Latest News

May 01, 2015

மீண்டும் வெல்லுமா சென்னை கிங்ஸ் chennai king
by admin - 0

ஐதராபாத்: ஐ.பி.எல்., லீக் சுற்றில் சென்னை, ஐதராபாத் அணிகள் இரண்டாவது முறையாக மோதுகின்றன. இதில் சென்னை அணி மீண்டும் வெற்றி பெறும் என, எதிர்பார்க்கப்படுகிறது. 

எட்டாவது ஐ.பி.எல்., தொடர் இந்தியாவில் நடக்கிறது. இதில் ஐதராபாத்தில் நடக்கும் லீக் போட்டியில் தோனியின் சென்னை அணி, வார்னரின் ஐதராபாத் அணியை சந்திக்கிறது. 

சென்னை அணி இதுவரை பங்கேற்ற 8 போட்டிகளில் 6 வெற்றி, 2 தோல்வியுடன் 12 புள்ளி பெற்று முதலிடத்தில் உள்ளது. மீதமுள்ள 6 போட்டிகளில் 2 ல் வென்றால், 'பிளே ஆப்' சுற்றுக்கு முன்னேறி விடலாம். 

ஐதராபாத் அணிக்கு எதிரான முதல் லீக் போட்டியில் சதம் அடித்த பிரண்டன் மெக்கலம், ஸ்மித், ரெய்னா, டுபிளசி, பிராவோ மீண்டும் எழுச்சி காணலாம். இந்த அணிக்கு எதிராக எப்போதும் சிறப்பான பேட்டிங்கை வெளிப்படுத்தும் கேப்டன் தோனி, கடந்த முறை போல, இன்றும் அரைசதம் எட்டுவாரா என, பொறுத்திருந்து பார்க்கலாம். பின் வரிசையில் 'புதிய வரவு' பவான் நேகி, ஜடேஜாவும் ரன் குவிப்புக்கு உதவலாம். 

நெஹ்ரா ஏமாற்றம்: பந்துவீச்சை பொறுத்தவரையில் பவான் நேகி தவிர மற்றவர்கள் சொல்லிக் கொள்ளும் படி இல்லை. இதுவரை 13 விக்கெட் வீழ்த்திய நெஹ்ரா, பிராவோ (11 விக்.,), மோகித் சர்மா (7) என, அனைவரும் கோல்கட்டா அணிக்கு எதிராக ஏமாற்றினர். இன்று இவர்கள் கைகொடுப்பர் என நம்புவோம். தொடர்ந்து சொதப்பும் ஜடேஜாவுக்கு சற்று ஓய்வு கொடுத்தால் நல்லது. 

நல்ல துவக்கம்: ஐதராபாத் அணிக்கு கேப்டன் வார்னர், ஷிகர் தவான் இணைந்து நல்ல துவக்கம் தருகின்றனர். ஆனால், பின் வரும் லோகேஷ் ராகுல், நமன் ஓஜா, போபரா, 'ஆல் ரவுண்டர்' ஹென்ரிக்ஸ் இதை சரியாக பயன்படுத்த மறுக்கின்றனர். 

பவுலிங்கில் புவனேஷ்வர் குமார். இஷாந்த் சர்மா, ஸ்டைனுடன், நியூசிலாந்தின் பவுல்ட் இருப்பது கூடுதல் பலம். பிரவீண் குமார், கரண் சர்மா விக்கெட் வேட்டை நடத்தாது பலவீனம். 

ஐதராபாத் அணியை பொறுத்தவரையில் 7 போட்டியில் 3 வெற்றி, 4 தோல்வி பெற்று 5வது இடத்தில் (6 புள்ளி) உள்ளது. அடுத்து வரும் இரண்டாவது சுற்று போட்டிகளில் அசத்தும் பட்சத்தில் அடுத்த சுற்று வாய்ப்பு குறித்து யோசிக்கலாம். 

இதனால், இன்று சென்னை அணிக்கு எதிராக கடும் போராட்டத்தை வெளிப்படுத்தும் எனத் தெரிகிறது.

இதுவரை

ஐ.பி.எல்., அரங்கில் சென்னை, ஐதராபாத் அணிகள் 5 முறை மோதின. இதில் சென்னை 4, ஐதராபாத் ஒரு போட்டியில் வென்றன.
« PREV
NEXT »

No comments