பெங்களூரு: அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதாவின் அப்பீல் மனு மீது தான் அளித்த தீர்ப்பில் பல குறைபாடுகள் குறிப்பாக தப்புக் கணக்கு இருப்பதாக பரபரப்பு கிளம்பியுள்ள நிலையில் அந்தக் குறைபாடுகள் குறித்து நீதிபதி குமாரசாமி தனது சேம்பரில் தீவிர ஆலோசனையில் ஈடுபட்டுள்ளார். அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா, அவரது தோழி சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோர் தாக்கல் செய்த அப்பீல் மனுவை விசாரித்த நீதிபதி குமாரசாமி, நான்கு பேரின் அப்பீல் மனுக்களையும், அவர்களது தரப்பு வாதங்களையும் ஏற்று விடுதலை செய்து அதிரடி தீர்ப்பளித்தார். இந்தத் தீர்ப்பின்போது அவர் நான்கு பேரின் சொத்துக் கணக்கு குறித்து முக்கியமாக குறிப்பிட்டு அதன் அடிப்படையில் விடுதலை செய்வதாக தெரிவித்திருந்தார்.
ஆனால் அங்குதான் பெரும் தப்பு நடந்து விட்டது. அதாவது குமாரசாமி பட்டியலிட்டுக் கூறியிருந்த சொத்துக்கணக்கில் பெரும் கூட்டல் கழித்தல் பிழை நடந்துள்ளது வெளிச்சத்திற்கு வந்துள்ளது. பார்த்ததுமே தெரியும் வகையிலான மிகப் பெரிய பிழை அந்தக் கூட்டல் கழித்தலில் இருப்பது நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நாடே பெரிதும் எதிர்பார்த்த ஒரு மிகப் பெரிய வழக்கில், அதுவும் ஊழல் தொடர்பான, சொத்துக் குவிப்பு தொடர்பான அப்பீல் வழக்கில் இவ்வளவு அஜாக்கிரதையாக எப்படி நீதிபதி குமாரசாமி தவறிழைத்தார் என்று அனைவரும் விமர்சித்து வருகின்றனர்.
இந்தத் தீர்ப்பை எதிர்த்து உடனடியாக கர்நாடக அரசு அப்பீல் செய்ய வேண்டும் என்று சிறப்பு வழக்கறிஞர் பி.வி.ஆச்சார்யா வலியுறுத்தியுள்ளார். தமிழகத்திலும் அதிமுகவைத் தவிர அத்தனை எதிர்க்கட்சிகளும் அப்பீல் செய்ய வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளன. இதனால் பெரும் சிக்கல் ஏற்பட்டுள்ளது. மேலும் ஜெயலலிதா மீண்டும் முதல்வராக பதவியேற்பதற்கும் இது பெரும் குந்தகமாக மாறும் அபாயமும் ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் தனது தீர்ப்பில் சுட்டிக் காட்டப்பட்டுள்ள குறைபாடுகள் குறித்து ஆய்வில் இறங்கியுள்ளார் நீதிபதி குமாரசாமி என்று தகவல்கள் வெளியாகியுள்ளன. தான் விசாரணை நடத்தி வந்த 14ம் எண் சேம்பரில் தனது உதவியார்களுடன் இணைந்து என்ன தவறு நடந்தது, அதை எப்படிச் சரி செய்வது என்பது குறித்து தீவிர ஆலோசனை மற்றும் ஆய்வில் நீதிபதி குமாரசாமி ஈடுபட்டுள்ளதாக தகவல்கள் கூறுகின்றன. ஆனால் தீர்ப்பைத் திருத்தினாலும், கணக்கை சரி செய்தாலும் அது நிச்சயம் ஜெயலலிதாவுக்கு சாதகமாக இருக்காது என்பதால் புதிய பரபரப்பு ஏற்பட்டுள்ளது
No comments
Post a Comment