Latest News

April 03, 2015

விடுதலைப்புலிகளிடமிருந்து கைப்பற்றப்பட்ட ஆயுதங்கள் போகோ ஹராம் ,உக்ரேன் தீவரவாதிகளுக்கு விற்பனை!
by Unknown - 0


ரஷ்யாவிற்கான இலங்கையின் முன்னாள் தூதுவர் உதயங்க வீரதுங்க யுக்ரைன் ஆயுததாரிகளுக்கு விற்பனை செய்ததாகக் கூறப்பட்டுள்ள ஆயுதங்கள், விடுதலைப்புலிகளிடமிருந்து கைப்பற்றப்பட்ட ஆயுதங்களா என்ற சந்தேகம் ஏற்பட்டுள்ளதாக அமைச்சரவைப் பேச்சாளர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார்.

இந்த முறைப்பாடு தொடர்பான விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக அமைச்சர் கூறினார்.

ரஷ்யாவிற்கான இலங்கையின் முன்னாள் தூதுவர் உதயங்க வீரதுங்க யுக்ரைன் ஆயுததாரிகளுடன் ஆயுதக் கொடுக்கல் வாங்கல்களில் ஈடுபட்டுள்ளதாக முறைப்பாடு கிடைத்துள்ளதாக வெளிவிவகார அமைச்சு அண்மையில் தகவல் வெளியிட்டிருந்தது.

யுக்ரைன் அரசாங்கத்தின் ஊடாக இந்த முறைப்பாடு முன்வைக்கப்பட்டதாக வெளிவிவகார அமைச்சு குறிப்பிட்டது.

நடுக்கடலில் இடம்பெற்ற ஆயுத விற்பனை தொடர்பிலும் தகவல்கள் கிடைத்துள்ளதெனவும் அமைச்சர் தெரிவித்தார்.

அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் மாநாட்டில் உரையாற்றும் போதே அமைச்சர் ராஜித சேனாரத்ன இவ்வாறு தெரிவித்தார்.

அமைச்சர் அங்கு தொடர்ந்து உரையாற்றுகையில்,

ரஷ்ய நாட்டில் இலங்கைத் தூதுவராக கடமையாற்றிய உதயங்க வீரதுங்கவை காணவில்லை. அவரை தேடிக் கண்டுபிடிக்கும் நடவடிக்கைகள்  முன்னெடுக்கப்படுகின்றன. இவருக்கு எதிராக உக்ரேன் நாட்டு அரசு  எமக்கு முறைப்பாடுகளை செய்துள்ளது.

உக்ரேன் தீவிரவாதிகளுக்கு ஆயுத விற்பனையில்  ஈடுபட்டார் என்பதே அந்த முறைப்பாடாகும். எனவே அவரை தேடி வருகிறோம்.

இதேபோன்று கடந்த ஆட்சிக் காலத்தில் ஆயுத வியாபாரம் மும்முரமாக இடம்பெற்றுள்ளமை தொடர்பாக தகவல்கள்  கிடைத்துள்ளன. விடுதலைப் புலிகளிடமிருந்து யுத்தத்தின் ஆரம்பக்கட்டத்தில் கைப்பற்றப்பட்ட ஆயுதங்கள் தொடர்பாக தரவுகள்  உள்ளன.

ஆனால் புலிகளிடமிருந்து இறுதிக்கட்ட யுத்தத்தின் போதும் யுத்தம் முடிவடைந்த பின்னரும் பெருந்தொகையான ஆயுதங்கள் கைப்பற்றப்பட்டன. ஆனால் அவ் ஆயுதங்கள் தொடர்பாக எவ்விதமான தரவுகளோ அறிக்கைகளோ கிடையாது.

இவ்வாறு கைப்பற்றப்பட்ட ஆயுதங்களை உக்ரேன் தீவிரவாதிகளுக்கு மட்டுமல்ல நைஜீரியாவில் பொகோஹராம் தீவிரவாதிகளுக்கும் விற்பனை செய்யப்பட்ட தகவல்கள் கிடைத்துள்ளன.

அது மட்டுமல்லாது நடுக்கடலில் கப்பல்களிலும் ஆயுத விற்பனை இடம்பெற்றுள்ளது. அத்தோடு தனியார் நிறுவனங்களுக்கும் ஆயுதங்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளது. இதற்கும் ராஜபக்ஷ குடும்பத்தினருக்கும் தொடர்புகள் உள்ளது.

புலிகளிடமிருந்து பெறப்பட்ட ஆயுதங்களே இவ்வாறு விற்பனை செய்யப்பட்டுள்ளது. இதேபோன்று புலிகளிடமிருந்து கைப்பற்றப்பட்ட  தங்கத்திற்கும் என்ன நடந்தது என்பது தெரியவில்லை.


இவ்வாறு விற்பனை செய்யப்பட்ட ஆயுதங்கள் அரசின் ஆயுதங்கள் அல்ல புலிகளின் ஆயுதங்களேயாகும். இவ் விடயம் தொடர்பாக விசாரணைகள் நடைபெற்று வருகின்றது. 


« PREV
NEXT »