Latest News

April 01, 2015

கொம்பன் படத்திற்கு இடைக்காலத் தடை இல்லை- வழக்கு ஒத்திவைப்பு!
by Unknown - 0


கார்த்தி கதாநாயகனாக நடித்துள்ள கொம்பன் படத்துக்கு இடைக்காலத் தடை விதிக்க,சென்னை உயர் நீதிமன்றத்தின் மதுரைக் கிளை மறுத்துவிட்டது. இதையடுத்து இந்தத் திரைப்படம் இன்று மாலையில் திரையரங்குகளில் வெளியாகியுள்ளது.

கார்த்தி, லக்ஷ்மி மேனன் நடித்துள்ள கொம்பன் என்ற இந்தத் திரைப்படம் ஒரு குறிப்பிட்ட ஜாதியின் பெருமிதத்தைப் பேசுவதால், அந்தப் படத்தைத் தடை செய்யவேண்டுமெனக் கோரி, புதிய தமிழகம் கட்சித் தலைவர் டாக்டர் கே. கிருஷ்ணசாமி, உயர் நீதிமன்ற மதுரை கிளையில் மனு தாக்கல் செய்திருந்தார்.

இந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம், ஓய்வு பெற்ற உயர் நீதிமன்ற நீதிபதிகள் ரவிராஜபாண்டியன், ஆறுமுகப்பெருமாள் ஆதித்தன் மற்றும் வழக்கறிஞர்கள் உள்ளிட்ட குழு பார்வையிட்டு, அறிக்கை தாக்கல் செய்ய வேண்டுமென உத்தரவிட்டனர்.

ஆனால், இந்தக் குழுவுக்காக கொம்பன் படம் திரையிடப்பட்டபோது, படத்தை நீதிபதிகள் முழுமையாகப் பார்க்க முடியாத சூழல் ஏற்பட்டது. அவர்கள் பாதியில் வெளியேறினர்.

இந்த நிலையில், நீதிபதிகள் எஸ்.தமிழ்வாணன், வி.எஸ். ரவி ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு இன்று பிற்பகல் மீண்டும் இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது.

அப்போது, தணிக்கை வாரியம் இந்தப் படத்துக்கு ஏற்கெனவே சான்றிதழ் வழங்கியுள்ளது என்றும் ஆட்சேபத்துக்குரிய காட்சிகள் நீக்கப்பட்டதாக தணிக்கை வாரியம் தெரிவித்துள்ளது என்றும் கூறிய நீதிபதிகள் இந்தப் படத்தை தடைசெய்யக் கோரும் இடைக்கால மனுவை தள்ளுபடி செய்வதாக அறிவித்தனர்.

இருந்தபோதும், பிரதான மனு மீதான விசாரணையை ஏப்ரல் 6-ம் தேதிக்கு நீதிபதிகள் ஒத்திவைத்தனர்.

இது தொடர்பாக பிபிசி தமிழோசையிடம் பேசிய புதிய தமிழகம் கட்சியின் தலைவர் கிருஷ்ணசாமி, இந்தப் படம் வன்முறைக்கு இட்டுச் செல்லும் என்று கூறினார். கொம்பன் என்ற பெயரே ஒரு ஜாதியின் பெருமிதத்தைக் கூறும் பெயர் என்று கிருஷ்ணசாமி கூறினார்.

கொம்பன் படத்தை முன்னதாக ஏப்ரல் 2ஆம் தேதி திரையிடத் திட்டமிடப்பட்டிருந்தது. அந்தத் தேதியில் வேறு திரைப்படங்களும் வெளியாவிருந்த நிலையில்தான் தங்களுக்கு பிரச்சனை ஏற்பட்டதாகச் சொல்கிறார் படத்தின் தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா.

ஆனால், வேறு ஒரு படம் வெளியாகும் தேதியில் கொம்பன் திரைப்படம் வெளியாகாமல் தடுப்பதற்காகத்தான் தான் இந்தப் பிரச்சனையை கிளப்பியதாகக் கூறுவதைக் கடுமையாக மறுக்கிறார் கிருஷ்ணசாமி.

இந்தப் படத்தில் பிரச்சனை இல்லெயென்றால், தணிக்கை வாரியம் பல இடங்களில் வெட்டு அளித்தது ஏன் என்று கேட்கும் கிருஷ்ணசாமி, தன்னைப் பற்றி இவ்வாறு கூறுவது அவதூறானது என்று தெரிவித்தார்.
« PREV
NEXT »