Latest News

May 01, 2015

தமிழினத்தின் விடுதலைக்காக அணிதிரள்வோம்! – கூட்டமைப்பு அறைகூவல்
by admin - 0

தமிழினத்தின் விடுதலைக்காக அணிதிரள்வோம்! – கூட்டமைப்பு அறைகூவல்
“அடக்குமுறைக்கும் ஒடுக்குமுறைக்கும் ஆளாகியுள்ள தமிழினம் அழிக்கப்படும் நிலையிலிருந்து விடுதலை பெறவும், இந்நிலைக்குள் அடக்கப்பட்டுள்ள உழைக்கும் வர்க்கத்தின் வாழ்வுரிமையை நிலைநாட்டவும் இன்றைய மே தினத்தில் நாம் ஒன்றுபட்டு அணிதிரள்வோம்.” – இவ்வாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தனது மே தினச் செய்தியில் அறைகூவல் விடுத்துள்ளது.
இது குறித்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் செயலாளரும் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராஜா விடுத்துள்ள செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:-
உலகத் தொழிலாளர் தினம் உலக நாடுகளிலும் இலங்கையிலும் மே முதல் நாளில் கொண்டாடப்படுகின்றது. தொழிலாளர் வர்க்கம், பாட்டாளி வர்க்கம், உழைக்கும் வர்க்கம் என அழைக்கப்படடது. முதலாளி வர்க்கத்துக்கும் ஏகாதிபத்தியத்திற்கும் எதிராக உழைக்கும் வர்க்கத்தின் உரிமைகளுக்காக குரல் எழுப்பும் நாளாகவும் இந்த மே தினம் கொண்டாடப்படுகின்றது. இந்தத் தினம் அமெரிக்க நாட்டில் தொழிலாளர் உரிமைகளை வென்றெடுத்த நாளாக ஆரம்பிக்கப்பட்டது.
பின்னாளில் தொழிலாளர் வர்க்கம், விவசாயிகள் மற்றும் ஏனைய உழைப் பாளர்களையும் இணைத்து அத்தோடு மக்களின் அரசியல் உரிமைகள் மற்றும் மனித உரிமைகளுக் காகவும் போராடி வந்தது. இத்தகைய போராட்டங்கள் உலக நாடுகளில் முதலாளித்துவத்திற்கும், ஏகாதிபத்தியத்திற்கும் எதிராக, அந்தந்த நாடுகளில் ஆட்சிகளை மாற்றித் தொழிலாளர் பலம் கொண்ட ஆட்சிகளாக கார்ல்ஸ் மார்க்ஸின் பொருளாதார தத்துவத்தின் அடிப் படையில் பொதுவுடமைத் தத்துவ சோசலிச ஆட்சிகளாக மாற்றமடைநதுள்ளன. அத்தகைய நாடுகளில் ரஷ்யா, சீனா போன்ற நாடுகளை உதாரணமாகக் கூறலாம். பல நாடுகளில் தொழிலாளர் புரட்சிகள் ஏற்பட்டு வெற்றியடைந்து சுதந்திரமடைந்த நாடுகளாய் மலர்ந்தன.
இவ் வரிசையில் ஆங்கில ஏகாதிபத் தியத்துக்கு எதிராக இலங்கையிலும் போராட்டங்கள் வெடித்தன. தொழிலாளர் வர்க்கமும் கணிசமான பங்கை இலங்கையின் சுதந்திரத்துக்காக அர்ப்பணித்தது. ஆனால், இலங்கைக்குச் சுதந்திரம் கிடைத்தபோது அந்தச் சுதந்திரம் தமிழ் பேசும் மக்களுக்குக் கிடைக்கவில்லை. ஜனநாயக அரசியல் மற்றும் தொழிலாளர் உரிமைகள் அடக்குமுறைக்கும் ஒடுக்குமுறைக்கு முள்ளாக்கப்பட்ட நிலையே ஏற்பட்டுள்ளது. பெளத்த, இராணுவ மயப்படுத்தப்பட்ட ஆட்சிகளாகவே இலங்கையில் வளர்ச்சியடைந்துள்ளது . ஒரு தேசிய இனம், தமிழ் பேசும் மக்கள், ஆட்சி உரிமையை மட்டுமல்ல தனது இன, மொழி, கலை, பண்பாடு, நிலஉரிமை ஆட்சிமுறை உள்ளிட்ட இன அடையாளங்களையே அழிக்கப்படும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளது.
