இலங்கையை சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் முன் நிறுத்த வேண்டும் என, நாடு கடந்த தமிழீழ அரசாங்கத் தோழமை மையம் வலியுறுத்தியுள்ளது.
இதுதொடர்பாக, அந்த மையத்தின் ஒருங்கிணைப்பாளர் பேராசிரியை சரஸ்வதி, திருநெல்வேலியில் செய்தியாளர்களிடம் திங்கள்கிழமை கூறியது:
ஐ.நா. உள்ளக மதிப்பீட்டு அறிக்கையின்படி இலங்கையில் 2009இல் 70 ஆயிரம் தமிழர்கள் உயிரிழந்ததாகக் கூறப்படுகிறது. மற்றொரு அறிக்கையில் 1.5 லட்சம் பேர் இறந்திருப்பதாகக் கூறப்படுகிறது. இதுகுறித்து விசாரிக்க ஐ.நா. சார்பில் அமைக்கப்பட்ட குழுவில் இலங்கையும் இடம்பெற்றிருப்பதால் இந்த விவகாரத்தில் நீதி கிடைக்காது. ஏனெனில், இலங்கையில் 1958ஆம் ஆண்டு முதல் தமிழர்கள் மீதான தாக்குதல் தொடர்ந்து அரங்கேற்றப்பட்டு வருகிறது.
தமிழர்களிடம் இருந்து கைப்பற்றப்பட்ட நிலத்தை திரும்ப ஒப்படைப்பதாகவும், தமிழர்கள் பகுதியில் இருந்து ராணுவம் திரும்பப் பெறப்படும் என்ற அறிவிப்பும் வெறும் அறிவிப்பாகவே உள்ளது. இதுவரை அதற்கான துளியளவு முயற்சியும் மேற்கொள்ளப்படவில்லை. மாறாக, தமிழர்கள் வசிக்கும் பகுதி, முஸ்லிம்கள் வசிக்கும் பகுதிகளில் கோயில்கள், தேவாலயங்கள், மசூதிகளை அகற்றிவிட்டு அங்கு சிங்கள ராணுவத்துக்கான அடித்தளமும், புத்தர் கோயில்கள் கட்டும் பணியையும் மேற்கொண்டு வருகின்றனர். மேலும், இலங்கையில் 1958 முதல் நடைபெற்ற மனித உரிமை மீறல், மனிதப் படுகொலை தொடர்பான வழக்குகளில் இலங்கை நீதிமன்றங்களில் தமிழர்களுக்கு ஆதரவாக எந்தத் தீர்ப்பும் வழங்கப்படவில்லை. இந்தச் சூழலில் இன அழிப்பு விவகாரத்தில் நடத்தப்படும் விசாரணையும் நேர்மையாக இருக்காது. எனவே, இலங்கையை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் நிறுத்தி விசாரணை நடத்த வேண்டும்.
இதற்காக பல்வேறு அமைப்புகள் கையெழுத்து இயக்கங்களை நடத்தி வருகின்றன. தமிழகத்தில் ஜூன் மாதம் தொடங்கிய கையெழுத்து இயக்கத்தில் இதுவரை 2 லட்சம் பேரிடம் கையெழுத்து பெறப்பட்டுள்ளது. வரும் செப்டம்பர் வரையில் 10 லட்சம் பேரிடம் கையெழுத்து பெறப்படும். பின்னர், இது ஐ.நா.சபை வசம் ஒப்படைக்கப்பட்டு இலங்கை மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தப்படும் என்றார்.
பேட்டியின்போது, திராவிடர் விடுதலைக் கழகப் பொதுச்செயலர் விடுதலை ராஜேந்திரன், வான்முகில் அமைப்பின் இயக்குநர் பிரிட்டோ ஆகியோர் உடனிருந்தனர்.

No comments
Post a Comment