Latest News

July 20, 2015

மக்கள் நலன்சார்ந்த செயற்திட்டங்களை நடைமுறைப்படுத்தியவர்கள் நாங்களே. - ஈ.பி.டி.பி
by admin - 0

வடமாகாணத்தில் எந்த அரசியல் தலைவர்களும் செயற்படுத்தாத பல்வேறு மக்கள் நலன்சார்ந்த செயற்திட்டங்களைச் செயற்படுத்தியவர்கள் நாமே என ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் முதன்மை வேட்பாளருமான டக்ளஸ் தேவானந்தா அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளார்.

யாழ். கல்வியங்காடு, கலைமகள் சனசமூக நிலையத்தில் நேற்றைய  தினம் (19-07/2015) இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில், தேர்தல் காலங்களில் நடைமுறைப்படுத்த முடியாத பொய் வாக்குறுதிகளை வழங்கி, மக்களிடம் வாக்குக் கேட்டு வெற்றி பெற்றவர்கள் செயற்படுத்தக் கூடியதான மக்கள் நலன்சார்ந்த பல்வேறு பணிகளைச் செயற்படுத்த முடியாத திறனற்றவர்களாகவே இருக்கின்றனர்.

குறிப்பாக வடக்கு மாகாண சபையைக் கைப்பற்றிய தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் இதுவரையில் மக்களுக்காக எவ்விதமான செயற்திட்டங்களை முன்னெடுத்துள்ளார்களெனக் கேள்வி எழுப்பியுள்ளார்.

ஆனால் நாம் அரசிடமிருந்து கிடைக்கப் பெற்ற நிதி வளங்களைக் கொண்டு மக்கள் நலன்சார்ந்த பல்வேறு செயற்திட்டங்களை நடைமுறைப்படுத்திக் காட்டியுள்ளோம். அந்த வகையில் வாழ்வாதார மேம்பாடு, சுயதொழில் வாய்ப்புகள், கல்வி, சுகாதாரம், மின்சாரம், வீடமைப்பு, வீதி புனரமைப்பு உள்ளிட்டதான பல்வேறு மக்கள் நலன்சார்ந்த செயற்திட்டங்களை நாம் நடைமுறைப்படுத்தியுள்ளோம்.

வடமாகாணத்தில் எந்த அரசியல் தலைவர்களும் செயற்படுத்தாத பல்வேறு மக்கள் நலன்சார்ந்த செயற்திட்டங்களைச் செயற்படுத்திய அதேவேளை, குறிப்பாக காங்கேசன்துறை வரையான புகையிரத சேவையை கொண்டுவந்த பெருமை எம்மையே சாரும் என்றும் சுட்டிக்காட்டினார்.

அதனடிப்படையில் தான் மக்கள் எமக்கு வாக்களித்து வெற்றி வாய்ப்பைத் தரும் பட்சத்தில், பல்வேறுபட்ட வாழ்வாதாரம், உதவித் திட்டங்கள், வேலைவாய்ப்பு, அபிவிருத்தி உள்ளிட்ட மக்கள் நலன்சார்ந்த பணிகளை முன்னெடுக்க முடியும் என்றும் தெரிவித்தார்.

இதன்போது மக்களின் தேவைப்பாடுகள், பிரச்சினைகள் தொடர்பில் கேட்டறிந்ததுடன், தற்போதைய அரசியல் நிலவரம் தொடர்பிலும் செயலாளர் நாயகம் அவர்களால் விளக்கமளிக்கப்பட்டது.

இதன்போது, ஈ.பி.டி.பியின் வேட்பாளர்களான சொல்லின் செல்வர் இரா.செல்வவடிவேல், யாழ். மாநகர முன்னாள் முதல்வர் யோகேஸ்வரி பற்குணராசா உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

« PREV
NEXT »

No comments