Latest News

May 28, 2015

சிறுமி சரண்யா பாலியல் வல்லுறவின் பின் இறக்கவில்லை -செத்துவிட்ட நீதி
by admin - 0

மருத்துவர்களின் அறிவிப்பால் அதிர்ச்சி!கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்னர் பிரபலமான செய்திகளில் ஒன்று சரண்யா என்ற சிறுமியைக் குறித்தது. இந்த நாட்களில் எப்படி வித்தியா தலைப்புச் செய்தியோ அதே போல அந்த நாட்களில் சரண்யா. ஆனால் வித்தியா அளவிற்கு சரண்யாவின் மரணம் பரபரப்பான போராட்டங்களை, திடீர் கைதுகளை நிகழ்த்தவில்லை.
அவளும் கூட்டு பாலியல் வன்புணர்வின் மூலம் கொலை செய்யப்பட்டவள் என்றே சொல்லப்பட்டது. ஆனால் சரண்யாவின் குடும்பப் பின்னணியும், வறுமையும், வெறும் அப்பாவித்தனமான அவளின் உறவுகளும், வாழ்ந்த இடமும் அவளின் மரணத்துக்கான நீதிகோரலைத் தடுத்தன.
அவளின் மரணம் போலவே அவளுக்கான நீதியும் மௌனமாகவே இருந்தது. முதலில் கூட்டுப் பாலியல் வன்புணர்வின் மூலமே சரண்யா மரணித்தாள் என்று கூறிய மருத்துவரால் கூறப்பட்ட சில மணிநேரங்களிலேயே , அவள் மனநோய் காரணமாகவே இறந்தாள் என்று பிறிதொரு மருத்துவரால் சொல்லப்பட்டதாக சிறுமியின் ஒரேயொரு பாதுகாவலரான அவரது அம்மம்மாவிற்குத் தெரிவிக்கப்பட்டது.
ஆயினும் சில மனித உரிமை ஆர்வலர்கள், ஊடகத்துறை சார்ந்தவர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் நீதித்துறையைச் சார்ந்தவர்கள் எடுத்த முயற்சியினால் இந்த மாதத்தின் தொடக்கப்பகுதியில் சரண்யாவின் மரண மர்மத்தை அறிய அவளின் சடலம் தோண்டியெடுக்கப்பட்டது. இவ்வாறு புதைத்த மனிதச் சடலங்களை சட்ட தேவைகளுக்காகத் தோண்டியெடுத்துப் பரிசோதனை செய்யும் இடமான பொரளைக்கு அனுப்பியும் வைக்கப்பட்டது.
அங்கு நடந்ததென்ன?
சரண்யாவுக்கு இழைக்கப்பட்ட அநீதிக்கு நீதிகோரி அவளின் அம்மம்மாவான பஞ்சாட்சரம் சீதையம்மா (60) மட்டுமே போராடி வருகின்றார். இம்முறையும் அவரின் உறவுக்காரப் பெண்ணுடனும், தோண்டியெடுக்கப்பட்ட சரண்யாவின் சடலத்துடனும் அம்மம்மா மட்டுமே பயணமானார்.
சரண்யாவின் சடலத்தை முதலில் பரிசோதித்த அதிகாரி, “அவளின்ட தொடைப் பகுதியிலயும், கன்னங்களிலயும் காயம் இருக்கு என்னு சொன்னார் . மறுவாட்டி வாங்க சரியா சொல்றோம்னு அனுப்பிவச்சிட்டாங்க. திரும்பி வந்துட்டோம்’ என்று சீதையம்மா சொல்கிறார்.
அந்தப் பரிசோதனை அதிகாரி சொன்னதற்கு இணங்க மீண்டும் பொரளைக்குப் போனார் சீதையம்மா. அங்கு அந்த அதிகாரி சொன்ன விடயம் அந்த மூதாட்டியின் தலையில் பேரிடியை இறக்கியிருக்கிறது.
