பெற்ற இனஅழிப்பிற்கு, சிறீலங்கா அரசு பதில் சொல்வது அவசியம் என கனடிய குடிவரவு மற்றும் குடியுரிமை அமைச்சர் கௌரவ கிறிஸ் அலெக்சாண்டர் தெரிவித்துள்ளார்.
தமிழர்களின் நிகழ்வொன்றில் கலந்து கொண்ட போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.
அவர் தெரிவித்தவை வருமாறு,
ஸ்ரீவன் கார்ப்பர் தலைமையிலான கன்சவ்வேட்டிவ் கட்சி, ஈழத் தமிழர்களுக்கு நீதி கிடைக்கும் வரை தொடர்ந்து குரல் கொடுக்கும் என்று தெரிவித்த அமைச்சர், உலகெங்கும் வாழும் தமிழ் மக்களுக்கு, கனடியத் தமிழர்கள் முன்னோடியாகவும் வழிகாட்டிகளாகவும் இருப்பதையிட்டு தாம் பெருமைப் படுவதாகவும் கூறினார்.
வர்த்தகம், கல்வி, ஊடகத்துறை, முதலீடு, தொழில் வாய்ப்புக்கள் என்று எதை எடுத்தாலும், டொரன்டோவின் மிகப்பெரிய புலம்பெயர் சமூகம் என்ற வகையில், மிக வேகமான வளர்ச்சியையும் வெற்றியையும் பதிவு செய்து வருவதை அவதானிக்க முடிகிறது.
ரொறன்ரோவில் பத்தாயிரத்திற்கும் மேற்பட்ட மக்களைக் கொண்ட புலம்பெயர் சமூகங்கள் 64க்கும் அதிகம் உள்ளன. அவற்றில் கனடியத் தமிழர்கள் ஒரு முன்மாதிரிகையான ஆற்றல் கொண்ட சமூகமாக இருப்பதைப் பார்க்கிறோம்.
இலங்கையில் இடம்பெற்ற மனித உரிமை மீறல், படுகொலைகள், இனஅழிப்பு போன்ற அனைத்திற்கும் நியாயம் வேண்டும் என்பதையும், தமிழர்களுக்கு நீதி கிடைக்க வேண்டும் என்பதையும் கனடிய அரசு தொடர்ச்சியாகக் கோரி வருகிறது என்று அமைச்சர் குறிப்பிட்டார்.
முன்னாள் வெளிவிவகார அமைச்சர் யோண் பெயர்ட் அவர்கள், இலங்கையில் இடம்பெற்ற இனஅழிப்பு தொடர்பாக மிக அதிகபட்ச அழுத்தத்தைக் கொடுத்து வந்தமை குறிப்பிடத்தக்கது.
அவரது ராஜினாமாவிற்குப் பின்னதாக, புதிய குடிவரவு அமைச்சராகப் பொறுப்பேற்ற கிறிஸ் அலெக்சாண்டர் அவர்களும் ஈழத் தமிழர்களுக்கு நீதி கிடைக்க வேண்டும் என்பதைத் தொடர்ச்சியாகக் கூறி வருவது வரவேற்புக்குரியது.
பிரதமர் ஸ்ரீவன் கார்ப்பர், பாதுகாப்பு அமைச்சர் ஜேசன் கெனி ஆகியோருக்கு அடுத்த நிலையில், கன்சவ்வேட்டிவ் கட்சியின் மூன்றாவது முக்கிய பிரமுகராக குடிவரவு அமைச்சர் கிறிஸ் அலெக்சாண்டர் இருக்கும் நிலையில், ஈழத் தமிழர்களுக்கு இழைக்கப்பட்ட அநீதிக்கு எதிராக அழுத்தமாகக் குரல் கொடுப்பதை தமிழர்கள் நன்றியோடும் பெருமிதத்தோடும் உள்வாங்கிக் கொள்கிறார்கள்.

No comments
Post a Comment