Latest News

June 03, 2015

உதயங்க எங்கிருந்தாலும் கைது செய்யப்படுவார்!
by Unknown - 0

இலங்கைக்கான முன்னாள் ரஷ்யத் தூதுவர் உதயங்க வீரதுங்க, உலகில் எந்த நாட்டில் இருந்தாலும் கைது செய்யப்படுவார் என வெளிவிவகார அமைச்சின் ஊடகப் பேச்சாளர் மகேசினி கொலோன் தெரிவித்துள்ளார்.

வெளிவிவகார அமைச்சில் இன்று நடைபெற்ற ஊடக மாநாட்டில் அவர் இதனைத் தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

புதிய அரசாங்கம் அவரது தூதுவர் பதவியை இடைநிறுத்தியுள்ளது. ஆனால் அவர் இதுவரை இராஜதந்திர கடவுச்சீட்டை வெளிநாட்டு அமைச்சுக்கு சமர்ப்பிக்கவில்லை.

இந்த கடவுச்சீட்டை பயன்படுத்தியே அவர் ஆயுத விற்பனையில் ஈடுபட்டு வருகின்றார்.

அவர் மின்னஞ்சல் ஊடாகவே தனது இராஜதந்திர கடவுச் சீட்டை ஒப்படைக்க முடியாது என அறிவித்துள்ளார். ஆனால் அவருக்கு ஏதோ ஒரு நாட்டில் இரட்டைப் பிராஜா உரிமை இருக்கக் கூடும். அவர் கடந்த வாரம் டுபாய் நாட்டில் இருந்துள்ளார்.

மட்டுமன்றி, கொழும்பு துறைமுகத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ள ஆயுத கொள்கலனை யுக்ரேனுக்கு கொண்டு செல்வதற்கும் அவர் கடந்த வாரம் முயற்சித்துள்ளார்.

அதற்காக ஈரான் நாட்டில் உள்ள ஒருவருக்கு தெஹ்ரான தூதுவரலாயம் ஊடாக செயலுரிமை கடிதமொன்றை வழங்கி, கொழும்பில் உள்ள ஆயுதக் கொள்கலனை யுக்ரேன் அல்லது வேறு நாடுகளுக்கு கொண்டு வருவதற்கும் முயற்சித்துள்ளார்.

அதனை அரசாங்கம் தடுத்து நிறுத்தியுள்ளது. இது தொடர்பாக தெஹ்ரானில் உள்ள தூதுவரலாயத்தில் விசாரணை மேற்கொள்ளப்படுகின்றது.

இவ்விடயம் சம்பந்தமாக இலங்கை- இந்தியா நாடுகளுக்கான யுக்ரேன் தூதுவர் இலங்கைக்கு வரவழைக்கப்பட்டு, வெளிநாட்டு அமைச்சர் மங்கள சமரவீரவுடன் கடந்த வாரம் சந்திப்பொன்றும் இடம் பெற்றது.

இது பற்றி உரிய விசாரணைக்கு ஒத்துழைப்பதாக வெளிநாட்டு அமைச்சரிடம் அவர் உறுதியளித்துள்ளார்.

கடந்த இரு மாதங்களுக்குள் உதயங்க மேற்கொண்ட மற்றுமொரு ஆயுதக் கொள்கலனே கொழும்பு துறைமுகத்தில் வைத்து தடுத்து நிறுத்தப்பட்டது. இவ்விடயம் சம்பந்தமாக வெளிநாட்டு அமைச்சின் அதிகாரிகள் இருவர் விசாரணைகளை மேற்கொள்ள சம்பந்தப்பட்ட நாடுகளுக்குச் சென்றுள்ளனர் எனவும் அவர் தெரிவித்தார்.
« PREV
NEXT »

No comments