இத்தகைய சூழ்நிலை யில்தான் கடந்த 60 ஆண்டுகளுக் கும் மேலாக இன விடுதலைக்கான ஜனநாயக வழிப் போராட்டங் களும், மனித உரிமைக்கும், உழைக்கும் வர்க்கத்தின் உரிமைகளுக்கும் ஆன மக்கள், தொழிலாளர் போராட்டங்கள் நடைபெற்றன. இராணுவ அடக்குமுறைக்குள் இத்தகைய ஜனநாயகப் போராட்டங்கள் ஒடுக்கப்பட்டபோது முப்பதாண்டுகளுக்கும் மேலாக ஆயுதப் போராட்டமும் இடம்பெற்று இன்று தமிழர் தேசம் இராணுவ அடக்குமுறைக்கு உள்ளாக்கப்பட்டுள்ளது. இலங்கையில் ஜனநாயக உரிமைகள், மனித உரிமைகள் மீறப்பட்டு அதிகார துஷ்பிரயோகங்களும் போர்க்குற்றங் களும் உச்சமடைந்துள்ளன.
இந்தநிலையில் அரசுகளது சர்வாதிகாரத்துக்கும் குடும்ப ஆட்சிக்கும் ஊழல் நிறைந்த கொள்கைகளுக்கும், தமிழின அழிப்புக்கும் எதிராக இலங்கையில் ஒரு ஜனநாயகப் புரட்சி 2015 ஜனவரியில் நடை பெற்று ஆட்சி மாற்றம் ஏற்பட்டுள்ளது. 100 நாள் வேலைத்திட்டத்தை ஆதரித்து சிங்கள மக்கள் பல எதிர்ப்புகளுக் கும் மத்தியில் குறிப்பாகத் தமிழ்பேசும் மக்கள் தற்போதைய ஆட் சியை உருவாக்கியுள்ளனர். இந்தச் சூழ்நிலைக்கு எதிராக, ஊழல் குற்றங்களை மறைக்கும் நோக்கில் தென்னிலங்கையிலும் நாடாளுமன்றத்திலும் கிளர்ச்சிகள் நடைபெறுகின்றன. தமிழ் – முஸ்லிம் மக்களுக்கெதிரான இன மத துவேசக் குரல்கள் தீவிரத்துடன் முன்னெடுக்கப்பட்டு வருகின்றமையைச் சுட்டிக் காட்டவேண்டும்.
தற்போதய ஆட்சியை வீழ்த்தி ஊழல் குற்றங்களிலிருந்து தப்பிவிட ஊழல் அரசியல் சக்திகள் முயற்சிக்கின்றன. இலங்கையில் ஆட்சி அதிகாரங்களைக் கைப்பற்றுவதற்கு மே நாளில் அரசியல் சக்திகள் தங்கள் பலத்தைக் காட்டுவதற்கே முயல்கின்றன. வேறு நாடுகளிலும் இவ்வாறே மே தினம் பயன்படுத்தப்படுகின்றது. ஆனால், தமிழ் பேசும் மக்கள் பிரதேசங்களில் இராணுவ அடக்குமுறை தொடர்கின்றது. ஜனநாயக மனித உரிமைகள் மற்றும் தொழிலாளர், விவசாயிகள், மீனவர் வாழ்வுரிமை, நிலவுரிமை, மனித குலப் பாதுகாப்பு குறிப்பாக பெண்களின் வாழ்வுரிமைகள், பாதுகாப்பு கேள்விக்கும் அடக்குமுறைக்கும் உள்ளாகியுள்ளன.
அரசு, மக்களின் பறிக்கப்பட்ட நிலங்கள் விடுவிக்கப்பட்டு அந்த நிலங்களை உரிமையுள்ள மக்களிடம் கையளிக்கவும் மீள்குடியேற்றவும் வாழ்வாதாரத்தைத் கட்டி எழுப்பவும் 100 நாள் திட்டத்தில் அரசு உறுதி வழங்கியும், அவற்றை முழுமையாக நிறைவேற்றவில்லை. நிலவுரிமைகளுக்கு எதிராகவும் மீனவர் மற்றும் விவசாயிகள் வாழ்வுரிமைக்கெதிராகவும் இராணுவ ஆதிக்கம் தொடர்கின்றது. இராணுவம் மக்களின் நிலங்களில் வர்த்தக நடவடிக்கைகளில் ஈடுபடுகின்றது. மக்களின் நிலங்களை கையளிக்க மறுக்கிறது. இந்த நிலை பெரும் சவாலாக உள்ளது.
