ஈராக் மற்றும் சிரியாவின் சில பகுதிகளை தங்கள் கட்டுப்பாட்டில் வைத்துள்ள ஐ.எஸ். தீவிரவாதிகள் அந்த பகுதியை தனி நாடாக அறிவித்துள்ளனர்.
ஐ.எஸ். போராளிகளின் தலைவராக இருந்து வந்தவர் அபுபக்கர் அல்பக்தாதி. இவர் அமெரிக்கா கூட்டுப்படை குண்டுவீச்சில் காயமடைந்திருப்பதாகவும், இறந்துவிட்டதாகவும் இருவேறு தகவல்கள் வெளிவந்திருந்தன.
ஆனால் அவர் இறந்தது இதுவரை உறுதி செய்யப்படவில்லை. காயமடைந்திருப்பது மட்டும் உறுதி செய்யப்பட்டுள்ளது. அவர் காயமடைந்ததை அடுத்து ஐ.எஸ். போராளிகளின் துணை தலைவரான அபுஅலா அல்அபாரி போருக்கு தலைமையேற்றார்.
அவரும், முக்கிய தளபதிகளும் ஈராக்கில் உள்ள தல்அபா என்ற இடத்தில் நேற்று முன்தினம் ஒரு மசூதி அருகே ரகசியமாக கூடி பேசிக்கொண்டிருந்தனர்.
இந்த தகவல் அமெரிக்க கூட்டுப்படையினருக்கு கிடைத்தது. அவர்கள் அந்த இடத்தில் சரமாரியாக விமான தாக்குதல் நடத்தினார்கள்.
இதில் அபுஅலா அல்அபாரி உள்பட 12–க்கும் மேற்பட்ட முக்கிய தளபதிகள் கொல்லப்பட்டதாக ஈராக் ராணுவத்துறை அறிவித்துள்ளது.
அவர் கொல்லப்பட்டது ஐ.எஸ். தீவிரவாத அமைப்புக்கு பெரும் பின்னடைவாக கருதப்படுகிறது.
ஆனால் அவர் இறந்ததை இதுவரை அமெரிக்கா உறுதி செய்யவில்லை. அவரது தலைக்கு அமெரிக்கா ரூ. 42 கோடி பரிசு அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
No comments
Post a Comment