Latest News

June 11, 2015

மகிந்தவை பிரதமராக்கும் மக்கள் கூட்டத்தை தடுத்து நிறுத்த சதித்திட்டம்-விமல் வீரவன்ஸ
by Unknown - 0

மகிந்த ராஜபக்ஷவை பிரதமராக்கும் மக்கள் கூட்டமொன்று எதிர்வரும் வெள்ளிக்கிழமை நடைபெறவுள்ள நிலையில், அக்கூட்டத்தை தடுப்பதற்கான சதித்திட்டங்கள் அரசாங்கத்தால் முன்னெடுக்கப்படுவதாக மகிந்த தரப்பு அணி விசனம் தெரிவித்துள்ளது. 

பாராளுமன்றத்திலுள்ள குழு அறையில் நேற்று புதன்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து வெளியிடும்போதே ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினரான விமல் வீரவன்ஸ மேற்கண்டவாறு தெரிவித்தார். 

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்;  ஜனநாயகத்தை நிலை நிறுத்துவதாகக் கூறி ஆட்சிக்கு வந்த இந்த அரசாங்கம், ஜனநாயக முறையில் ஒன்று கூடுவதற்கு கட்டுப்பாடுகள் விதித்து வருகிறது. மகிந்த ராஜபக்ஷவைபட பிரதமராக்கும் மக்கள் கூட்டம் எதிர்வரும் ஜூன்  12 ஆம் திகதி மாத்தறையில் நடைபெறவுள்ளது.  

இந்தக் கூட்டத்தில் ஒலி பெருக்கிகளைப் பயன்படுத்துவதற்கான அனுமதிப் பத்திரம் பல்வேறு கட்டுப்பாடுகளுடன் வழங்கப்பட்டுள்ளது. குறிப்பாக கூட்டம் நடைபெறும் மைதானத்தில் மட்டும் ஒலிபெருக்கியைப் பயன்படுத்த வேண்டுமெனவும் 4 மணிக்குப் பின்னரே ஒலிபெருக்கிகள் பயன்படுத்தப்பட வேண்டுமெனவும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. இதுவரை காலமும் இவ்வாறான கட்டுப்பாடுகளுடன் கூட்டம் இடம் பெற்றதா? எமது கூட்டத்தினை தடுக்கும்  வகையிலேயே இவ்வாறான கட்டுப்பாடுகள் விதிக்கப்படுகின்றன.  

அத்துடன் இலங்கையில் தடைசெய்யப்பட்ட அமைப்புகளின் பட்டியலில் உலகத் தமிழர் பேரவையும் உள்ளடக்கப்பட்டுள்ளது. இவ்வமைப்பின் பிரதானிகளான சுரேன் சுரேந்திரன், அருட்தந்தை இமானுவெல் ஆகியோரை வெளிவிவகார அமைச்சர் அண்மையில் இங்கிலாந்தில் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார்.  தடைசெய்யப்பட்ட அமைப்பொன்றுடன் பேச்சுவார்த்தை நடத்தும் அமைச்சருக்கு எதிராகச் சட்டநடவடிக்கைகள் எடுக்கப்படவில்லை. ஆனால் ஜனநாயக முறையில் ஒன்று கூட முற்படும் எம்மை தடுக்க இந்த அரசாங்கம் செயற்படுகின்றது.  

அதுமட்டுமல்லாது அண்மையில் இங்கிலாந்தில் இடம்பெற்ற இந்த சந்திப்பில் புதிய தமிழீழத்தை கட்டியெழுப்புவதற்கான திட்டம் குறித்தும் தமிழீழத்தின் புதிய வரைபடம் தொடர்பிலும் ஆராயப்பட்டுள்ளதுடன் இச்செயற்பாட்டுக்கு அரசாங்கம் ஆதரவளித்து வருவதாக அவர் தெரிவித்தார். 

இந்த ஊடக சந்திப்பில் கலந்து கொண்ட ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர்களான குமார வெல்கம மாத்தறையில் நடைபெறவுள்ள மகிந்தவுக்கு ஆதரவளிக்கும் கூட்டத்தினைத் தடுக்கும் வகையிலும் இக்கூட்டத்தில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியினர் கலந்து கொள்வதை தடுக்கும் வகையிலும் மாத்தறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்கள் இருவர் உட்பட சிலருக்கு அமைச்சுப் பதவிகளை வழங்க அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக சுட்டிக்காட்டினார்.
« PREV
NEXT »

No comments