இந்நிலையில், இராணுவம் தமிழர்களது நிலத்தில் விவசாயம் செய்து உற்பத்திகளை மக்கள் சந்தைக்குக் கொண்டு வந்துள்ளனர். சென்ற ஆட்சிக் காலத்தில் காணாமற்போனோர் பற்றிப் பதிலளிக்க இன்றைய அரசும் பொறுப்புக் கூறவில்லை. நீண்டகாலமாக நியாயமற்ற முறையில் கைதிகளாகவுள்ளோருக்கு மன்னிப்பு வழங்கி விடுதலை செய்யவும் நடவடிக்கை எடுக்கப்பட வில்லை. விவசாயிகள் தங்கள் உற்பத்திகளைச் சந்தைப்படுத்த வாய்ப்பில்லை. உற்பத்திச் செலவையே பெற முடியவில்லை. பல இலட்சம் மக்கள் இன்னமும் அகதிகளாக 25 ஆண்டுகளாக முகாம்களில் உள்ளனர்.
அவர்கள் மட்டுமல்ல தொழில்துறைகளில்லாமையாலும் வேலை வாய்ப்பு இல்லாமையாலும் இலட்சக்கணக்கான மக்கள் வறுமைக் கோட்டின் கீழேயே பட்டினியுடன் வாழ்ந்து வருகின்றனர். வாழும் சக்தியற்றவர்களாகிவிட்டனர். வாழ்விழந்த 80 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பெண்கள் அநாதரவாகவும், கர்ப்பிணித் தாய்மார், குழந்தைகள், அங்கவீனர்கள் என உழைப்பற்று ஊட்டச்சத்து அற்று குற்றுயிராகி வருகின்றனர். போரினால் பேரழிவுக்குள்ளான தமிழ் மக்கள் பிரதேசங்களில் தொழிற்றுறையைக் கட்டியெழுப் பவும், சீர்குலைந்துள்ள சமுதாயத்துக்குப் புனர்வாழ்வளிக்கவும் வேலை வாய்ப்புக்களை உருவாக்கவும் அதன் மூலம் உற்பத்தியை பெருக்கவும் திட்டங்கள் வகுக்கப்படவில்லை.
பெரு முதலாளிகளின் முதலீடுகளால், சிறுதொழில் வர்த்தகம் வீழ்ச்சியடைந்து வருகின்றது. பல்கலைக் கல்வியும், வேலைவாய்ப் பும் உலகமயமாக்கல், சந்தைப் பொருளாதாரம் எனும் புதிய பொருளாதாரக் கொள்கையை ஈடுசெய்யும் வகையில் திட்டமிடப்படவில்லை. வாழ்க்கைச் செலவுக்கேற்ப சம்பள உயர்வு இல்லை எனும் போராட்டம் நடைபெறுகின்றது. ஆனால், வடக்கு, கிழக்கு மக்கள் வறுமைக்கோட்டின் கீழும் வாங்கும் சக்தியற்றும் ஊட்டச்சத்தற்றும் சீர்குலைந்து வருகின்றபோது பொருளாதார வாழ்வும், வளமும் எங்கே ஏற்பட்டிருக்கின்றது.
எனவே, அடக்குமுறைக்கும் ஒடுக்குமுறைக்கும் ஆளாகியுள்ள தமிழினம் அழிக்கப்படும் நிலையிலிருந்து விடுதலை பெறவும், இந்நிலைக்குள் அடக்கப்பட்டுள்ள உழைக்கும் வர்க்கத்தின் வாழ்வுரிமையை நிலைநாட்டவும் இன்றைய மே தினத்தில் நாம் ஒன்றுபட்டு அணிதிரள்வோம் என அறைகூவி அழைக்கின்றோம்” – என்றுள்ளது.
« PREV
NEXT »

No comments