“உங்க பொண்ண யாரும் ரேப் பண்ணல. அதுக்கான தடயங்கள் ஏதுமில்ல. நுரையிரலில் கிருமி இருந்திருக்கு. அதைக் கவனிக்காம விட்டுட்டீங்க. அந்தக் கிருமிகள் சரண்யாவின் மூளையை பாதிச்சிருக்கு. அதனாலயே செத்துட்டா” எனச் சொல்லி சரண்யாவின் கோப்புக்களை மூடி அதைப் பொலிஸாரிடம் கையளித்துவிட்டார் அந்த அதிகாரி.
சீதையம்மா அதிகாரியை ஒரு முறை உலுப்பியாவது நீதி கேட்கத் துணிந்தார். “கிளிநொச்சி ஆஸ்பத்திரியில டொக்டர் ஐயா பாலியல் வன்புணர்வுக்கு அப்புறம்தான் குழந்த செத்திருக்கான்னு சொன்னாரே. அவர் எதுக்கு அப்பிடி சொன்னார்? அதுவும் பொய்யா?”
“அவர் ஏன் அப்பிடி சொன்னாருன்னு எனக்கு தெரியாது” சிங்களத்தில் சொன்ன அதிகாரி அதற்குப் பின்னர் சீதையம்மாவிடம் எதுவும் பேசவில்லை. நீதி பெறுவதற்காக மட்டுமே தோண்டியெடுத்துச் சென்ற சரண்யாவின் சடலத்தை மறுபடியும் அதே மயானத்துக்குக் கொண்டு வந்து புதைத்துவிட்டனர்.
சடலத்தை ஏற்றி இறக்குவதற்கான வாகனச் செலவைத் தொண்டு நிறுவனம் ஒன்று கொடுத்திருக்கிறது. சீதையம்மாவின் கையில் அரச பணமாக 1500 ஐ கொடுத்திருக்கிறார்கள். அது சரண்யாவின் சடலத்தோடு நீதிக்கான பயணம் செய்த செலவுக்கானது என்பதை அவரே ஒப்புக்கொள்கிறார். புதைத்த சடலத்தைத் தோண்டியெடுத்து அதனை ஏற்றி இறக்கி, சேவகம் செய்யும், கூடவே பயணிக்கும் அத்தனை பேருக்குமான செலவை சீதையம்மாவின் உறவுக்காரப் பெண் செய்திருக்கிறார்.
அடுத்த மாசத்துல நீதிமன்றத்துல வச்சி, சரண்யா நுரையீரல் நோயிலதான் செத்தானு சொல்லப் போறாங்க. அது பற்றி என்கிட்ட எந்த ஆதாரமும் குடுக்கல. வாய்மொழி மூலமா தான் சொன்னாங்க. பெரிய பைல் கட்டு ஒன்னு பொலிஸ்கிட்ட குடுத்தார் அந்த அதிகாரி. அதுல என்ன இருக்குனு தெரியல. குடுத்தது இந்த காகிதம்தான். அதுவும் என்ன எழுதி இருக்குனு தெரியல. எல்லாமே சிங்களத்துல இருக்கு – என்று சொல்லியபடியே தன் கைப் பைக்குள்ளேயே வைத்திருக்கும் அந்தக் கடிதத்தை எங்களின் பார்வைக்கும் நீட்டுகிறார். இப்போதைக்கு சரண்யாவின் மரணத்துக்கு நீதி வேண்டும் எனத் தனித்தே போராடி அந்த மூதாட்டியின் கையில் மிச்சமிருப்பது அந்தத் துண்டுக் கடிதமும், சரண்யாவின் சில புகைப்படங்களும் மட்டும்தான். தனிச் சிங்களத்தில் அந்தத் துண்டுக் கடிதம் எழுதப்பட்டுள்ளது.
