நால்வர் அடங்கிய குழு இலங்கையை மறைமுகமாக ஆட்சி செய்து வருவதாகவும் அவர்கள் நால்வரும் மஹிந்த ராஜபக்ஷவின் ஆதரவாளர்கள் எனவும் கொழும்பு ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
இது தொடர்பில் அவ்வூடகம் மேலும் தெரிவிக்கையில்,
கடந்த ஜனவரி மாதம் இலங்கையில் நடைபெற்ற தேர்தலில் மக்களின் ஒருமித்த எதிர்ப்பு காரணமாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ படுதோல்வி அடைந்தார். இதையடுத்து இலங்கை சுதந்திர கட்சியின் சார்பில் போட்டியிட்ட மைத்திரிபால சிறிசேனா வென்று புதிய ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
மேலும் இலங்கை சுதந்திர கட்சியின் தலைவராக இருந்த ராஜபக்ஷ தனது தலைவர் பதவியையும் சிறிசேனாவுக்கு விட்டுகொடுத்தார். இது குறித்து அவர் கூறுகையில் கட்சியில் பிளவு ஏற்படக்கூடாது என்பதற்காகவே தனதுபதவியை விட்டுகொடுத்ததாக தெரிவித்தார். சிறிசேனாவுக்கு இலங்கையில் சில ஆக்கப்பூர்வ செயல்களில் ஈடுபட்டார். மேலும் கட்சியை வலுப்படுத்துவதற்காக பல புதிய முயற்சிகளை மேற்கொண்டார்.
இந்நிலையில், அடுத்து வரும் இலங்கை பொது தேர்தலை தனது தலைமையின் கீழ் சந்தித்து அதில் வெற்றி பெற வேண்டும் என்று பல முயற்சிகளை செய்துவருகிறார். இது ஒரு பக்கம் இருக்க, அவருக்கு எதிராகவே கட்சியின் சதி நடப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் அவரது செயல்களுக்கு தடங்கல்கள் ஏற்படுத்தும் முயற்சியில் அக்கட்சியை சேர்ந்த நால்வர் அணி இறங்கியுள்ளது . இவர்கள் முன்னாள் தலைவர் ராஜாபக்ஷேவின் ஆதரவாளர்கள் என்றும் கூறப்படுகிறது.
யார் இந்த நால்வர் அணி:
தேசிய சுதந்திர கட்சியின் எம்.பி. விமல் வீரவன்ச, மகாஜன எக்சத் பெரமுன கட்சியின் எம்.பி. தினேஷ் குணவர்தன , இலங்கை சுதந்திர கட்சி எம்.பி. வாசுதேவ நாணயாக்கரா, மற்றும் உதய கம்மன்பில்ல ஆகியோரே அந்த நால்வர் அணியாகும்.
இலங்கை சுதந்திர கட்சியை சேர்ந்த பல முன்னாள் அமைச்சர்கள், எம்பிகள், முதலமைச்சர்கள் ஆகியோரின் ஆதரவுடன் மைத்திரிபாலவின் நடவடிக்கைகளுக்கு முட்டுக்கட்டு போடும் முயற்சியில் இவர்கள் இறங்கியுள்ளனர்.
மேலும் இந்த நால்வர் அணியே இலங்கை சுதந்திர கட்சியை மறைமுகமாக நடத்துவதாகவும் அதிர்ச்சிகரமான தகவல்கள் வெளியாகியுள்ளன. அவர்கள் மக்களின் மத்தியில் சிறிசேனாவுக்கு எதிராக கருத்துகளை விதைப்பதுடன், வரவிருக்கும் பொதுதேர்தலில் போட்டியிட தங்களுக்கு ஆதரவானவர்களை தேர்ந்தெடுக்குபடியும் இலங்கை சுதந்திர கட்சியின் மத்திய கமிட்டிக்கு உத்தரவிட்டுள்ளனர்.
இவ்வாறு இவர்கள் தேர்ந்தேடுக்க கூறும் எம்பிகளின் மீது ஏற்கனவெ ஊழல் மற்றும் லஞ்சம் தொடர்பான வழக்குகள் நிலுவையில் உள்ளதாக கூறப்படுகிறது. மேலும் வரவிருக்கும் இலங்கை பொது தேர்தலில் முன்னாள் ஜனாதிபதி ராஜபக்ஷவை பிரதமர் வேட்பாளராக களமிறக்க அவர்கள் திட்டம் தீட்டி வருவதாகவும் அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.
இந்நிலையில் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டணியின் எம்பிகள் கூட்டத்தில் பேசிய இலங்கை சுதந்திர கட்சியின் பொது செயலாளரும் வர இருக்கும் தேர்தலில் குற்றப்பின்னணி உள்ளவர்களும் போட்டியிட மனு தாக்கல் செய்யலாம் என்று கோரியுள்ளார்.
இதன் மூலம் நால்வர் அணியின் கோரிக்கைகளுக்கு அக்கட்சியின் பொது செயலாளரும் ஒப்புகொண்டதாகவே தெரியவருகிறது. இந்த திட்டங்களுக்கு எல்லாம் மகிந்த ராஜபக்ஷவே பின்பலமாக இருப்பதாகவும் , அவரே இலங்கை சுதந்திர கட்சியை மறைமுக இயக்குவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
கட்சியின் இளைய எம்பிகள் பலரும் மூத்த எம்பிகள் சிலரும் ஜனாதிபதி மைத்திரி பால சிறிசேனாவுக்கு ஆதரவாக உள்ளனர். அவரின் புதிய அரசியல் கலாசாரத்தை உருவாக்கும் முயற்சிக்கு ஆதரவாக உள்ளனர்.
ஆனாலும் பெரும்பான்மையான கட்சி உறுப்பினர்கள் நால்வர் அணிக்கு ஆதரவாக உள்ளதாகவும் வரவிருக்கும் தேர்தலில் ராஜபக்ஷவை பிரதமர் வேட்பாளராக நிறுத்தவும் முயற்சி செய்துவருகின்றனர்.
இதையெல்லமை வைத்து பார்க்கும்போது இலங்கை சுதந்திர கட்சி யார் கட்டுபாட்டின் கீழ் உள்ளது என்பதில் பெரிய கேள்வி எழுந்துள்ளது.
எனவே இந்த விவகாரத்தில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனா தலையிட்டு கடுமையான நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என்று நடுநிலையாளர்கள் எதிர்ப்பார்க்கிறார்கள்.
அவ்வாறு கட்சியில் சீர்திருத்தம் செய்தால்தான் வரவிருக்கும் தேர்தலில் சிறிசேனாவின் கீழ் அதிக இடங்களை கைப்பற்ற முடியும் என்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர் என கொழும்பு ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.
No comments
Post a Comment