இறுதிகட்ட யுத்தம் நடைபெற்ற போது தமிழீழ விடுதலைப் புலிகளை இராணுவத்தினரிடம் சரணடையுமாறு கூறிய கனிமொழி, அதனை மறுப்பார் என தான் ஏற்கனவே அறிந்து வைத்திருந்ததாக வடமாகாண சபை உறுப்பினர் அனந்தி சசிதரன் தெரிவித்துள்ளார்.
இலங்கையில் நடைபெற்ற இறுதிகட்ட யுத்தத்தின் போது விடுதலைப் புலிகளின் தலைவர்களை இலங்கை பாதுகாப்பு படைகளிடம் சரணடையுமாறு தாம் எந்த ஆலோசனைகளையும் வழங்கவில்லை என தமிழக முன்னாள் முதல்வர் மு. கருணாநிதியின் மகளும் மாநிலங்கள் அவை உறுப்பினருமான கனிமொழி தெரிவித்திருந்தார்.
இது தொடர்பில் கருத்து தெரிவித்த போதே மாகாண சபை உறுப்பினர் அனந்தி சசிதரன் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
அவர் இதை மறுப்பார் என எனக்கு ஏற்கனவே தெரியும், அவர் கூறியதற்கான சாட்சியம் என்னிடம் இல்லை அதைக்கொண்டுதான் தான் அவ்வாறு கூறவில்லை என அவர் மறுத்துள்ளார்.
எனினும் அவரது மனச்சாட்சி இதனை மறுக்காது என நான் நம்புகின்றேன்.
தமிழீழ விடுதலை புலிகளின் முன்னணி தலைவர்களில் ஒருவர் எழிலன் இல்லை என கனிமொழி கூறியிருந்தார்.
அவ்வாறு என்றால் விடுதலைப் புலிகளின் முன்னணி தலைவர்களுடன் கனிமொழி தொடர்புகளைப் பேணியுள்ளாரா? என அனந்தி கேள்வியெழுப்பியுள்ளதுடன்,
நடந்தது என்னவென்று சர்வதேசத்துக்கு தெரியும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.
பல நாடுகள் இணைந்து யுத்தத்தை நிறைவுக்கு கொண்டு வந்தன.
ஆனால் இன்று சர்வதேசம் இதிலிருந்து ஒதுங்கப் பார்க்கின்றது அதில் இந்திய மத்திய அரசாங்கம் முக்கிய இடத்தை வகிக்கின்றது என வடமாகாண சபை உறுப்பினர் அனந்தி சசிதரன் குறிப்பிட்டுள்ளார்.
No comments
Post a Comment