சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவுக்கும், முன்னாள் ஆட்சியாளர் மகிந்த ராஜபக்சவுக்கும் இடையிலான சந்திப்பு தற்போது ஆரம்பமாகியுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. நாடாளுமன்ற வளாகத்தில் உள்ள சிறிலங்கா அதிபரின் செயலகத்தில் இந்தச் சந்திப்பு இடம்பெற்று வருகிறது.
இந்தச் சந்திப்பு பிற்பகல் 1.30 மணியளவில் நடைபெறும் என்று தீர்மானிக்கப்பட்டிருந்தது.
எனினும், சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன, சுமார் 45 நிமிடங்கள் முன்னதாகவே, நாடாளுமன்ற வளாகத்தில் உள்ள தனது செயலகத்துக்கு வந்து விட்டார்.
ஆனால், மகிந்த ராஜபக்ச, சந்திப்புக்கு திட்டமிடப்பட்ட நேரத்துக்கு சற்றுத் தாமதமாக 1.40 மணியளவிலேயே அங்கு வந்து சேர்ந்தார்.
இதையடுத்து, இருவருக்கும் இடையிலான பேச்சுக்கள் ஆரம்பமாகியுள்ளன.
இந்தப் பேச்சுக்களில், தற்போதைய அரசாங்கத்தின் செயற்பாடுகள் குறித்து எதுவும் பேசப்படாது என்றும், சிறிலங்கா சுதந்திரக் கட்சி விவகாரங்கள் குறித்து மட்டுமே பேசப்படும் என்றும், சிறிலங்கா அதிபர் செயலகம் இன்று காலை அறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தது.
இந்தச் சந்திப்புக்குப் பின்னர், பிரதமர் பதவியில் இருந்து ரணில் விக்கிரமசிங்க நீக்கப்படுவார் என்று மகிந்தவுக்கு நெருக்கமானவர்கள் சிலர் கருத்து வெளியிட்டிருந்தனர்.
இந்த நிலையிலேயே, அதிபர் செயலக அறிக்கை இன்று காலை வெளியிடப்பட்டது.
அத்துடன், இன்றுகாலை ரணில் விக்கிரமசிங்கவை தொலைபேசியில் அழைத்துப் பேசிய மைத்திரிபால சிறிசேன, அவருக்குத் துரோகம் செய்யமாட்டேன் என்று கூறியதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
No comments
Post a Comment