ஊழல்வாதிகளுக்குத் தண்டனை வழங்கப்படாவிட்டால், அரசாங்கம் முடிவை சந்திக்க நேரிடும் என்று மக்கள் விடுதலை முன்னணி எச்சரிக்கை விடுத்துள்ளது.
கம்புறுப்பிட்டிய – மாபலானே பகுதியில் கட்சி அலுவலகத்தை இன்று திறந்து வைத்து உரையாற்றிய போது, பாராளுமன்ற உறுப்பினர் சுனில் ஹந்துன்நெத்தி தற்போதைய ஆட்சி தொடர்பில் கருத்துத் தெரிவித்தார்.
மக்கள் விடுதலை முன்னணியின் அரசியல் குழு உறுப்பினர் சுனில் ஹந்துன்நெத்தி தெரிவித்ததாவது,
ராஜபக்ஸ விண்வெளியில் இருந்தார். வாழ்நாள் முழுவதும் தாமே ஜனாதிபதி என அவர் நினைத்திருந்தார். எனினும், மக்கள் தமது ஈர்ப்பு சக்தியைப் பயன்படுத்தி அவரை கீழே இறக்கினர். அந்த மக்கள் நல்லாட்சியை எதிர்பார்க்கின்றார்கள். தம்மை தோற்கடிக்க முயற்சித்த எஸ்.பி. திசாநாயக்க போன்றவர்களுக்கு அமைச்சுப் பதவிகளை தாரைவார்ப்பது, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் கடமையல்ல. மக்களும் அதனை எதிர்பார்க்கவில்லை.
கடந்த ஆட்சியின் போது ஊழல் மோசடியில் ஈடுபட்டவர்களை தாலாட்டாது அவர்களுக்கு தண்டனை விதிக்க வேண்டும் என மக்கள் எதிர்பார்க்கின்றார்கள். தற்போதைய ஆட்சியில் மத்திய வங்கியின் ஆளுனருக்கு சலுகைகள் வழங்கப்படுமானால் அதுவே தற்போதைய ஆட்சியாளர்களினதும் முடிவாக அமைந்துவிடும்.
Social Buttons