Latest News

June 10, 2015

தீமோர் தீவில் தவிக்கும் ஈழத் தமிழர்களை காப்பாற்றுங்கள்- சீமான்
by Unknown - 0

இந்தோனேசியா அருகே தீமோர் தீவில் தவிக்கும் 54 ஈழத் தமிழர்களை காப்பாற்ற வேண்டும் என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இது தொடர்பாக சீமான் வெளியிட்டுள்ள அறிக்கை:

இலங்கையில் இருந்து கிளம்பிய 54 தமிழர்கள் இந்தோனேசியாவுக்கு வந்திருக்கிறார்கள். அங்கேயும் வாழப் பிடிமானம் இல்லாது போனதால் அங்கிருந்து நியூசிலாந்துக்குக் கடல் வழியாக கிளம்பி இருக்கிறார்கள். கர்ப்பிணிகளும், குழந்தைகளும் இருக்கிறார்களே என்றுகூட எண்ணாமல், அவர்களின் பயணத்தைத் தடுத்து நிறுத்தி விசாரித்திருக்கிறார்கள். அவர்களின் படகுகளை பறித்துக்கொண்டு சுங்கத்துறை படகுக்கு ஏதிலிகளை மாற்றி இருக்கிறார்கள். 

இந்தோனேசியாவில் உள்ள தீமோர் தீவில் படகு ஒதுங்க, இப்போது எந்த வசதியும் இல்லாமல் அல்லாடிக்கொண்டிருக்கிறார்கள். தீமோர் தீவில் தவிக்கும் ஏதிலிகளைக் காப்பாற்ற உலகத்தின் ஜனநாயக சக்திகள் உடனடியாகக் குரல் கொடுக்க வேண்டும். இந்தோனேசிய அரசு அவர்களின் உணவு, உடை உள்ளிட்ட அடிப்படை வசதிகளை ஏற்பாடு செய்து கொடுக்க வேண்டும். எண்ணியபடியே அவர்கள் நியூசிலாந்து செல்ல இந்தோனேசியா, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து என இதில் சம்பந்தப்பட்ட நாடுகள் மனசாட்சியோடு முயற்சி எடுக்க வேண்டும். 

தத்தளிக்கும் தமிழர்களைக் காப்பாற்ற மத்திய அரசின் மூலமாகத் தமிழக அரசும் முயற்சி எடுக்க வேண்டும். நாடோடிகளாக அலையும் ஏதிலிகளின் விடிவுக்கு உலக சமூகம் உடனடியாக ஒன்றுதிரள வேண்டிய நேரம் இது. இவ்வாறு சீமான் கூறியுள்ளார்.
« PREV
NEXT »

No comments