இலங்கை புகலிடக்கோரிக்கையாளர்களுடன் நியூஸிலாந்தை நோக்கிப் பயணித்த படகொன்றைத் திருப்பி அனுப்புவதற்காக ஆட்கடத்தற்காரர்களுக்கு அவுஸ்திரேலிய அதிகாரிகள் பணம் வழங்கியமை தெரியவந்துள்ளது.
இலங்கை, பங்களாதேஷ் மற்றும் மியன்மாரைச் சேர்ந்த 65 புகலிடக்கோரிக்கையாளர்களுடன் பயணித்த படகொன்று கடந்த மாத இறுதியில் அவுஸ்திரேலிய கடற்படை மற்றும் சுங்க அதிகாரிகளால் தடுத்து நிறுத்தப்பட்டது.
நியூஸிலாந்திற்குப் பயணிக்கவிருந்த குறித்த படகைத் திருப்பி அனுப்புவதற்காக படகை செலுத்திய குழுவினருக்கு தலா 5000 அமெரிக்க டொலர்கள் வீதம் வழங்கப்பட்டுள்ளது.
அவுஸ்திரேலிய அதிகாரிகள் தமக்கு பணம் வழங்கியமையை படகை செலுத்திய குழுவினர் ஒப்புக்கொண்டதாக இந்தோனேஷிய அதிகாரிகளை மேற்கோள்காட்டி அவுஸ்திரேலிய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன
எவ்வாறாயினும், படகைத் திருப்பி அனுப்புவதற்கு பணம் வழங்கப்பட்டதாக சுமத்தப்படும் குற்றச்சாட்டை அவுஸ்திரேலிய குடிவரவு அமைச்சர் பீட்டர் டட்டன் மறுத்திருந்தார்.
அவுஸ்திரேலிய அதிகாரிகளால் திருப்பி அனுப்பப்பட்ட குறித்த படகு அதனை செலுத்தியவர்களால் கைவிடப்பட்ட நிலையில் கற்பாறையில் மோதி விபத்திற்குள்ளானமை குறிப்பிடத்தக்கதாகும்.
இந்தப் படகில் இருந்த 54 இலங்கையர்கள் உள்ளிட்ட 65 புகலிடக் கோரிக்கையாளர்களும் கடலில் தத்தளித்துக்கொண்டிருந்தபோது இந்தோனேஷிய மக்களால் காப்பாற்றப்பட்டு அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டனர்.
அவர்கள் தற்போது இந்தோனேஷியாவில் உள்ள முகாம் ஒன்றில் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக சர்வதேச தகவல்கள் தெரிவிக்கின்றன.
No comments
Post a Comment