அமெரிக்கர்கள் அனைவரும் துப்பாக்கி வன்முறைகள் குறித்து என்ன நினைக்கிறார்கள் என்கிற தமது நிலைப்பாட்டை ஒட்டுமொத்தமாக மாற்ற வேண்டிய தருணம் வந்திருப்பதாக அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா தெரிவித்திருக்கிறார்.
வரலாற்றுச் சிறப்புமிக்க கிறித்தவ தேவாலயத்தில் வெள்ளை இன துப்பாக்கிதாரி ஒன்பது ஆப்பிரிக்க அமெரிக்கர்களை சுட்டுக்கொன்ற மறுநாள் ஒபாமாவின் இந்த அழைப்பு வந்திருக்கிறது.
இந்த கொலைகளை செய்த சந்தேக நபரான இளம் துப்பாக்கிதாரியை காவல்துறையினர் கைது செய்திருக்கின்றனர். தெற்குக் கரோலினாவில் இருக்கும் லெக்சிங்கட்னைச் சேர்ந்த டைலன் ரூஃப், வடகரோலினாவில் இருக்கும் ஷெல்பி என்கிற இடத்தில் வாகனசோதனையின்போது பிடிபட்டதாக, காவல்துறையினர் அறிவித்துள்ளனர்.
இந்த இளைஞன் கைதுசெய்யப்பட்ட சிறிது நேரத்தில் தொலைக்காட்சி ஊடாக நாட்டு மக்களுக்கு நிகழ்த்திய உரையில், அமெரிக்காவில் நடப்பதைப்போல் பலரை ஒரே சமயத்தில் கொல்லும் படுகொலைச்சம்பவங்கள் பொருளாதார ரீதில் வளர்ச்சியடைந்த மற்ற நாடுகளில்அடிக்கடி நடப்பதில்லை என்று ஒபாமா தெரிவித்தார்.
சார்ல்ஸ்டனில் நடந்த தாக்குதலை வெறித்தனமான படுகொலைகள் என்றும் ஒபாமா கண்டித்தார்.
"வெறுப்புணர்வுத்தாக்குதல்"
இந்த படுகொலைகளை வெறுப்புணர்வுத் தாக்குதல் என்று காவல்துறையினர் தெரிவித்திருந்தனர்.
சரித்திரப் புகழ்மிக்க இந்த ஆப்பிரிக்க அமெரிக்க தேவாலயத்தின் உள்ளே நேற்று புதன்கிழமை மக்கள் பிரார்த்தனைக்கூட்டமொன்றில் இருந்தபோது துப்பாக்கிதாரி சுட ஆரம்பித்திருந்தார். அதில் மதபோதகர் ஒருவர் உட்பட ஒன்பது பேர் கொல்லப்பட்டுள்ளனர். அவர்களில் ஒருவர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தார்.
அந்தச் சம்பவத்துக்கு பின்னர் தேவாலயத்துக்கு வெளியில் மறுபடியும் பிரார்த்தனை நடந்தது. அடிமைகளாக அமெரிக்காவுக்கு கொண்டுவரப்பட்டவர்களால் ஆரம்பிக்கப்பட்ட இந்த தேவாலயம், கறுப்பின தலைவர் மார்ட்டின் லூதர் கிங் ஒரு சமயம் சொற்பொழிவாற்றிய இடம்.
இந்த படுகொலைகள் காரணமாக சார்ல்ஸ்டனில் பதற்றம் அதிகரித்துள்ளது. காரணம் அண்டையிலுள்ள வடக்கு சார்ல்ஸ்டனில் நிராயுதபாணியாக நின்றிருந்த கறுப்பின இளைஞர் ஒருவர் வெள்ளையின பொலிஸ்காரர் ஒருவரால் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் நடந்து ஒரு மாதத்தில் இந்த தாக்குதல் நடந்திருக்கிறது.
துப்பாக்கிச் சூடு நடந்தபோது செத்துவிட்டதுபோல நடித்து ஐந்து வயது குழந்தை ஒன்று உயிர் தப்பியதாக தெரிவிக்கப்படுகிறது.
பைபிள் வகுப்பில் நல்ல பிள்ளைபோல் போய் உட்கார்ந்து அங்கிருந்தவர்கள் ஒன்பது பேரை சுட்டுக்கொன்ற இளைஞன் தற்போது கைது செய்யப்பட்டிருக்கிறார்.


No comments
Post a Comment