இதேவேளை, சரண்யாவின் மரணம் சம்பவித்த அன்றே வன்னி மாவட்டப் பாராளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் ஸ்தலத்துக்கு விரைந்து பாதிக்கப்பட்ட குடும்பத்தையும், உறவினர்களையும், அயலவர்களையும் சந்தித்து இந்த விடயம் குறித்து உரையாடியிருக்கிறார்.
சரண்யாவின் அம்மம்மாவின் தகவலின்படி, அவளது வெற்றுடன் கையளிக்கப்படும்போது அந்தச் சிறுமி கூட்டுப்பாலியல் வன்முறைக்கு உள்ளாக்கப்பட்டிருப்பது உடற்காயங்களிலிருந்து தெரியவருவதாக மருத்துவ அதிகாரி ஒருவர் தெரிவித்திருக்கிறார். இது தெரிவிக்கப்படும்போது, அந்த அம்மம்மாவுடன் உள்ளூர் மாதர் சங்கத் தலைவியும், கனகராயன்குளம் பொலிசாரும் அங்கே நின்றிருந்ததாகவும் தன்னிடம் அந்த அம்மம்மா தெரிவித்ததாகவும் எம்.பி ஆனந்தன் ஏற்கனவே கொழும்பு மிரரிடம் தெரிவித்திருந்தார்.
இது குறித்து கருத்துவெளியிட்டிருந்த சிறுவர் பாதுகாப்பு அமைச்சின் இராஜாங்க அமைச்சர் ரோஸி சேனநாயக்க, இந்த விடயம் குறித்து சிறுவர் அதிகார சபை அதிகாரிகள் களத்தில் இறங்கியிருப்பதாகவும், உண்மையைக் கண்டுபிடிக்கும் பொருட்டுத் தனது அமைச்சு விசேட கவனம் செலுத்தி வருவதாகவும் தெரிவித்திருந்தார்.
தற்போது எழுத்துள்ள சூழ்நிலை குறித்துக் கருத்துவெளியிட்ட எம்.பி சிவசக்தி ஆனந்தன், அந்தப் பாடசாலைச் சிறுமியினது இறப்புத் தொடர்பில் முன்னுக்குப் பின் முரணான செய்திகள் வெளியாகுவது குறித்து அதிருப்தி வெளியிட்டதோடு, இது குறித்து ஏன் உடனடி உடற்கூற்றியல் பரிசோதனை ஒன்று செய்யப்பட முடியாது என்றும் கேள்வியெழுப்பினார்.
இந்தக் கருத்தினையெ , முல்லைத்தீவு பிரதேச மக்களை மாகாணசபையில் பிரதிநிதித்துவப்படுத்தும் உறுப்பினரான வைத்திய கலாநிதி சிவமோகன் தெரிவித்தார்.
“ஏன் உடற்கூற்றியல் பரிசோதனை இது விடயத்தில் மேற்கொள்ளப்பட முடியாது? அவ்வாறு செய்தால் உண்மைநிலை வெளிவர ஏதுவாக இருக்கும்,” என்று அவர் தெரிவித்தார்.
இப்போதைக்கு, சரண்யாவின் மரணம் தொடர்பிலான பரிசோதனைகள் உத்தியோகபூர்வமாக முடிந்துவிட்டன. அவள் பாலியல் வன்புணர்வுக்குட்படுத்தப்படவில்லை. நுரையீரல் கீருமி தாக்கத்தினாலேயே இறந்தாள் என நீதிகோரிய சீதையம்மாவுக்கும் பதில் சொல்லியாயிற்று.
இதே கருத்து நீதிமன்றிலும் தெரிவிக்கப்படுமாக இருந்தால் சரண்யாவின் மரணம் தொடர்பிலான மர்மம் நீங்கிவிடும். அதன் பிறகு யாரும் சரண்யா பற்றி கேள்வியெழுப்ப முடியாது. ஏனெனில் சட்டத்தை யாரும் எதிர்க்கேள்வி கேட்கமுடியாது என்பது மட்டுமல்ல விமர்சிக்கவும் முடியாது…!


« PREV
NEXT »

No comments