Latest News

May 25, 2015

யுத்தத்தின் போது படுகாயமுற்று இடுப்பிற்கு கீழ் இயங்காத ஈழ உறவிற்கு உதவியினை வழங்கியது, உலகத் தமிழ் மக்கள் மறுவாழ்வு உரிமைகள் ஆணையம்.
by admin - 0




இலங்கையில் ஏற்பட்ட கடும் யுத்தம் காரணமாக மிகவும் மோசமான... பின்தங்கிய நிலையில் உள்ள அதாவது வாழ்வாதரங்களை இழந்த உறவுகள்... உடலுறுப்புக்கள் மற்றும் உதவிகளற்ற குடும்பங்களை கண்டறிந்து அவர்களுக்குத் தேவையான தொழில் உதவி, மருத்துவ உதவி மற்றும் கல்வி உதவிகளை வழங்கி சமீப காலமாக பேருதவி புரிந்து வருகின்ற உலகத்தமிழ் மக்கள் மறுவாழ்வு உரிமைகள் ஆணையமானது மிகவும் பின்தங்கிய குடும்பங்களின் இருண்ட வாழ்வில் ஒளியேற்றி வருகின்றமை குறிப்பிடத்தக்க விடயமாகும்.

அந்த வகையில் இந்த மாதத்திற்கான உலகத் தமிழ் மக்கள் மறுவாழ்வு உரிமைகள் ஆணையத்தின் வாழ்வாதாரப் பயனாளியான, திருகோணமலை மாவட்டம் பள்ளிக்குடியிருப்பு, தங்கபுரத்தைச் சேர்ந்த திரு. கிருஷ்ணபிள்ளை கோணேஸ் என்கின்ற சகோதரன் வாழ்வாதாரமின்றி தனது மனைவி, பிள்ளைகளுடன் மிகவும் துயரங்களுடன் தவித்து வந்தார்.

ஈழத்தில் நடந்த யுத்தத்தின் காரணமாக படுகாயமுற்று இடுப்பிற்கு கீழ் இயங்க முடியாத நிலையில் படுக்கைப் புண் உருவாகி மிகவும் கொடிய வலியோடு வாழ்ந்து வருகின்ற முன்னாள் போராளியான திரு. கிருஷ்ணபிள்ளை கோணேஸ் என்கின்ற சகோதரன் தனது அன்றாட வாழ்வதார தேவைகளுக்கும் வசதியற்ற நிலையிலும்...

வேறு எந்த உறவுகளின் உதவிகளுமின்றி தனது மனைவி மற்றும் நான்கு (2 பெண் குழந்தைகள், 2 ஆண் குழந்தைகள்) குழந்தைகளைக் காப்பாற்ற முடியாத நிலையிலும் நமது ஆணையத்திடம் உதவி கேட்டு வந்திருந்தார்.

இவரது உதவி வேண்டுகையினை ஏற்றுக் கொண்ட உலகத் தமிழ் மக்கள் மறுவாழ்வு உரிமைகள் ஆணையமானது அவருக்கான வாழ்வாதார நிதியாக அதாவது தவணை முறையில் முச்சக்கர வண்டி ஒன்றினைப் பெற்றுக் கொள்வதற்காக ஒரு இலட்சம் இலங்கை ரூபாய்களை வழங்கி உதவியுள்ளது.

நமது ஆணையத்தின் உதவியினைப் பெற்றுக் கொண்டவுடன் ஏற்கனவே திட்டமிட்டபடி உடனடியாக முச்சக்கர வண்டி (ஆட்டோ) ஒன்றினைத் தவணை முறையில் கொள்முதல் செய்துள்ளார்.

அந்த முச்சக்கர வண்டி மூலமாக வருகின்ற வருமானத்தில் தவணை முறையில் மாதந்த கடன் அடிப்படையில் பெற்றுக் கொண்ட முச்சக்கர வண்டிக்கான முழுப்பணத்தையும் செலுத்தி நிறைவு செய்வதோடு... தனது குடும்பத்தையும் காப்பாற்றுவதோடு சேர்த்து நான்கு குழந்தைகளின கல்வி மற்றும் எதிர்காலத் தேவைகளையும் ஓரளவேனும் பூர்த்தி செய்ய முடியும் என்று முழு நம்பிக்கையினைத் தெரிவித்துள்ளார். அத்தோடு உலகத்தமிழ் மக்கள் மறுவாழ்வு உரிமைகள் ஆணையத்திற்கும் உதவிகள் நல்கிய உறவுகளுக்கும் தனது நன்றிகளையும் தெரிவித்துள்ளார்.

அவருக்கான உதவிகள் நல்கிய அனைத்து அன்புள்ளங்களுக்கும் உலகத்தமிழ் மக்கள் மறுவாழ்வு உரிமைகள் ஆணையத்தின் மனமார்ந்த நன்றிகள்.!!

“அன்பினால் அனைவரையும் அரவணைப்போம்”

– முதன்மைச் செயலகம்,
உலகத்தமிழ் மக்கள் மறுவாழ்வு உரிமைகள் ஆணையம்.
« PREV
NEXT »

No comments