‘‘கனவில் கூட, எனக்கு அரசியல் ஆசை கிடையாது’’, என்று நடிகர் விஷால் கூறினார்.
ஒருங்கிணைப்புநடிகர் விஷால் தனது ரசிகர் மன்றங்களை ஒருங்கிணைத்திருக்கிறார். அவருடைய ரசிகர் மன்றத்தின் புதிய தலைவராக ஜெயசீலன் என்பவர் நியமிக்கப்பட்டு இருக்கிறார்.
இவர், ஏற்கனவே விஜய் ரசிகர் மன்ற தலைவராக இருந்தவர். ரசிகர் மன்ற ஒருங்கிணைப்பையொட்டி, விஷால் தனது ரசிகர்களை நேற்று சந்தித்தார். சென்னையை அடுத்த வானகரத்தில் உள்ள ஒரு திருமண மண்டபத்தில் இந்த சந்திப்பு நடந்தது. தமிழ்நாடு, கேரளா, ஆந்திரா, கர்நாடகா ஆகிய மாநிலங்களை சேர்ந்த ரசிகர்கள் கலந்துகொண்டனர்.
பேட்டிரசிகர்களை சந்தித்து பேசிய பின், நடிகர் விஷால் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:–
நான் சினிமாவுக்கு வந்து 10 ஆண்டுகள் ஆகிறது. இந்த 10 ஆண்டுகளில் எனக்கு எவ்வளவோ அனுபவங்கள் கிடைத்துள்ளன. எனவே ரசிகர் மன்றத்தில் சில மாற்றங்களை செய்ய விரும்பினேன். என் ரசிகர் மன்றத்துக்கு ‘அகில இந்திய புரட்சித்தளபதி விஷால் ரசிகர்கள் நற்பணி இயக்கம்’ என்று புதிதாக பெயர் சூட்டப்பட்டு இருக்கிறது. பெண் கல்விக்கு என் ரசிகர் மன்றம் முக்கியத்துவம் கொடுக்கும். கழிப்பறை இல்லாத பள்ளிக்கூடங்களில் கழிப்பறைகள் கட்டிக்கொடுக்கப்படும். பள்ளிகளில் சிறப்பாக படிக்கும் மாணவிகள் கல்லூரிக்கு சென்று படிக்க உதவும்.
அரசியல் ஆசை இல்லைஇதனால் வரை நான் தனியாகவும், ரசிகர்கள் தனியாகவும் செய்துவந்த நற்பணிகளை இனிமேல் இணைந்து செய்ய இருக்கிறோம். முறைப்படுத்துவது அவசியம் என்பதால் ரசிகர் மன்றங்களை ஒருங்கிணைத்திருக்கிறேன்.
இது முழுக்க முழுக்க நற்பணி சார்ந்தது. இதில் அரசியல் ஈடுபாடோ, நோக்கமோ எதுவும் இல்லை. கனவில் கூட, எனக்கு அரசியல் ஆசை கிடையாது. என் ரசிகர் மன்றங்கள் ஆந்திரா, கேரளா மற்றும் கர்நாடகாவிலும் செயல்படும். மாதந்தோறும் 2–வது ஞாயிற்றுக்கிழமைகளில் ரசிகர்களை சந்தித்து பேசுவேன்.
‘பாயும் புலி’நான் இப்போது நடித்து கொண்டிருக்கும் புதிய படத்துக்கு ‘பாயும் புலி’ என்று பெயர் சூட்டப்பட்டு இருக்கிறது. இது, ரஜினிகாந்தின் படத்தலைப்பு. இந்த பெயர் சூட்டப்பட்ட பின் என் படத்துக்கு ஒரு பலம் வந்திருக்கிறது.
காஜல் அகர்வாலுடன் நான் ஜோடியாக நடிக்கும் முதல் படம் இது. இதுவும் ஒரு போலீஸ் கதைதான். ஆனால் வழக்கமான போலீஸ் கதை அல்ல. நடுத்தர வர்க்கம் பற்றிய கதை. நிஜ சம்பவங்களையும், நிஜ முகங்களையும் இதில் பார்க்கலாம்.
நடிகர் சங்கம்நடிகர் சங்க தலைவர்களில் சரத்குமார், ராதாரவி ஆகிய 2 பேருடனும் எனக்கு எந்த பிரச்சினையும் இல்லை. இருவர் மீதும் நான் மதிப்பும், மரியாதையும் வைத்திருக்கிறேன். எம்.ஜி.ஆர்., சிவாஜி வியர்வையில் வளர்ந்த அந்த கட்டிடம் புதுப்பொலிவுடன் கட்டப்பட வேண்டும் என்பதே என் ஆசை.
நடிகர் சங்கத்துக்கு புதிய கட்டிடம் கட்டப்பட்ட பிறகு தான் நான் திருமணம் செய்துகொள்வேன்.
இவ்வாறு விஷால் கூறினார்.
No comments
Post a Comment